Published:Updated:

மீராவின் பெயருக்கு அருகே DID NOT FINISH! மீராபாய் சானு பயோபிக் : பாகம் - 6

Mirabai Chanu in Rio

மீராபாய் சானுவின் பயோபிக் எடுக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்ற புனைவு கலந்த தொடர். இன்று - ரியோ ஒலிம்பிக்கில் மீரா பங்கேற்ற கதை!

மீராவின் பெயருக்கு அருகே DID NOT FINISH! மீராபாய் சானு பயோபிக் : பாகம் - 6

மீராபாய் சானுவின் பயோபிக் எடுக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்ற புனைவு கலந்த தொடர். இன்று - ரியோ ஒலிம்பிக்கில் மீரா பங்கேற்ற கதை!

Published:Updated:
Mirabai Chanu in Rio

2014-ம் ஆண்டு சுமார் 170 கிலோ வரை தூக்கிக்கொண்டிருந்த மீராபாய் சானு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் அசுர முன்னேற்றம் காண்கிறாள். தன்னை கேலி செய்பவர்களைக் கண்டுகொள்வதில்லை. வெற்றிகள் பற்றி கவலைப்படவில்லை. தன்னிடம் முன்னேற்றம் இருக்கிறதா என்பது மட்டுமே அவரின் கவலை. ஒவ்வொரு நாளும் மைதானத்திலும் பயிற்சிலும் தன் உயிரைக் கொடுக்கிறார். வீட்டுக்கு போன் பேசும் நேரம் குறைந்துவிட்டது. ஓய்வு நேரம் குறைந்துவிட்டது. வீட்டுக்குப் போகவேண்டும் என்ற எண்ணம் அவரிடம் துளியும் இல்லை.

ஒருநாள் மீரா பிராக்டீஸ் செய்துகொண்டிருக்கும்போது அவளருகில் வருகிறார் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர்.

கோச்: “என்ன மீரா… வீட்டுக்கு போன் பேசி எத்தனை நாளாகுது?”

மீரா (மேலே பார்த்து யோசித்துக்கொண்டே): “ஒரு இருவத்தஞ்சு, இருவத்தாறு…”

கோச்: “ஒரு மாசமா என் புள்ள போனே பேசலைனு உங்கம்மா பொலம்பறாங்க”

லேசாக சிரிக்கிறாள் மீரா.

கோச்: “இன்னைக்கு செஷன் முடிஞ்சதும் போய் பேசிடு என்ன”

“பேசிடலாம் கோச்” என்று சொல்லிக்கொண்டே வெயிட்டை நோக்கி நடக்கிறாள்.

CUT

ரூமுக்குள் நுழைந்ததும் கையில் இருந்த டவலை தூக்கி வீசிவிட்டு பெட்டிக்குள் இருந்து செல்போனை எடுக்கிறாள் மீரா. அன்லாக் செய்ததும் 117 Missed Calls, 64 மெசேஜ் என்று காட்டுகிறது. ஹோம் என்று பதிவு செய்யப்பட்டிருக்கும் நம்பரை அழைக்கிறாள்.

செல்போன் குரல்: “மீரா... எப்டிமா இருக்க”

மீரா: “நல்லாருக்கேன்பா. நீங்க எப்படி இருக்கீங்க”

மீராவின் அப்பா: “என்னம்மா இத்தனை நாளா போனே பண்ணல. நாங்க பண்ணாலும் எடுக்க மாட்டேன்ற”

தூரத்தில் மீராவின் அம்மா தாம்பி கத்தும் குரல் செல்போன் வழியாகக் கேட்கிறது.

தாம்பி: “என்ன மீராவா... இங்க கொடுங்க முதல்ல”

மீரா (போனில் தந்தையிடம்): “சாரிப்பா. போனை எடுத்தா அதுல டைம் போயிடும்னு அதை…”

சொல்லிக்கொண்டிருக்கும்போதே போன் பிடுங்கப்படும் சத்தம் கேட்கிறது

தாம்பி: “ஹே மீரா”

மீரா: “அம்மா... எப்டிமா இருக்க”

தாம்பி: “நான்லாம் நல்லாத்தான் இருக்க. நீ எப்டிடா இருக்க. ஒரு வாட்டி போன் பண்ணக்கூடாதா. பயமா இருக்குல்ல”

மீரா: “சாரிம்மா... பிராக்டீஸ்!”

சொல்லிக்கொண்டிருக்கும்போதே குறுக்கிடுகிறார் தாம்பி

தாம்பி: “பிராக்டீஸுக்கு நடுவுல ரெண்டு நிமிஷம் பேச நேரம் இருக்காதா தங்கம். உன் ஃபிரெண்டுகளுக்கும் கோச்சுக்குமே ஒவ்வொரு முறையும் போன் பண்ணி கேக்கவேண்டியதா இருக்கு. இப்பக்கூட கோச் சொன்னதாலதான கூப்பிடுற”

மீரா: “அம்மா சாரிம்மா. அந்த போனை எடுத்தா அஞ்சு பத்து நிமிஷாவது வீணாயிடுது. அதைக்கூட வீணாக்கக்கூடாதுனுதான் எடுக்கல!”

தாம்பி: “எங்ககூட பேசணும்னுலாம் தோணலையா. ஊருக்கு வந்தும் 3 மாசம் ஆகுது. ஊருக்கு வரணும், எங்களையெல்லாம் பாக்கணும்னு தோணலயா உனக்கு”

மீரா எதுவும் பேசவில்லை. ஒரு பெருமூச்சு விருகிறாள். சில நொடிகள் கழித்துப் பேசத் தொடங்குகிறாள்.

மீரா: “உண்மைய சொல்லட்டுமாம்மா. இப்போ எனக்கு வீட்டுக்கு வரணும்னுலாம் தோணவே இல்ல. எனக்கு ரியோ போகணும். அங்க போகணும்ன்றது மட்டும்தான் மண்டைக்குள்ள ஓடிட்டு இருக்கு. இந்தியாவுக்காக அந்த ஒலிம்பிக்ல பார்ட்டிசிபேட் பண்ணனும். மெடல் ஜெயிக்கணும். அந்த மெடலைக் கொண்டாந்து உன் கழுத்துல போட்டுட்டு உன் மடில படுத்துக் கிடக்கணும்”

தாம்பியால் எதுவும் பேச முடியவில்லை. வார்த்தைகள் இல்லாமல் தவிக்கிறார்.

தாம்பி: “ஜெயிச்சிட்டே வாடி தங்கம்”

CUT

2015 காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் 181 கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கம் வெல்கிறார். அடுத்த ஆறே மாதங்களில் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டு 190 கிலோ மார்க்கைத் தொட்டுவிடுகிறார். ரியோ ஒலிம்பிக் தொடருக்குத் தேர்வாகிவிட்ட பிறகு மிகவும் கவனமாகவே பயிற்சியில் ஈடுபடுகிறார் மீரா. நாள்கள் நெருங்கிக்கொண்டிருக்க கொஞ்சம் பதற்றம் தொற்றிக்கொள்கிறது.

கோச்: “என்ன மீரா பயமா இருக்கா?”

ஆமாம் என்று தலையாட்டுகிறாள் மீரா. அவள் முகம் ஏதோ குற்றம் செய்தவள் போல இருக்கிறது.

கோச்: “பயப்படலாம் தப்பில்ல. எந்தவொரு சாம்பியனுக்கும் பயம் இருக்கும். ஆனா, அதை மேட்டுக்குக் கீழ விட்டிட்டுப் போகத் தெரியணும். மனசுல இருக்க உடம்பை எதுவும் பண்ணாம பாத்துக்கணும். அவ்ளோதான்”

அவரைப் பார்த்து புன்னகைக்கிறாள் மீரா. அப்போது ஒரு இளைஞன் வந்து அருகில் நிற்கிறான். விக்ரம் ரத்தோருக்கு வணக்கம் வைக்கிறான்.

Mirabai Chanu
Mirabai Chanu

கோச்: “சொல்லு பிரமோத்”

பிரமோத்: “சார் மீராவோட வீட்டில இருந்து வந்திருக்காங்க. ரிசப்ஷன்ல வெயிட் பண்ணிட்டு இருக்காங்க”

அதிர்ச்சியாகப் பார்க்கிறாள் மீரா

மீரா: “என்ன எங்க வீட்ல இருந்தா!”

கோச்: “போ போ. ரெண்டு வாரமா பிளான் பண்ணி ஒரு வழியா வந்துட்டாங்க. சீக்கிரம் போ”

மீரா: “உங்களுக்குத் தெரியுமா”

கோச் சிரிக்க, திரும்ப சிரித்துவிட்டு ஓடுகிறாள் மீரா.

CUT

ரிசப்ஷனுக்கு ஓடிய மீரா தன் அம்மா, அப்பா, சகோதர சகோதரிகள் அனைவரையும் பார்த்ததும் கண்ணீர் விடுகிறாள். ஓடிச் சென்று தன் அம்மாவைக் கட்டியனைக்கிறாள்.

தாம்பி: “என்ன ரியோதான் முக்கியம்னு சொன்னவ, இப்போ இப்டி அழுவற”

கண்ணீரைத் துடைத்துக்கொண்டே சிரிக்கிறாள் மீரா.

அவர்களை அழைத்துக்கொண்டு கிரவுண்ட்டுக்குச் செல்கிறாள். நிழலான ஒரு இடமாக அனைவரும் அமர்கிறார்கள். எல்லோரும் கலகலவெனப் பேச, மீராவின் முகம் புன்னகையால் மலர்ந்திருக்கிறது.

தாம்பி: “இந்த சிரிப்பைப் பாக்கணும்னுதான் உன் கோச் எங்களை வந்தே ஆகணும்னு சொல்லிட்டாரு”

மீரா அதிர்ச்சியாகப் பார்க்கிறாள்.

மீரா: “சார் சொன்னாரா?”

மீராவின் அப்பா: “ஆமா... இப்டி ஒரு மனுஷன் உனக்கு கோச்சா கிடைச்சது பெரிய விஷயம்மா"

மீரா சிரிக்கிறாள். உடனே செல்லமாக…

மீரா: “அப்ப நீங்களா வரல. அவரு சொல்லித்தான் வந்திருக்கீங்க!”

மீராவைத் தோளில் தட்டிவிட்டு சிரிக்கிறார் தாம்பி.

உள்ளே மெஸ்ஸுக்கு சென்று சாப்பிடுகிறார்கள். சில நேரம் பேசுகிறார்கள். விக்ரம் ரத்தோரிடம் சில நிமிடங்கள் பேசுகிறார்கள். கிளம்பத் தயாராகி வெளியே வந்துகொண்டிருக்கிறார்கள். மீராவின் கையைப் பிடித்து நிறுத்துகிறார்.

பையில் இருந்து ஒரு சிறு கவரை எடுத்து மீராவின் கையில் கொடுக்கிறார். அதைப் பிரித்துப் பார்த்ததும் அதிர்ச்சியாகிறாள் மீரா. ஒலிம்பிக் வளையம் போன்ற தங்கத் தோடுகள். பார்த்ததும் மீராவின் கண்கள் குளமாகின்றன.

தாம்பி: “ஒலிம்பிக்கும் தங்கமும் உன்கூடவே இருக்கும்டி என் தங்கமே!”

மீரா தாம்பியைக் கட்டிப்பிடித்து அழுகிறாள்.

மீரா: “காசு ஏதுமா”

தாம்பி: “என்னோட தங்க நகைகளைத்தான் மாத்திட்டேன்”

மீரா: “உனக்கு என்னமா பண்ணுவ”

தாம்பி: “நீ ஒலிம்பிக்ல ஜெயிச்சிட்டு வர்றத உருக்கு நகையாக்கிக்கிறேன்”

மீரா சிரித்துக்கொண்டே தன் அம்மாவைக் கட்டியணைக்கிறாள்.

CUT

ஆகஸ்ட் 7, 2016. ரியோ. பளுதூக்குதல் மேடை தயாராக இருக்கிறது. பெண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவு போட்டி தொடங்கவிருக்கிறது. தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்னாம், அமெரிக்கா என பல்வேறு நாட்டு வீராங்கனைகள் சரித்திரம் படைக்கக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஸ்னாட்ச் பிரிவு தொடங்குகிறது. 68 கிலோவிலிருந்து ஆரம்பிக்கிறது போட்டி.

விக்ரம் ரத்தோர்: “ஏசியன் சாம்பியன்ஷிப்ல தூக்கினத தூக்கினாலே மெடல் ஜெயிச்சடலாம். அதனால, கொஞ்சம் கூட பதற்றமே படாத சரியா”

மீரா: “எப்போமே இம்ப்ரூவ்மென்ட் முக்கியம்ல கோச்”

விக்ரம் ரத்தோர் சிரிக்கிறார். அவர் தட்டிக்கொடுக்க, தன் வாய்ப்பைத் தூக்க நகர்கிறார் மீரா.

ஸ்னாட்ச் பிரிவின் முதல் வாய்ப்பு. 82 கிலோ. ஆசிய சாம்பியன்ஷிப்பில் 84 கிலோ தூக்கியிருந்தார் மீரா. அதனால், நம்பிக்கையோடு மேடை ஏறினார். பெருமூச்சு விட்டு வெயிட்டில் கை வைக்கிறார். குனிந்து வெயிட்டைத் தூக்கி நிமிர்ந்தவரால், முழுமையாக எழ முடியவில்லை. வெயிட்டைக் கீழே விட்டுவிடுகிறார். முதல் வாய்ப்பு வீணாகிறது. மிகவும் கவலையோடு கீழே இறங்குகிறார்.

விக்ரம் ரத்தோர்: “ஒண்ணும் இல்ல... இதான முதல் சான்ஸ். பாத்துக்கலாம். ஃப்ரீயா இரு!”

அடுத்த ஐந்தாவது நிமிடம் மீண்டும் மேடை ஏறுகிறார் மீரா. இம்முறை பிசகவில்லை. அலேக்காக 82 கிலோவையும் தூக்கி நிற்கிறார். சக்சஸ்.

அடுத்தது எடை 83 கிலோவாக கூட்டப்படுகிறது. மீராவுக்கு இருப்பதோ ஒரேயொரு வாய்ப்பு.

விக்ரம் ரத்தோர்: “83 போறியா”

Mirabai Chanu
Mirabai Chanu

மீரா: “இல்ல கோச்... 84 போலாம்”

எடை 84 கிலோவாக கூட்டப்பட்டதும் செல்கிறார் மீரா. மிகவும் நம்பிக்கையோடு செல்கிறார். ஆனால், அவரால் தூக்க முடியவில்லை. பாதி எழும்போதே எடையைக் கீழே விட்டுவிடுகிறார். சோகமாக கீழே இறங்குபவரைத் தட்டிக் கொடுக்கிறார் கோச்.

மீரா: “சாரி கோச்”

விக்ரம் ரத்தோர்: “ஹேய். ஒண்ணும் இல்ல. கிளீன் & ஜெர்க்ல கலக்குவ பாரு”

கிளீன் & ஜெர்க் போட்டி பிரிவு தொடங்குகிறது. 92 கிலோவில் தொடங்குகிறது. மீராவின் கைகள், தோள்பட்டைகளுக்கு மசாஜ் செய்துகொண்டிருக்கிறார்.

விக்ரம் ரத்தோர்: “104 ஸ்டார்ட் பண்ணலாம் மீரா”

மீரா: “ஓகே சார்”

விக்ரம் ரத்தோர்: “கூலா இரு. நீ ஏற்கெனவே தூக்கின வெயிட்தான். சரியா”

தலையசைக்கிறாள் மீரா.

104 கிலோவாக வெயிட் கூட்டப்பட்டவுடன் மேடை ஏறுகிறாள். அவள் முகத்தில் சிறு பதற்றத்தை உணர முடிகிறது. வெயிட்டைத் எடுத்துத் தன் தோள்களின்மீது வைத்து நிற்கிறார். அடுத்த கட்டமாக தலைக்கு மேலே தூக்க முயற்சி செய்யும்போது அவரால் முடியவில்லை. வெயிட்டை கீழே போட்டுவிடுகிறார். கீழே இறங்கும் மீராவிடம் பதற்றம் அதிகமாகத் தெரிகிறது.

விக்ரம் ரத்தோர்: “உன் இடது கால் கொஞ்சம் நகர்ந்துடுச்சு. அதுலதான் மொத்த பேலன்ஸும் மிஸ் ஆகிடுச்சு”

கேட்டுக்கொண்டே உள்ளே செல்கிறாள் மீரா. வேறு யாரும் 104 கிலோ தூக்கவில்லை என்றும், இரண்டாம் வாய்ப்பு முயற்சி செய்வதாக இருந்தால் உடனே செல்லுமாறும் மீராவிடம் சொல்லப்படுகிறது. இருவரும் கணக்குப் போடத் தொடங்குகிறார்கள்.

ஸ்னாட்சில் 92 கிலோ தூக்கிய தாய்லாந்து வீராங்கனை சோபிதா நிச்சயம் பதக்கம் வென்றுவிடுவார். அதுபோக, இன்னும் 4 பேர் 105+ தூக்க காத்திருக்கிறார்கள். அதில், ஸ்னாட்சில் 85 கிலோ தூக்கிய இருவர் 105+ தூக்க தயாராக இருப்பதால், தான் 104 கிலோ தூக்குவது பயனற்றது என்பதை உணர்கிறார் மீரா. 104 கிலோவை தூக்க முடியாவிட்டாலும், அடுத்த வாய்ப்பில் இன்னும் அதிக எடை தூக்க முடிவு செய்கிறார்.

ஜப்பானின் ஹிரோமி முதல் வாய்ப்பிலேயே 105 கிலோவைத் தூக்கிவிட்டார். அவரின் மொத்த எடை 186 ஆகிவிட்டது. அவர்தான் வெண்கலத்துக்கான போட்டி. அடுத்து 106 அல்லது 107 தூக்கலாம். எப்படியிருந்தாலும், அவரைவிட அதிகமாகத் தூக்க 105 போதாது. 106 செல்லலாம் என்று முடிவெடுக்கிறார்கள் மீராவும் கோச்சும். ஆனால், எதிர்பார்த்தது நடக்கவில்லை. கடைசி 2 வாய்ப்புகளிலும் 106 கிலோ தூக்க முயற்சி செய்து தவறுகிறார் மீரா. ஒலிம்பிக் ஸ்கோர் கார்டில் அவர் பெயருக்கு அருகே DID NOT FINISH என்று வருகிறது. பொங்கும் கண்ணீரை அடக்கிக்கொண்டு கீழே இறங்குகிறாள் மீரா.

அடுத்த எபிசோட் - மீராபாய் சானு ஒலிம்பிக் சாம்பியனாக மாறிய கதை!