Published:Updated:

நீரஜ் சோப்ரா : 17 ஆண்டு காலத் தவத்தின் உருவமே… உனக்கு நன்றி!

Neeraj Chopra ( AP )

சில தருணங்கள் மட்டும்தான் கொண்டாடவும் வைக்கும், கண்ணீர் சிந்தவும் வைக்கும். நேற்று அப்படியொரு தருணம் அரங்கேறியிருக்கிறது. நீரஜ் சோப்ரா - ஜப்பான் தலைநகரில் வீசிய தன் ஈட்டியை ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் இறக்கி, பற்பல அற்புத உணர்வுகளைப் பாய்ச்சியிருக்கிறார்.

நீரஜ் சோப்ரா : 17 ஆண்டு காலத் தவத்தின் உருவமே… உனக்கு நன்றி!

சில தருணங்கள் மட்டும்தான் கொண்டாடவும் வைக்கும், கண்ணீர் சிந்தவும் வைக்கும். நேற்று அப்படியொரு தருணம் அரங்கேறியிருக்கிறது. நீரஜ் சோப்ரா - ஜப்பான் தலைநகரில் வீசிய தன் ஈட்டியை ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் இறக்கி, பற்பல அற்புத உணர்வுகளைப் பாய்ச்சியிருக்கிறார்.

Published:Updated:
Neeraj Chopra ( AP )

தங்கம் உறுதியானது. உற்சாகத்தில் மிதந்துகொண்டிருந்த கால்கள் கீழிறங்கும் முன்பே, விழிகள் வெளியேற்றிய கண்ணீர் தரைதொட்டிருந்தது. கைகள் உயர்கிறது, இமைகள் மூடுகிறது, அடிவயிறு உள்வங்குகிறது... உரக்கக் கத்தும்போது வெளிப்படும் உடல்மொழியை ஒவ்வொரு உறுப்பும் செய்துகொண்டிருக்க, குரல்வளை மட்டும் செயலற்றுப்போனது. வார்த்தைகளைவிட வேகமாய் மேலெழும்பிய கண்ணீர் ஓசையின் பாதையை மறித்துவிட, சத்தமே இல்லாமல் கூச்சலிட்டேன். கொண்டாடினேன். நீரஜ், நீரஜ் என்று கத்தத் துடித்தாலும் வார்த்தைகள் வரவில்லை. காரணம் நீரஜ்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நீரஜின் வெற்றி கொண்டாடவைத்ததற்கு, குதிக்கவைத்ததற்கு காரணம் சொல்லத் தேவையில்லை. காரணம், அது வெற்றி. அவ்வளவே. ஆனால், கண்ணீர் சிந்த வைத்ததற்கு அதுமட்டுமே காரணம் இல்லை. அதற்கு நீரஜோ, அந்த வெற்றியோ மட்டும் காரணம் இல்லை. வெற்றிகள் நிகழ்கால நிகழ்வுகளாக மட்டும் இருப்பதில்லை. அவை கடந்த காலத்தின் நீட்சிதானே!

*****

Past is past - சாமானியர்களுக்குப் பொருந்தாத ஒரு வாசகம். நம் வாழ்க்கையில் இருந்து நிச்சயம் கடந்த காலத்தைப் பிரித்துவிட முடியாது. அப்படிப் பிரித்துவிட முடியுமெனில், துரோகம், வைராக்கியம், விஸ்வாசம் போன்ற உணர்வுகளும் குணங்களும் இல்லாத உலகமாய் மாறிவிடும். கடந்த காலம் மறக்கப்பட்டால், சமூகப் போராட்டங்கள் இல்லாத, எதையும் ஏற்றுக்கொள்ளும் சமுதாயமாய் இது மாறிவிடும். நம்மால் அப்படி இருந்துவிட முடியாது. எதிர்காலத்தை விடவும் கடந்த காலத்தை அதிகம் நினைப்பதுதான் மனித இயல்பு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தங்கள் மகளின்/மகனின் வெற்றியில் தன் போராட்டத்தைக் கண்டிராத தாயையும், தன் தோல்விகளைக் கண்டிராத தந்தையையும் பார்த்திட முடியாது. ஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும் சிந்தப்படும் கண்ணீர் துளிகள், பலகால போராட்டத்துக்கு, தோல்விக்கு, எதிர்பார்ப்புக்குக் கிடைக்கும் ஆசுவாசம்.

*****

நீரஜின் வெற்றிக்குப் பிறகு “நிறைவேறாத என் 37 ஆண்டுகால கனவை நிறைவேற்றியதற்கு நன்றி மகனே” என்று கூறியிருக்கிறார் தடகள ஜாம்பவான் பி.டி.உஷா. “இந்த உணர்வுகள் கொடுத்ததற்கு நன்றி” என்று கூறியிருக்கிறார் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ககன் நரங்.

“நாங்கள் சிரித்துக்கொண்டும் கண்ணீர் சிந்திக்கொண்டும் இருக்கிறோம். நன்றி நீரஜ்” - இது அஞ்சு பாபி ஜார்ஜ்.

கூர்ந்து கவனியுங்கள். இவர்களின் வாழ்த்துச் செய்திகளில் ‘Congrats’ என்ற வார்த்தை இல்லை. அதில் இருக்கும் வார்த்தை ‘Thank You’.

தங்கள் தோல்விகளுக்கு, நிறைவேறாத தங்கள் ஆசைகளுக்கு, கனவுகளுக்கு உருவம் கொடுத்த அந்த இளைஞனுக்கு இந்திய ஜாம்பவான்கள் நன்றி செலுத்தியிருக்கிறார்கள். செக் குடியரசு வீரர் யாகூப் வால்டேச் தன் கடைசி த்ரோவில் நீரஜை முந்தவில்லை என்றதும் கடந்த கால நினைவுகள் கண்முன் ஓடத் தொடங்கியிருக்கும். அடுத்த ஃப்ரேமில் காட்டப்பட்ட நீரஜின் நிழலில், அவர்களின் நிறைவேறாத கனவுகள் கலராய் மாறியிருக்கும். கண்ணீர் சிந்தியிருக்கும்.

உச்சிமுகரும் தாயின் அரவணைப்பிலும், பெருமையாய்ப் பார்க்கும் தந்தையின் பார்வையிலும் வெளிப்படும் அந்த உணர்வுதான் இவர்கள் வார்த்தையில் வெளிப்பட்டதும் - நன்றி!

நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் பிரிக்கவே முடியாது.

*****

நீரஜ் சோப்ரா வெற்றி பெற்ற சில நிமிடங்கள் நான் செய்த ட்வீட்தான் இந்தக் கட்டுரையின் முதல் வரி - சில தருணங்கள் மட்டும்தான் கொண்டாடவும் வைக்கும், கண்ணீர் சிந்தவும் வைக்கும். அஞ்சு ஜார்ஜின் ட்வீட்டும் கிட்டத்தட்ட அதேதான். பல லட்சம் இந்தியர்களின் மனநிலையும் அப்படித்தான் இருந்திருக்கும். ஆனால், அதற்கான காரணங்கள் ஒன்றாக இருக்கப்போவதில்லை.

நான் ஒலிம்பிக் பதக்கத்தைத் தவறவிட்டவனோ, தங்கம் எதிர்பார்த்தபோது வெண்கலத்தை வாங்கியவனோ இல்லை. எனக்கும் நீரஜுக்கும் துளி அளவும் தொடர்பில்லை. ஆனால், எனக்கு வெளிப்பட்டதும் அதே எமோஷன்தான். அவர்களுக்கு இருந்ததுபோல் போராட்டமோ தோல்வியோ என் கண்ணீரின் காரணம் இல்லை. ஒரு சாமானியனின், ஒரு விளையாட்டு ரசிகன் கொண்ட எதிர்பார்ப்பின், நிறைவேறா ஆசையின் விளைவு.

Neeraj Chopra
Neeraj Chopra
AP

2004. செய்தித்தாள்களின் கடைசி இரு பக்கங்களே எனக்குத் தெரிந்த உலகம். அதில் வண்ணங்கள் அதிகமாகும்போது, கொண்டாட்டமாக மாறும்போது, அது நமக்கும் பற்றிக்கொள்ளும். ‘ஒலிம்பிக் திருவிழா’ என ஒவ்வொரு நியூஸ் பேப்பரும் கொண்டாட, ஏதென்ஸ் ஒலிம்பிக்ஸ் அறிமுகம் ஆனது. கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப் பிறகு நான் அறிந்த பெரிய விளையாட்டுத் தொடர். முந்தைய ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பைக்குச் செய்ததுபோல் ஒரு ஆல்பம் தயாரிக்கத் தொடங்கினேன்.

செய்தித்தாள்களின் படங்களைக் கிழித்து, லாங் சைஸ் பவுண்டட் அன்ரூல்ட் நோட்டின் பக்கங்களில் ஒட்டத் தொடங்கினேன். உலகக் கோப்பையின்போது இந்தியர்கள் இடம்பெறும் பக்கத்தில் ஸ்கை புளூ ஸ்கெட்ச் கொண்டு இந்தியா என்று எழுதிவைத்தேன். அதையே ஒலிம்பிக்கிலும் செய்ய நினைத்தேன். தங்கத்துக்கு ஆரஞ்ச் கலர், வெண்கலத்துக்கு பிரவுன் கலர் என்று உறுதியானது. வெள்ளிக்கு… என்ன செய்வதென்று தெரியாமல் கறுப்பை முடிவுசெய்துகொண்டேன். 160 பக்கங்கள் கொண்ட நோட்டில் ஒரு முறை மட்டுமே அந்த ஸ்கெட்சைப் பயன்படுத்த முடிந்தது. ஒரேயொரு வெள்ளி. ஆரஞ்சுக்கு வேலை வரவேயில்லை.

Neeraj Chopra
Neeraj Chopra
AP

2008... ஒன்பதாம் வகுப்புக்கு போயாகிவிட்டது. சீனாவின் பிரம்மாண்ட தொடக்கவிழாவில் அதிசயித்து நின்றவன், அந்தத் தங்கத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தேன். அதிர்ஷ்டம் என்ற வார்த்தையில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், அப்போது நிகழ்ந்ததை என் துருதிருஷ்டமாகவே இன்றும் நினைத்துக்கொண்டிருக்கிறேன். பள்ளி அளவிலான கால்பந்து போட்டிக்காக 3 நாள்கள் ஹாஸ்டலில் தங்கவேண்டிய சூழ்நிலை. போட்டிக்குக் கிளம்ப அதிகாலை 5.30 மணிக்கு பள்ளிப் பேருந்தில் ஏறக் காத்துக்கொண்டிருக்கிறோம். ரூம்களுக்கு போடப்படும் செய்தித்தாள்கள் வந்திருந்தன.

ஓடிப்போய் பேப்பரை எடுத்து கடைசிப் பக்கம் திருப்ப எத்தணித்தபோது, முதல் பக்கமே மாபெரும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது. கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த தங்கத்தை உயர்த்திக் காட்டும் அபினவ் பிந்த்ராவின் படம். தங்கம்... தங்கம்! இந்தியாவுக்குத் தங்கம். ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் வெல்லும் முதல் தங்கம். கால்பந்து ஆடப்போகவிருந்த எல்லோரும் கத்திக் கூச்சிலடத் தொடங்கினோம். கொண்டாடினோம். கொண்டாட்டங்களெல்லாம் முடிந்து, போட்டிக்குச் செல்ல பேருந்தில் ஏறியபோது இதயத்தின் ஓரத்தில் ஓர் ஏமாற்றம் - ‘அந்த சரித்திர நிகழ்வை நேரலையில் பார்க்க முடியாமல் போய்விட்டதே’.

Neeraj Chopra
Neeraj Chopra
AP

இந்தியர் ஒருவர் தங்கம் வாங்கும் நிகழ்வை நேராகப் பார்த்துவிடவேண்டும் என்ற ஆசை கொஞ்சம் கூட ஓயவேயில்லை. 2012 ஒலிம்பிக்கில் விஜயகுமார் வெள்ளி வாங்கியபோது சந்தோஷமாக இருந்தது. இருந்தாலும் தங்கம் வாங்கியிருக்கலாமோ என்ற ஏக்கம் ஏற்படாமல் இல்லை. அந்த ஏக்கத்தையெல்லாம் சுஷில் குமார் தீர்த்துவிடுவார் என்று எதிர்பார்த்திருந்தேன். செமி ஃபைனலில் எங்கு உட்கார்ந்திருந்தேனோ அதே இடத்தில் உட்கார்ந்து, அதைப் போலவே டேபிளில் கால் நீட்டி, அப்போது வைத்திருந்த கிளாசை மீண்டும் கைகளில் வைத்து அமர்ந்திருந்தேன். சென்டிமென்ட்கள் வேலை செய்யவில்லை. மீண்டும் வெள்ளி.

ரியோவில் கரோலினா மரினுக்கு எதிராக சிந்து ஆடியபோதும், டோக்கியோவில் மல்யுத்த ஃபைனலில் ரவி குமார் தஹியா ஆடியபோதும் அதேதான். அந்தத் தங்கம் 13 ஆண்டுகளாகக் கிடைக்கவேயில்லை. என்னால் 17 ஆண்டுகளாக அதைப் பார்க்கவே முடியவில்லை.

*****

அட தங்கத்துக்கும் வெள்ளிக்கும் அப்படியென்ன வித்யாசம் இருந்துவிடப்போகிறது. ஏன் அதற்காக இப்படியொரு தவம்! பீஜிங் ஒலிம்பிக்வரை பதக்கத்தின் மதிப்பு ஒரு காரணமாகத்தான் இருந்தது. ஆனால், அதுமட்டுமில்லை காரணம்.

போடியத்தில் நிற்பவர்களைப் பார்த்து பார்த்து வெள்ளி மீது ஒரு வெறுப்பே ஏற்பட்டுவிட்டது. தங்கம் வென்றவர் உலகத்தையே வென்ற மனநிலையில் இருப்பார். வெண்கலம் வென்றவரும் ஒரு போட்டியில் வென்றுவிட்டுத்தான் வந்திருப்பார். கூட ‘எப்படியோ போடியம் ஏறிவிட்டோமே’ என்ற திருப்தி இருக்கும். ஆனால், அந்த இன்னொருவர்... இறுதிப் போட்டியில் தோற்றுப்போன சில நிமிடங்களில் போடியம் ஏறவேண்டும். சுஷில், சிந்து, ரவி… போடியத்தில் யாருடைய முகத்திலும் முழுமையான சந்தோஷத்தைப் பார்க்க முடிந்ததில்லை. நான் எதிர்பார்த்ததெல்லாம் போடியம் ஏறும் அந்த இந்தியர் மற்ற இருவருக்கும் இடையில் நிற்கவேண்டும். எந்தவொரு ஏமாற்றமும், சங்கடமும் இல்லாத முழு சந்தோஷத்தையும் அவர்களிடத்தில் பார்க்கவேண்டும். அவ்வளவே!

*****

Neeraj Chopra
Neeraj Chopra
AP

ஆல்பம் செய்யத் தொடங்கி, ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்தவன் இப்போது ஒலிம்பிக் பற்றி எழுதவும் பேசவும் தொடங்கியிருக்கிறேன். அதுவே தொழிலாகிப்போக, நாள் முழுதும் ஒலிம்பிக்ஸ்தான். பங்கேற்ற 124 அத்லெட்களைப் பற்றியும் எவ்வளவோ படித்தோம், தேடினோம். இவர் வெல்வார், அவர் வெல்வார் என்று எழுதினோம். நம்பினோம். எதிர்பார்ப்புகள் எதுவும் நிகழவில்லை. 14 நாள்கள் கடந்துவிட்டது. பங்கேற்கவிருந்த 124 அத்லெட்களில், 123 பேர் விளையாடி முடித்துவிட்டார்கள். இந்த முறையும் அது நிராசையாகவே போகப்போகிறதோ என்று நினைத்துக்கொண்டிருக்கையில்தான் இந்த சரித்திர நிகழ்வை அரங்கேற்றினார் நீரஜ்.

இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வதை. போடியத்தின் நடுவே நிற்பதை, முழுமையான சந்தோஷத்தோடு தன் மெடலை உயர்த்துவதை நேரலையில் பார்த்துவிட்டேன். என் 17 ஆண்டுகால ஏக்கம்… அதுதான் அந்தக் கண்ணீர் - நன்றி நீரஜ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism