Published:Updated:

பெரு வெற்றியோடு தொடங்கிய மேரி கோம்: ஒவ்வொரு குத்தும் எதிராளிக்கு அல்ல... இந்தச் சமூகத்துக்கு!

மேரி கோம் ( Frank Franklin II )

திருமணத்திற்கு பிறகுதான் வரிசையாக உலக சாம்பியன் டைட்டில்களை வென்று அசத்தினார் மேரிகோம். 2005, 2006, 2008, 2010 உலக சாம்பியன்ஷிப் டைட்டில்களை வென்று இந்திய குத்துச்சண்டையின் முகமாக மாறத் தொடங்கினார்.

பெரு வெற்றியோடு தொடங்கிய மேரி கோம்: ஒவ்வொரு குத்தும் எதிராளிக்கு அல்ல... இந்தச் சமூகத்துக்கு!

திருமணத்திற்கு பிறகுதான் வரிசையாக உலக சாம்பியன் டைட்டில்களை வென்று அசத்தினார் மேரிகோம். 2005, 2006, 2008, 2010 உலக சாம்பியன்ஷிப் டைட்டில்களை வென்று இந்திய குத்துச்சண்டையின் முகமாக மாறத் தொடங்கினார்.

Published:Updated:
மேரி கோம் ( Frank Franklin II )

பெண்களுக்கென்று இந்த சமூகம் வகுத்து வைத்திருக்கும் அத்தனை இலக்கணங்களையும் உடைத்தவர், உடைத்துக்கொண்டிருப்பவர் மேரி கோம். இலக்கணங்கள் உடைக்கப்படும்போதே வரலாறுகள் பிறக்கின்றன. மேரி கோம் இந்திய சமூகத்தின் இலக்கணங்களை உடைத்த வரலாற்று நாயகி!

மேரி கோம் எதிர்த்து ஆடுபவர்கள் மீது மட்டுமல்ல, தன்னை கீழே தள்ளி வீட்டுக்குள் முடக்க நினைத்த சமூகத்தின் மீது நாக் அவுட் பன்ச்சுகளை கொடுத்துக்கொண்டேயிருக்கிறார். 38 வயதில் டோக்கியோ ஒலிம்பிக்கிலும் தொடர்கிறது மேரி கோமின் பதக்க வேட்கை!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2012-ல்தான் ஒலிம்பிக்கிலேயே பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டி அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனால், 90-களின் கடைசியிலிருந்தே கையில் கிளவுஸை மாட்டிக் கொண்டு குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் மேரி கோம். அவருக்கு முன்னுதாரணமாக வீராங்கனைகள் என்று பெரிதாக யாருமே இல்லை.

நாம் எந்த இலக்கை நோக்கி முன்னேறுகிறோம் என்பதே தெரியாத மிரட்சிமிக்க பயணத்தையே மேற்கொண்டிருந்தார் மேரி கோம். யாரையும் பின் தொடர்ந்து சென்று கரை சேர வழியில்லை. தானாகவே பாதைகளை போட்டுக் கொண்டு ஒவ்வொரு மைல்கல்லிலும் திடீர் ஆச்சர்யங்களையும், தீடீர் அதிர்ச்சிகளையும் எதிர்கொண்டார். சொல்லப்போனால் இந்த அதிர்ச்சிகளும் ஆச்சர்யங்களும்தான் மேரிகோமின் வழித்துணைகளாக கூடவே பயணம் செய்து அவருக்கு ஊக்கமளித்தன.

2004-லிலேயே அவருக்கு திருமணம் முடிந்து விடுகிறது. ஒரு விளையாட்டு வீராங்கனைக்கு திருமணம் என்றால், சமூகம் வகுத்து வைத்திருக்கும் அடைப்புக்குறிகள் இன்னும் இறுக்கமாக போகின்றன என்று அர்த்தம். பொறுப்புகள், கடமைகள் என்ற பெயரில் நான்கு சுவற்றுக்குள்ளேயே முடக்கிவிட துடிக்கும். மேரி கோமுக்கும் இந்த சமூகம் அப்படியெல்லாம் செய்ய முற்பட்டது.

மேரி கோம்
மேரி கோம்
Frank Franklin II
திருமணத்திற்கு பிறகு 'இதெல்லாம் எதுக்கு' எனத் தன்னை நோக்கி கேள்விகள் எழுந்தபோது அதை உதைத்துத்தள்ளினார் மேரி. அவருக்கு உறுதுணையான இன்னொரு காலும் அந்த கேள்விகளை எட்டி உதைத்தது. அந்த கால்களுக்கு சொந்தக்காரர் ஆன்லர் கோம். மேரி கோமின் கணவர், கால்பந்தாட்ட வீரர்!

திருமணத்திற்கு பிறகுதான் வரிசையாக உலக சாம்பியன் டைட்டில்களை வென்று அசத்தினார் மேரிகோம். 2005, 2006, 2008, 2010 உலக சாம்பியன்ஷிப் டைட்டில்களை வென்று இந்திய குத்துச்சண்டையின் முகமாக மாறத் தொடங்கினார். மேரி கோம் கொடுத்த ஒவ்வொரு குத்தும் வென்ற ஒவ்வொரு டைட்டிலும் சமூகத்தின் பின்னிழுக்கும் பிற்போக்கு கொக்கிகளை மீண்டும் மீண்டும் உடைத்தன. திருமணத்திற்கு பிறகு இரண்டு உலக சாம்பியன்ஷிப்களை வென்றவர், குழந்தை பேறுக்கு பிறகு இன்னும் வேகமெடுத்தார். இரண்டு உலக சாம்பியன்ஷிப் டைட்டில்கள், மூன்று ஆசிய பதக்கங்கள் உச்சபட்சமாக 2012 ஒலிம்பிக் வெண்கலம் வென்ற போது மேரி கோம் இரண்டு குழந்தைகளுக்கு தாய்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒலிம்பிக் பதக்கத்தையே வென்ற பிறகு இனிமேலும் 'இதெல்லாம் எதுக்கு?' என்கிற கேள்வியை மேரி கோமிடம் வீசாமல் இருக்க முடியுமா, இலக்கணங்களை உடைக்கும் பெண்ணை பின்னிழுக்காமல் விட முடியுமா? தன்னுடைய கேள்விகளுக்கு வேறொரு முகமூடியை போட்டுக் கொண்டது இந்திய சமூகம்.

''மேரி கோம் அவ்வளவுதான். அவரின் குத்துச்சண்டை திறனெல்லாம் காலாவதியாகிவிட்டது. அவருக்கு வயதாகிவிட்டது'' என மேரி கோமுக்கே தன் மீது சந்தேகம் வருமளவுக்கு பல முனைகளிலிருந்தும் கொக்கிகளை வீசியது.

2016 ரியோ ஒலிம்பிக்கில் தேசிய கொடியை ஏந்த வேண்டியவர், அந்த ஒலிம்பிக்கிற்கு தகுதியே பெற முடியாமல் போனார். இது போதாதா? மேரி கோமை இழுத்துப் போட உக்கிரமாக தாக்குதல் தொடுக்கப்பட்டது. செல்கின்ற இடமெல்லாம் எப்போது ஓய்வு பெறுவீர்கள் என கேள்விகள் துரத்தின. மேரி கோம் எதுவும் பேச விரும்பவில்லை. அவருக்கு அப்படி பேசியும் பழக்கமில்லை. எல்லாமே பன்ச்தான்!

2019-ல் ஒலிம்பிக் தகுதிச்சுற்றிற்கு 51 கிலோ எடைப்பிரிவில் தன்னை நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என மேரி கோம் விரும்பினார். ஆனால், நிக்கத் ஷரின் எனும் இளம் வீராங்கனை மேரி கோமுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினார். அவருக்கு ஆதரவாக பல தரப்பும் பேசியது. இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று கொடுத்தவர் என்பதையெல்லாம் மறந்து மேரி கோமிற்கு எதிராக சாட்டையை சுழற்றினர். ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுக்க வேண்டும் என்ற இலக்கோடு வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த மேரி கோமிற்கு இந்த சர்ச்சை ஆத்திரமூட்டியது. வேறு வழியின்றி நிக்கத் ஷரினுக்கும் மேரி கோமிற்கும் இடையே போட்டி வைக்கப்பட்டது. நிக்கத் ஷரினுக்கு வாய்ப்பே கொடுக்காமல் 9-1 என அடித்து நொறுக்கினார்.

மேரி கோம்
மேரி கோம்
Frank Franklin II
அந்த போட்டியில் மேரி கோம் விட்ட குத்து ஒவ்வொன்றும் நிக்கத் ஷரினுக்கு கொடுக்கப்பட்டதல்ல... இத்தனை நாளும் தன்னுடைய காலை பிடித்து பின்னுக்கு இழுக்க நினைத்த சமூகத்துக்கு கொடுக்க நினைத்தது. மேரி கோமின் குத்துகளிலிருந்த வெறி அதைத்தான் காட்டியது.

போட்டி முடிந்த பிறகு நிக்கத் ஷரினுக்கு கைக்கொடுக்காமல் அவரை புறக்கணித்து விட்டு சென்றார். இதற்காக அப்போது விளையாட்டுத் துறை அமைச்சரான கிரண் ரிஜிஜூ வரை கடிதம் போட்டு கண்டனம் தெரிவித்தார் நிக்கத் ஷரின். ஆனால், மேரி கோமோ '''எதாவது பேச வேண்டுமானால் குத்துச்சண்டை ரிங்கிற்குள் வந்து பேசுங்கள். அவதூறாக பேச வேண்டியதெல்லாம் பேசி விட்டு கைக்கொடுக்கவில்லை என புகார் சொல்வது எந்த விதத்தில் நியாயம்'' எனக் கூறினார். இதுதான் மேரிகோம். இத்தனை ஆண்டுகளாக விமர்சித்தவர்களின் பிரதிநிதி போன்று நிக்கத் ஷரின் ரிங்குக்குள் வந்து நிற்க மொத்த வெறியையும் அவர் மீது காட்டிவிட்டார்.

நிக்கத்திற்கு போட்டியில் தோற்றதை விட மேரிகோம் கைக்கொடுக்காமல் போனதுதான் பெருத்த ஏமாற்றமாக மாறியது. புறக்கணிப்பு அதுதான் ஆகப்பெரும் வலி. தன்னை அடக்க நினைக்கும், ஒரு கூட்டுக்குள் அடைக்க நினைக்கும் சமூகத்திற்கும் மேரி கோமின் பதில் அந்த புறக்கணிப்புதான்.

''டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்'' என உறுதியாகச் சொல்கிறார் மேரி கோம். இன்று நடைபெற்ற போட்டியும் அவர் சொன்னது வெறும் வார்த்தைகள் அல்ல என்பதை நிரூபித்தது. முதல் சுற்றுப்போட்டியில் டொமினிக்கன் குடியரசின் மிகுலினா ஹெர்னாண்டா கிராசியஸை 4-1 என வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியோடு டோக்கியோ ஒலிம்பிக் பயணத்தை தொடங்கியிருக்கிறார் மேரி கோம்!

மேரி கோம் விளையாடும் அடுத்த ரவுண்ட் ஆஃப் 16 போட்டி வரும் வியாழக்கிழமை (29-07-2021) மதியம் 3.30மணிக்கு நடைபெற இருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism