Published:Updated:

நூற்றாண்டு கால கனவை நிறைவேற்றுமா நீரஜ் சோப்ராவின் ஈட்டி?

நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா ( David J. Phillip )

இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற இருக்கும் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் மோத இருக்கிறார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா. நூறாண்டுகளாக ஒலிம்பிக்கில் தடகளப் போட்டிகளில் இந்தியா பதக்கம் வென்றதேயில்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தீர்க்கமான மனதோடு துல்லியமாக குறிபார்த்து ஈட்டியை வீசும், இதிகாசங்களில் உலாவும் வேடன் கதாபாத்திரங்களுக்கு ஒப்பானவர் நீரஜ் சோப்ரா. ஆனால், இவர் மிருகங்களை வேட்டையாடுவதில்லை. நாட்டிற்காக தங்கப்பதக்கங்களை வேட்டையாடி கொண்டிருப்பவர். ஆம், காற்றை கிழித்துக் கொண்டு பறக்கும் இவரது ஈட்டிகள் குறிவைப்பதெல்லாம் தங்கப்பதக்கங்களை மட்டுமே. டோக்கியோ ஒலிம்பிக்கிலும் குறிதவறாமல் தங்கம் அடிக்க இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றிருக்கிறார்.

23 வயதாகும் நீரஜ் சோப்ரா ஹரியானாவின் பானிபட்டில் பிறந்தவர். விளையாட்டு போட்டிகளுக்கான தலைநகரில் பிறந்துவிட்டு விளையாட்டுகளின் மீது ஆர்வமில்லாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். ஒரு சாமானிய ஹரியானக்காரரை போல நீரஜ் சோப்ராவும் விளையாட்டுகளில் ஆர்வத்தோடே இருந்திருக்கிறார். சிறு வயதிலேயே அதிக எடையோடு இருந்ததால் உடலை சீராக்கவும் தொடர்ந்து விளையாடியிருக்கிறார். ஹரியானாவின் ஒவ்வொரு வீதியுமே விளையாட்டு அருங்காட்சியகம் போலவே காட்சியளிக்கும். சில வீதிகள் கபடி போட்டிகளுக்கு பெயர் போனதாக இருக்கும். சில பகுதிகளில் மல்யுத்தம் பிரதான விளையாட்டாக இருக்கும். நீரஜ் சோப்ரா வசிக்கும் பகுதியில் ஈட்டி எறிதல் ஃபேமஸ். ஜெய் வீர் எனும் ஈட்டி எறியும் வீரரை பார்த்தே ஆர்வமாகி ஈட்டி எறிதலில் ஆர்வம் காட்டியிருக்கிறார் நீரஜ் சோப்ரா.

2014-ல் இருந்து முழுநேர பயிற்சியில் ஈடுபடத் தொடங்கிய நீரஜுக்கு, தன் பெயரை தலைப்பு செய்திகளில் இடம்பெற வைக்க இரண்டு ஆண்டுகளே போதுமானதாக இருந்தது. 2016-ல் உலகளவிலான 20 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் அவர் மீது அத்தனை பேரின் கவனமும் திரும்பியது.

2017, 2018-ல் நீரஜ் சோப்ராவின் வளர்ச்சி உச்சத்தை எட்டியது. இவ்வளவு சிறிய வயதில் இப்படிப்பட்ட சாதனைகளை செய்ய முடியுமா? என ஒட்டுமொத்த இந்தியாவுமே ஆச்சர்யப்பட்டது.

நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா
David J. Phillip
ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய போட்டி, காமென்வெல்த் போட்டி என தொடர்ந்து மூன்று பெரிய தொடர்களில் தங்கத்தை வென்றார். ஆசிய போட்டியில் இந்தியாவின் தேசியக்கொடியை ஏந்தி செல்லும் கௌரவமும் அந்த 20 வயது இளைஞருக்கு வழங்கப்பட்டது.

ஜுனியர், சீனியர் என அத்தனை லெவலிலும் சாதனை மேல் சாதனை செய்து தன்னுடைய திறமையை நிரூபித்துவிட்டார்.

இன்னும் அவர் வெல்லாதது ஒலிம்பிக் பதக்கம் மட்டுமே எனும் சூழல் இருந்தது. இந்நிலையில்தான் முழங்கையில் மிகப்பெரிய காயம் ஏற்பட்டு ஒரு வருடம் ஓய்விலிருக்க வேண்டிய நிலை உண்டானது.

காயத்திற்கு பிறகு அவருடைய வீச்சு திறன் முன்பை போன்றில்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனாலும், அவரால் முடிந்தவரை சிறப்பாக செயல்பட முயன்றார். தன்னுடைய டெக்னிக்கில் மிகப்பெரிய மாற்றங்களை உண்டாக்க முடிவு செய்தார். இத்தனை வருடமாக பயன்படுத்தி வந்த ஈட்டிக்கு பதிலாக வேறொரு புதிய மாடல் ஈட்டியை பயன்படுத்தத் தொடங்கினார்.

ஒலிம்பிக்கிற்கு சில மாதங்களே இருக்கும்போது இப்படியான மாற்றங்களையெல்லாம் யாருமே செய்யமாட்டார்கள். நீரஜ் துணிச்சலாக அப்படி செய்தார்.

கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவர் சோர்ந்துவிடவில்லை. இலக்கை நோக்கி கூர்மையாக பாயும் ஈட்டியை போலவே அவரின் முயற்சிகள் அமைந்தது.

நீரஜ் சோப்ராவின் கரியர் பெஸ்ட் 88.06 மீ. இது ஆசிய போட்டியில் அவர் செய்த சாதனை. மார்ச் மாதத்தில் இந்த சாதனையை புதிய ஈட்டியை வைத்து அவரே முறியடித்தார். க்ராண்ட் ப்ரீ போட்டி ஒன்றில் 88.07 மீட்டருக்கு வீசி மீண்டும் ஃபார்முக்கு வந்தார். நீரஜ் ஈட்டியை மாற்றிய போது விமர்சித்தவர்கள் கூட அவரை இப்போது விதந்தோத தொடங்கிவிட்டனர். ஒலிம்பிக்ஸில் 90 மீட்டருக்கு மேல் வீசினால்தான் பதக்க வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்ற நிலையில் அதற்கும் முழுமையாக தயாராகி ஈட்டியை பறக்கவிடுகிறா நீரஜ் சோப்ரா. இன்றைய தகுதிச்சுற்றில் 86.65மீட்டர் தூரம் அவர் ஈட்டி பறந்திருக்கிறது. இறுதிப்போட்டியில் 90 மீட்டர் தாண்டும் என எதிர்பார்ப்போம்.

ஒலிம்பிக்கில் தடகளத்தில் இந்தியா பெரியளவில் சாதித்ததே இல்லை. நூற்றாண்டு கடந்த ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் தடகளத்தில் இந்தியர்கள் ஒரு பதக்கம் கூட வென்றதில்லை. பெரும் திறமை கொண்ட எத்தனையோ வீரர்/வீராங்கனைகள் முயன்றும் இந்தியாவிற்கு ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை என்பது வேதனையே. ஆனாலும், இந்திய ரசிகர்கள் சோர்ந்துவிடவில்லை. மில்கா சிங், பி.டி.உஷா மீது வைத்திருந்த அதே நம்பிக்கையை இப்போது நீரஜ் சோப்ரா மீதும் வைத்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீரஜ் சோப்ரா கலந்துகொள்ளும் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு