130 கோடி கண்களும் மேரி கோமை மட்டுமே உற்றுநோக்கிக் கொண்டிருக்க, அத்தனை மனங்களும் அவர் பதக்கம் வெல்ல வேண்டும் என்றே வேண்டிக் கொண்டிருக்க, அதே டோக்கியோ ஒலிம்பிக்கில் அதே குத்துச்சண்டையில் சத்தமே இல்லாமல் சரித்திரம் படைத்து வருகிறார் லவ்லினா போர்கோஹெய்ன்.
இந்தியா சார்பில் வால்டர் வெயிட் பிரிவில் களமிறங்கிய 23 வயது வீராங்கனையான லவ்லினா இன்னும் சற்று நேரத்தில் அரையிறுதிப்போட்டியில் துருக்கி வீராங்கனையுடன் மோத இருக்கிறார். ஏற்கெனவே லவ்லினா பதக்கம் வெல்வது உறுதியாகிவிட்டாலும், தங்கம் வெல்லும் முனைப்போடு இன்று களமிறங்குகிறார் லல்வினா. குத்துச்சண்டையில் வரலாறு படைக்க அவர் இன்னும் ஒரே ஒரு படியை மட்டுமே ஏற வேண்டியிருக்கிறது.
முகமது அலி... இந்த பெயரால் இன்ஸ்பையர் ஆகாதவர்கள் ரொம்பவும் குறைவு. அவர் விட்ட குத்துகளின் சீற்றமும் அவரின் மனவலிமையும் உலகெங்கும் கோடிக்கணக்கானோரின் வாழ்க்கைக்கு உந்துசக்தியாக அமைந்திருக்கிறது. லவ்லினாவுக்கும் முகமது அலியே இன்ஸ்பிரேஷன்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
முகமது அலி பற்றிய கதைகளை கேட்டும், அவரை பற்றிய செய்திகளை படித்துமே வளர்ந்திருக்கிறார் லவ்லினா. முகமது அலி, ஜார்ஜ் ஃபோர்மனை தோற்கடித்த கதையையெல்லாம் கேட்பவர்களுக்கு அப்படியே ரிங்கில் இறங்கி வெறி தீர யாரையாவது குத்திவிட்டு வரலாம் என தோன்றும். பலருக்கும் இந்த எண்ணம் கொஞ்ச நேரத்திலேயே காலாவதியாகிவிடும். ஆனால், லவ்லினாவின் மனதுக்குள் இந்த எண்ணம் விதையாக விழுந்து முளைக்க தொடங்கியது. முகமது அலி வாழ்வின் ஒரு சாயலுமே கூட லவ்லினாவிடம் இருப்பதை உணர முடிகிறது.
பின்தங்கிய அசாம் மாநிலத்தில் இன்னமும் பின்தங்கி போயிருக்கும் ஒரு குக்கிராமமான கோலகட்டில் எளிமையான குடும்பத்தில் பிறந்தவரே லவ்லினா. அப்பா ஒரு சிறுகுறு தொழில் நடத்துபவர். பள்ளியில் படிக்கும்போதே பல விளையாட்டுகளிலும் ஆர்வமுடையவராக இருந்திருக்கிறார். மேலும், இவரின் மூத்த சகோதரிகள் தற்காப்பு கலை பயின்றிருக்கின்றனர். சகோதரிகளைப் போலவே சிறுவயதில் தற்காப்பு கலை பயின்ற லவ்லினா, ஒருநாள் செய்தித்தாளில் முகமது அலி பற்றிய ஒரு செய்தியை படித்துவிட்டு தனது அம்மாவிடம் அவரை பற்றி கேட்டிருக்கிறார். மைக் டைசனின் ரசிகையான அவரது அம்மா லவ்லினாவுக்கு முகமது அலியின் கதைகளை கூற ஆரம்பித்திருக்கிறார். எல்லாமே அங்கிருந்துதான் தொடங்கியிருக்கிறது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSதொடக்கத்தில் தனது கிராமத்திலிருந்த வசதி வாய்ப்புகளை பயன்படுத்தியே ஆரம்பக்கட்ட பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். அதிலேயே மிக நேர்த்தியாக குத்துகளை விட பயின்றிருக்கிறார். 2012 ஒலிம்பிக்கில் மேரி கோம் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவின் புகழை உயர்த்தியிருந்தார். இந்தியா சார்பில் ஒலிம்பிக்கிற்கு சென்ற ஒரே வீராங்கனை பதக்கத்தோடு திரும்பியதால் பலருடைய கவனமும் குத்துச்சண்டை பக்கம் திரும்பியது.
அரசும் குத்துச்சண்டை மீது கூடுதல் கவனம் செலுத்தியது. 2012-ம் ஆண்டு இளம் பாக்ஸர்களை தேர்வு செய்து பயிற்சியளிப்பதற்காக இந்திய விளையாட்டு ஆணையம் வலை வீசி தேட ஆரம்பித்தது. இதில் பாக்ஸிங் பயிற்சியாளரான படும் போரா-வின் கண்களில் லவ்லினா சிக்கிவிட்டார். லவ்லினாவின் குடும்பத்திடம் பேசினார் போரா. மைக் டைசனின் ரசிகை தன் மகளை குத்துச்சண்டைக்கு அனுமதிக்காமல் இருந்தால்தான் ஆச்சர்யம். குடும்பத்தினருடைய ஆதரவோடு இந்திய விளையாட்டு ஆணையத்தில் தங்கியிருந்தே பயிற்சிகளை மேற்கொண்டார் லவ்லினா.


2018, 2019 தொடர்ந்து இரண்டு ஆண்டுகளிலும் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றார். 2017 மற்றும் சமீபத்தில் 2021-ல் ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றார். இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான டிக்கெட்டை பெற்றார்.
அசாமிலிருந்து ஹீமாதாஸ் ஒலிம்பிக்கிற்கு செல்வார் என எதிர்பார்த்திருக்கையில் காயம் காரணமாக அவர் ஒலிம்பிக்கிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அசாம் சார்பில் ஒலிம்பிக்கிற்கு செல்லும் முதல் பெண் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார் லவ்லினா.

கிரிக்கெட்டை தாண்டி கேரளாவில் எப்படி கால்பந்து ரசிக்கப்படுகிறதோ அப்படியே வடகிழக்கு மாநில மக்களும் கிரிக்கெட்டை விட பல விளையாட்டுகளுக்கும் பெரிய ஆதரவு கொடுத்து வருகின்றனர். இப்போது ஒட்டுமொத்த அசாமுமே சேர்ந்து லவ்லினாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. வீதியெங்கும் லவ்லினாவுக்கு சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அரசியலர்களும் லவ்லினாவுக்கு பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
எதிரில் வந்தாலே முகத்தை திருப்பிக் கொண்டு செல்லும் அம்மாநில முதல்வரான ஹிமந்த பிஸ்வா சர்மாவும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் சேர்ந்து லவ்லினாவுக்காக சைக்கிள் பேரணியில் ஈடுபட்டிருக்கின்றனர். 'Go for Glory lovlina' என்ற இந்த பேரணி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தினம்தோறும் மாறி மாறி வசைபாடிக்கொள்ளும் எதிரெதிர் கட்சிகளே மக்களுடன் லவ்லினாவுக்காக கைக்கோர்த்து ஒன்றிணைந்து நிற்கிறார்கள். காரணம், இப்போது அசாமுக்கு தேவை ஒரு ஒலிம்பிக் பதக்கம். ஆம், இதுவரை இந்தியா சார்பில் அசாமை சேர்ந்தவர்கள் யாருமே பதக்கம் வென்று கொடுத்ததே இல்லை.
அந்த குறையை இந்த முறை லவ்லினா தீர்ப்பார் என்ற ஆவலுடனே அந்த மக்கள் காத்திருக்கின்றனர். ஏறக்குறைய லவ்லினா போடியத்தில் ஏறிவிட்டார். இன்னும் ஒரே ஒரு படியே இருக்கிறது. 1960 ரோம் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று ஆப்ரோ அமெரிக்கர்களை முகமது அலி தலைநிமிர செய்ததைப் போலவே, லவ்லினாவும் அசாமியர்களை தலைநிமிர செய்யப்போகிறார்!
வாழ்த்துகள் லவ்லினா!