Published:Updated:

It's coming home என ரீங்காரமிட்டவர்களை சுளுக்கெடுத்த இத்தாலி வீரர்!

லேமன்ட் மார்ஷல் ஜேக்கப்ஸ்
லேமன்ட் மார்ஷல் ஜேக்கப்ஸ் ( Alfredo Falcone/LaPresse | AP )

உலகமே கொண்டாடிய உசேன் போல்ட்டின் கால்களை, அவர் விட்டுச் சென்ற தடங்களை எந்த வீரர் நிரப்பப்போகிறார் என்பதே மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. யாரும் எதிர்பாராத வகையில் அந்த கேள்விக்கான சர்ப்ரைஸ் விடையாக அமைந்திருக்கிறார் லேமண்ட் மார்ஷல் ஜேக்கப்ஸ்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

100 மீட்டர் ஓட்டப்பந்தயம். டோக்கியோ ஒலிம்பிக்கில் உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருந்த ஒரு போட்டி. காரணம், உசேன் போல்ட் எனும் மின்னல் மனிதரின் ஓய்வுக்குப் பிறகு அரங்கேறும் முதல் ஒலிம்பிக் போட்டி இது. உலகமே கொண்டாடிய உசேன் போல்ட்டின் கால்களை, அவர் விட்டுச் சென்ற தடங்களை எந்த வீரர் நிரப்பப்போகிறார் என்பதே மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. யாரும் எதிர்பாராத வகையில் அந்த கேள்விக்கான சர்ப்ரைஸ் விடையாக அமைந்திருக்கிறார் இத்தாலியை சேர்ந்த லேமன்ட் மார்ஷல் ஜேக்கப்ஸ். ஒட்டுமொத்த பதக்கப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்துவதை போலவே 100 மீ ஓட்டப்பந்தயத்திலும் எப்போதும் அமெரிக்காவே ஆதிக்கம் செலுத்தும். 1896 ஏதேன்ஸ் ஒலிம்பிக்ஸில் தாமஸ் பர்கே தொடங்கி, 2004 ஏதேன்ஸில் நடந்த ஒலிம்பிக்ஸில் ஜஸ்டின் கேட்லின் வரை 100 மீ ஓட்டப்பந்தயம் என்பது அமெரிக்க வீரர்களுக்கென்றே உருவாக்கப்பட்ட போட்டியாக இருந்தது. பெரும்பாலான தொடர்களில் அமெரிக்கர்களே தங்கம் வெல்வார்கள். 100 மீ ஓட்டப்பந்தயத்திற்கென்று இதுவரை வழங்கப்பட்டுள்ள 86 பதக்கங்களில் 39 பதக்கங்களை அமெரிக்கர்களே வென்றிருக்கிறார்கள்.

இந்த ஆதிக்கமெல்லாம் அந்த மின்னல் மனிதரான உசேன் போல்ட் தடகளத்தில் கால்பதிக்கும் வரை மட்டும்தான். 2008, 2012, 2016 எனத் தொடர்ந்து மூன்று ஒலிம்பிக்ஸிலும் அமெரிக்க வீரர்களை தோற்கடித்து சாதனை மேல் சாதனை செய்து தங்கப்பதக்கங்களை அள்ளினார் போல்ட்.
லேமன்ட் மார்ஷல் ஜேக்கப்ஸ்
லேமன்ட் மார்ஷல் ஜேக்கப்ஸ்
Francisco Seco | AP

அமெரிக்கா இதற்கு முன்பும் மூன்று முறை வரிசையாக தோற்றிருக்கிறது. ஆனால், இப்படி ஒற்றை மனிதரிடம் முழுமையாக சரணடைந்து தோற்றதில்லை. 2017-ல் உசேன் போல்ட் ஓய்வு பெறுகிறார். ஒரே சூரியன்... ஒரே சந்திரன்... ஒரே போல்ட் என உசேன் போல்ட் ரசிகர்கள் நம்பியதை விட அமெரிக்கா அதிகம் நம்பியது. இனிமேல் எப்படியும் போல்ட் வரப்போவதில்லை, இனி இந்த ட்ராக்குகள் அமெரிக்க கால்களுக்கே சொந்தமென டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்பாகவே முடிவு செய்துவிட்டனர். டோக்கியோவில் அமெரிக்காவை வீழ்த்த போல்ட் வரவில்லைதான் ஆனால், போல்ட்டைப் போன்றே ஆச்சர்யங்கள் சூழ இத்தாலியிலிருந்து ஜேக்கப்ஸ் என்பவர் வந்திருந்தார்.

"ஒரு இத்தாலியர் 100 மீ ஓட்டப்பந்தயத்தில் வெல்வார் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இதற்கு முன் அவரை யாரென்றே தெரியாது'' என்று அதிர்ந்து போய் சொன்னார்100 மீ போட்டியில் கனடாவின் பதக்க நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஆண்ட்ரூ டீ க்ராஸே. 9.69 செகண்ட்டில் பீஜிங்கில் உசேன் போல்ட் ஓடி முடித்த போதும் இதே மாதிரியான குரல்களே எழுந்திருந்தது. உசேன் போல்ட் எதிர்பார்க்கப்பட்ட வீரர். ஆனால், இப்படி உலக ரெகார்டோடு தங்கத்தை வெல்வார் என யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. உசேன் போல்ட் மீதாவது அவரது ஜுனியர் லெவல் ரெகார்டுகளை வைத்து கொஞ்சமேனும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த முறை தங்கம் வென்றிருக்கும் ஜேக்கப்ஸ் மீது கொஞ்சம் கூட எதிர்பார்ப்பு இருந்திருக்கவில்லை. உலகளவிலான தரவரிசையில் எட்டாவது இடத்தில்தான் இருக்கிறார். இந்த ஆண்டின் தொடக்கம் வரை 10 செகண்ட்டுக்குள் ஓடியதே இல்லை. ஒலிம்பிக்கிற்கு முன்பாகத்தான் ஒரு தொடரில் 10 செகண்ட்டுக்குள் முதல் முறையாக 100 மீட்டரை கடந்திருக்கிறார்.

உண்மையில் ட்ரெவென் ப்ரோமெல், கெர்லே, ரூனி பேக்கர் போன்ற அமெரிக்கர்களுக்கும், கனடாவை சேர்ந்த டீ க்ராஸே, உசேன் போல்ட்டின் அணியை சேர்ந்த யோஹன் பிளாக்குக்குமே கடுமையான போட்டியிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜேக்கப்ஸ் முதல் சுற்றிலிருந்தே சைலன்ட்டாக தனது பெஸ்ட்டை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.

லேமன்ட் மார்ஷல் ஜேக்கப்ஸ், கெர்லே
லேமன்ட் மார்ஷல் ஜேக்கப்ஸ், கெர்லே
Martin Meissner
முதல் சுற்றில் 9.94 செகண்டுகளில் ஓடியிருந்தார். இது தேசிய ரெகார்ட். அரையிறுதியில் 9.84 செகண்டுகளில் ஓடியிருந்தார். இது யூரோ ரெகார்ட். இறுதிப்போட்டியில் 9.80 செகண்ட்டுகளில் ஓடினார்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கெர்லே 9.84 செகண்ட்டிலும் டீ க்ராஸே 9.89 செகண்ட்டுகளிலுமே ஓடியிருந்தனர். இது இரண்டுமே இவர்களின் கரியர் பெஸ்ட் பெர்ஃபார்மென்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் முந்தைய ரெகார்டுகளை உடைத்து தொடர்ந்து சாதனை செய்தவர்களை பார்த்திருப்போம். உசேன் போல்ட்டே அப்படிப்பட்டவர்தான். ஒரே ஒலிம்பிக்கில் மூன்று சுற்றுகளில் ஒவ்வொரு சுற்றிலும் தனது பெஸ்ட்டைக் கொடுத்து முந்தைய ரெக்கார்டுகளை உடைத்திருக்கும் நபர் ஜேக்கப்ஸ் மட்டுமே.

இத்தனைக்கும் 10 செகண்ட்டுக்குள் அவர் அதிகமாக ஓடியதே இல்லை என்பதை நினைக்கும் போதுதான் நடந்திருப்பது அற்புதம், அதிசயம் எனப் புரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வரலாறாக மாறிய அந்த ஒரு ஃபிளிக்கும், கோலும்... யார் இந்த குர்ஜித் கவுர்?

போல்ட் இல்லை எப்படியும் அமெரிக்க வீரர்கள்தான் வெல்வார்கள் மீண்டும் ஒரு சகாப்தத்தை உருவாக்கப்போகிறார்கள் என நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஜேக்கப்ஸின் வெற்றி அதிர்ச்சியளிக்கக்கூடியதாகவே இருந்திருக்கும். ஜேக்கப்ஸே கூட இந்த வெற்றியை எதிர்பார்த்திருக்கவில்லை.

இந்த போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்றே நினைத்தேன். வெற்றியை பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. நடந்திருப்பதை உணர்வதற்கு எனக்கே நான்கைந்து ஆண்டுகள் ஆகும்.
ஜேக்கப்ஸ்

என அதிர்ச்சி விலகாமல் பேசியிருக்கிறார். மனதில் எந்தவித அழுத்தமும் இல்லாமல் முடிவுகளை பற்றியெல்லாம் யோசிக்காமல், ரொம்பவே லேசாக காற்றில் பறப்பதை போன்ற உணர்வோடு போட்டியை அனுகிய விதம்தான் ஜேக்கப்ஸுக்கு தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்திருக்கிறது.

அமெரிக்காவுக்கு இந்த ஒலிம்பிக் முழுவதுமே ஒரே அப்செட்தான். நீச்சலில் கேட்டி லெடிக்கியை விநாடி வித்தியாசத்தில் டிட்மஸ் வெடவெடக்க வைத்துவிட்டார். பெண்களுக்கான கால்பந்து போட்டியில் 44 போட்டிகளாக தோற்காமல் இருந்த அமெரிக்காவை சுவீடன் பந்தாடியிருந்தது. அரையிறுதியில் கனடா அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து தொடரை விட்டு வெளியேற்றியுள்ளது. வாட்டர் போலோவில் அடி. 3×3 கூடைப்பந்தில் அடி என இத்தனை நாள் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த அத்தனை விளையாட்டுகளிலும் அமெரிக்கா அடி வாங்கியிருக்கிறது.

லேமன்ட் மார்ஷல் ஜேக்கப்ஸ்
லேமன்ட் மார்ஷல் ஜேக்கப்ஸ்
Alfredo Falcone/LaPresse | AP

100மீ ஓட்டப்பந்தயத்திலும் இழந்த பெருமைகளை மீட்கப்போவதாக அமெரிக்க தம்பட்டம் அடித்திருந்தது. அதற்கு முதலில் எதிரியின் பலம் என்னவென்று தெரிந்திருக்க வேண்டும்.

'ஜேக்கப்ஸ் யாரென்றே தெரியாது' என்பதே வெள்ளி வென்றிருக்கும் கெர்லேவின் வாக்குமூலமாக இருக்கிறது. அவர்களுக்கு எதிரியே யாரென்று தெரிந்திருக்கவில்லை.

தடகளத்தில் இத்தாலி பெரிதாக சாதித்ததில்லை. 100 மீ ஓட்டப்பந்தயத்தில் இதுதான் அவர்களின் முதல் பதக்கம். அதிர்ச்சி தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத அமெரிக்கா, இப்போது ஜேக்கப்ஸுக்கு சொந்தம் கொண்டாட தொடங்கியுள்ளது. ஜேக்கப்ஸின் தந்தை அமெரிக்காவை சேர்ந்தவர். அவரது தாயே இத்தாலியை சேர்ந்தவர்.

ஜேக்கப்ஸ் அமெரிக்காவில்தான் பிறந்தார். வளர்ந்தது மட்டுமே இத்தாலியில் என கம்பிக்கட்ட தொடங்கியுள்ளது. அப்படியாவது ஆறுதல் அடைந்து கொள்ளட்டும்.

இத்தாலி இந்த ஆண்டில் இரண்டு தரமான சம்பவங்களை செய்திருக்கிறது. It's coming home என ரீங்காரமாக பாடிக்கொண்டிருந்த இங்கிலாந்தை யூரோ கோப்பையிலும், அமெரிக்காவை ஒலிம்பிக்கிலும் சுளுக்கெடுத்திருக்கிறது. இத்தாலியின் பெருமையாக இந்த இரண்டு சம்பவங்களும் என்றைக்கும் வரலாற்றில் நிற்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு