Published:Updated:

மேரி கோம் பதக்கம் வெல்வாரா... இந்திய குத்துச்சண்டை வீரர்களுக்கு ஒலிம்பிக்கில் கடினமான தொடக்க சுற்று!

Mary Kom
Mary Kom

ஆறு முறை உலக சாம்பியனும் 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் மேரி கோம், இந்த முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது சற்று கடினம்தான். 38 வயதாகும் மேரி கோம் கலந்து கொள்ளும் கடைசி ஒலிம்பிக் இது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

51கிலோ எடைப்பிரிவில் போட்டியிடும் மேரி கோம், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் (ஜூலை 29) ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவரும் தற்போது மூன்றாம் ரேங்கில் உள்ளவருமான கொலம்பியாவைச் சேர்ந்த இங்க்ரிட் வேலன்சியாவை சந்திக்க உள்ளார்.

தன்னுடைய அரையிறுதிப் போட்டியில் (ஆகஸ்ட் 4), கடந்த வருடம் ஜோர்டானில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிசுற்று போட்டியில் தங்கம் வென்றவரும் தற்போது இரண்டாம் ரேங்கில் இருப்பவருமான சீனாவைச் சேர்ந்த யுவான் சாங்கை சந்திக்கவே வாய்ப்புகள் அதிகம்.

ஞாயிறன்று நடைபெறும் முதல் சுற்றுப் போட்டியில் டொமினிக்காவைச் சேர்ந்த ஹெர்னண்டஸை எதிர்கொள்ளும் மேரி கோம், எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்களுக்கான 51கிலோ எடைப்பிரிவில் முதல் ரேங்க்கில் உள்ள அமித் பங்கலுக்கு முதல் சுற்றில் பைஸ் கிடைத்துள்ளது. இதனால் ஜூலை 31-ம் தேதி நடைபெறவுள்ள காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கொலம்பியாவைச் சேர்ந்த ரிவாஸ் மார்ட்டினெஸ் அல்லது போஸ்ட்வானாவின் ரோ முகமதுவை எதிர்கொள்ள உள்ளார் அமித்.

உலக குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும் தற்போது முதல் ரேங்க்கில் உள்ளவருமான அமித் பங்கல், ஒருவேளை அரையிறுதிக்கு (ஆகஸ்ட் 5) தகுதி பெற்றால், அங்கு அவர் அல்ஜீரியாவைச் சேர்ந்த முகமது ஃப்லிஸியிடம் கடுமையான சவாலை சந்திக்க வேண்டியிருக்கும். தனது கனவான ஒலிம்பிக் பதக்கத்தை வெல்ல வேண்டுமானால் விகாஸ் கிருஷ்ணனும் கடுமையான போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும். 69 கிலோ எடைப்பிரிவுக்கான முதல் சுற்றுப்போட்டி ஜூலை 24-ம் தேதி நடைபெறுகிறது. அதில் ஜப்பானின் ஓகசவா குயின்சி மென்சாவை எதிர்த்து போட்டியிடப் போகிறார் விகாஸ்.

அதற்கடுத்த சுற்றில் (ஜூலை 27) இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற கியூபாவைச் சேர்ந்த ரோனியல் இக்ளீசியாஸை சந்திக்க உள்ளார். இந்தச் சுற்றில் வெற்றி பெற்றுவிட்டால், அடுத்த சுற்றில் இரண்டாம் ரேங்கில் உள்ள ரஷ்யாவை சேர்ந்த ஆன்ட்ரூ ஜேம்கோவாயை எதிர்த்து போட்டியிட வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெண்களுக்கான 75கிலோ எடைப்பிரிவில் போட்டியிடும் இந்தியாவைச் சேர்ந்த பூஜா ராணி, முதல் சுற்றிலேயே (ஜூலை 28) அல்ஜீரியாவைச் சேர்ந்த இராக் சாய்ப்பிடம் கடுமையான சவாலை சந்திக்க உள்ளார். காலிறுதியில் (ஜூலை 31) ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவரும் தற்போது இரண்டாம் ரேங்கில் இருப்பவருமான சீனாவைச் சேர்ந்த லீ குயானை சந்திக்க வேண்டும்.

Mary Kom
Mary Kom

இரண்டு முறை ஆசிய சாம்பியனான பூஜா ராணி, ஒருவேளை அரையிறுதிக்கு தகுதி பெற்றால், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நெதர்லாந்தைச் சேர்ந்த நவுச்சா ஃபோண்ட்ஜின்னை எதிர்கொள்ள வேண்டும். ஆண்களுக்கான 63 கிலோ எடைப்பிரிவில், இங்கிலாந்தைச் சேர்ந்த லூக் மெக்னார்க்கை சந்திக்க உள்ளார் மனிஷ் கவுஷிக். ஜூலை 31ம் தேதி நடைபெறும் அடுத்த சுற்றில் மூன்றாம் ரேங்கில் உள்ள பலம் பாய்ந்த ஆண்டி க்ரூசை எதிர்த்து போட்டியிடயுள்ளார்.

இதற்கிடையில், சிம்ரன்ஜித் கவுர் (பெண்களுக்கான 60கி எடைப்பிரிவு), லோலினா போர்கோஹைன் (69கிலோ) மற்றும் சதிஷ் குமார் (ஆண்களுக்கான 91கி எடைப்பிரிவு) போன்றோர்களுக்கு முதல் சுற்றில் பைஸ் கிடைத்துள்ளது. இதன் காரணமாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜமைக்காவின் ரிகார்டோ பிரவுனை எதிர்த்து போட்டியிட உள்ளார் சதிஷ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு