Published:Updated:

ஒற்றை காலில் 166 கிலோ... பளுதூக்கலில் அசரடித்த சீன வீரர்!

லீ ஃபேபின்
News
லீ ஃபேபின் ( IWF )

தன்னுடைய உடல் எடையை விட மூன்று மடங்கு எடையை (166கிலோ) ஒற்றைக் காலில் நின்றபடி தூக்கி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார் ஃபேபின்.

Published:Updated:

ஒற்றை காலில் 166 கிலோ... பளுதூக்கலில் அசரடித்த சீன வீரர்!

தன்னுடைய உடல் எடையை விட மூன்று மடங்கு எடையை (166கிலோ) ஒற்றைக் காலில் நின்றபடி தூக்கி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார் ஃபேபின்.

லீ ஃபேபின்
News
லீ ஃபேபின் ( IWF )

ஒலிம்பிக் போட்டியில் நாளுக்கு நாள் விறுவிறுப்பும் சுவாராஸ்யமும் அரங்கேறி வருகிறது. பல வீரர்கள் தங்கள் விளையாட்டு திறமையாலும் சில வீரர்கள் தங்களது வித்தியாசமான செய்கையாலும் மக்களின் மனங்களை கவர்கிறார்கள். இப்படித்தான் நேற்றும் ஒரு சம்பவம் ஒலிம்பிக் மேடையில் நடைபெற்றுள்ளது. பளுதூக்கும் போட்டியில் ஒற்றைக் காலில் நின்று எடை தூக்கிய வீரர் யாரையாவது பார்த்துள்ளீர்களா? அதுவும் 100 கிலோவுக்கு மேல் உள்ள எடையை ஒரு காலில் நின்று தூக்குவது சாத்தியம்தானா? ஆம் என்கிறார் சீன வீரர் லீ ஃபேபின். கொஞ்சம் பிசகினாலும் கால் முறிந்து விடும் அபாயம் இருந்தும், இந்த துணிச்சலான செயலை செய்துள்ளார்.

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான 61 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டார் சீன வீரர் லீ ஃபேபின். ஆரம்பத்தில் இருந்தே இவருக்கும் இந்தோனேஷிய வீரர் எகோ யூலிக்கும் பலத்த போட்டி இருந்து வந்தது. அந்த சமயத்தில்தான் தனக்குள் இருக்கும் வித்தையை வெளியே காண்பித்தார் ஃபேபின். தன்னுடைய உடல் எடையை விட மூன்று மடங்கு எடையை (166கிலோ) ஒற்றைக் காலில் நின்றபடி தூக்கி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார் ஃபேபின். “இப்படிச் செய்வதால் தனக்கு அதிக பலம் கிடைப்பதாகவும், சிறப்பாக செயல்பட முடிவதாகவும்” கூறுகிறார் ஃபேபின்.

இறுதியில் மொத்தம் 313 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார் ஃபேபின். பளுதூக்கும் போட்டியில் சீனா வாங்கும் இரண்டாவது தங்கம் இது. இந்தோனேஷிய வீரரால் இரண்டாம் இடமே பிடிக்க முடிந்தது. அவர் மொத்தமாக 302 கிலோ எடையை தூக்கியிருந்தார்.

இதை 'ஃப்ளமிங்கோ மூவ்' என ரசிகர்கள் குறிப்பிடுகிறார்கள். ஃப்ளமிங்கோ (செங்கால் நாரை) பறவை இப்படித்தான் ஒற்றைக் காலில் நின்று இரை தேடுமாம்.
லீ ஃபேபின்
லீ ஃபேபின்
Olympics

அடுத்தவர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதற்காக இப்படிச் செய்கிறார் எனப் பலர் இவரை விமர்சித்தாலும், 2017 ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் இப்படி ஒற்றைக் காலில் நின்றபடி எடை தூக்கியுள்ளார்.

நான் செய்வது மனதை கவரும்படி இருக்கும். ஆனால், இதை வேறு யாரும் வீட்டில் முயற்சி செய்து பார்க்காதீர்கள். நிச்சியம் உங்களுக்கு காயம் ஏற்படும்
ஃபேபின்

ஆகவே ரசிகர்களே, ஃபேபியன் செய்த 'ஒற்றைக்கால்' சாகசத்தை மறந்துவிட்டு, இந்த தங்கப்பதக்கத்தை பெற அவர் எந்தளவிற்கு கடுமையாக உழைத்தார் என்பதை மனதில் வைத்துக் கொண்டு உத்வேகம் பெறுங்கள்.