Published:Updated:

Tokyo Olympics : முதல் நாளே இந்தியா பதக்கம் வெல்லுமா... யார் யார் ஆட்டத்தை மிஸ் செய்யக்கூடாது?

ஜுலை 24, 2021. இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாளாக மாறுவதற்கான அத்தனை சாத்தியங்களும் உள்ள நாள். டோக்கியாவின் நாளைய விடியல் இந்தியாவுக்கானதாக இருக்கப்போகிறது. ஆம், இந்தியா சார்பில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள பெரும்பாலான வீரர்கள் நாளை களமிறங்குகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஜூலை 24 நடக்கப்போகும் போட்டிகளில் முக்கியமானது துப்பாக்கிச்சுடுதல். துப்பாக்கிச்சுடுதலில் அபினவ் பிந்த்ராவுக்கு பிறகு இந்தியாவுக்கு தங்கம் வெல்லும் வாய்ப்புடைய நான்கு வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இளவேனில் வாலறிவனும், அபூர்வி சந்தேலாவும் களமிறங்குகின்றனர். இப்போட்டி இந்திய நேரப்படி நாளை காலை (24/07/2021) 5 மணிக்கு தொடங்குகிறது. இளவேனில் வாலறிவன் உலகளவில் நம்பர் 1 வீராங்கனை. கடந்த சில ஆண்டுகளில் பல தொடர்களில் பதக்கம் வென்று இந்தியாவின் நம்பிக்கையாக உயர்ந்திருக்கிறார். அபூர்வி சந்தேலா இரண்டாவது முறையாக ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெற்றிருக்கிறார். ரியோ ஒலிம்பிக்கில் முறையற்ற க்ரையோதெரபி கொடுத்த கால்வலியால் சரியாக பர்ஃபார்ம் செய்யாமல் வெளியேறியிருந்தார். அதன்பிறகு, கம்பேக் கொடுத்து நம்பர் 1 இடம் வரை உயர்ந்தார். கடந்த இரண்டு ஆண்டில் மட்டும் உலகக்கோப்பைகளில் மூன்று தங்கங்களை வென்றுள்ளார். ரியோவில் கடந்த முறை விட்டதற்கும் சேர்த்து இந்த முறை பதக்கத்தை அள்ள வேண்டும் என வேட்கை கொண்டுள்ளார். இவர்கள் இருவரில் ஒருவர் அல்லது இருவருமே கூட பதக்கம் வெல்லும் வாய்ப்பிருக்கிறது.

ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சௌரப் சௌத்ரியும் அபிஷேக் வெர்மாவும் களமிறங்குகின்றனர். சௌரப் சௌத்ரி துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவின் சூப்பர்ஸ்டாராக உயர்ந்து நிற்கும் இளம்வீரர். ஆடிய அத்தனை தொடர்களிலும் தங்கம் வென்றிருக்கிறார். நாளை உறுதியாக பதக்கம் வெல்வார் என அறுதியிட்டு கூறலாம். அபிஷேக் வெர்மாவும் கெட்டிக்காரரே. 27 வயதுக்கு பிறகு துப்பாக்கி கையில் ஏந்தி நான்கு வருடத்திற்குள்ளேயே உலகின் நம்பர் 1 வீரர் எனும் அந்தஸ்தை அடைந்தவர். இந்த பிரிவிலும் இவர்கள் இருவருமே இறுதிப்போட்டிக்கு முன்னேறி பதக்கத்தையும் வெல்ல வாய்ப்பிருக்கிறது. இப்போட்டி நாளை 10.30 மணியளில் தொடங்கயிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பளு தூக்குதலில் மீராபாய் சானு போட்டியிட இருக்கிறார். 49 கிலோ பிரிவில் களமிறங்கும் இவர் கடந்த ரியோ ஒலிம்பிக்கிலேயே பங்கேற்றிருந்தார். அந்த ஒலிம்பிக்கில் Clear & jerk சுற்றில் பளுவை தூக்கவே முடியாமல் Do not Finish வாங்கி தலைகுனிவாக வெளியேறினார். ஆனால், இந்த நான்கைந்து வருடத்தில் அசாத்தியமாக முன்னேறியிருக்கிறார். உலகின் நம்பர் 1 வீராங்கனையாக இருக்கிறார். கர்ணம் மல்லேஸ்வரிக்கு பிறகு ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் பதக்கம் வெல்லும் வீராங்கனை எனும் பெயரை எடுக்க 100% வாய்ப்புள்ளது. இவரது போட்டி நாளை காலை 10.20 மணிக்கு நடைபெற இருக்கிறது.

இவர்களைத் தவிர, வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா குமாரியும், அடானு தாஸும் களமிறங்குகின்றனர். டேபிள் டென்னிஸில் சரத் கமல், மனிகா பத்ரா இணை, ஜுடோவில் சுஷிலா தேவி, பேட்மின்டனில் சாய் பிரனித், சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி, குத்துச்சண்டையில் விகாஷ் கிருஷ்ணன் என ஒரு பெரும்பட்டாளமே களமிறங்குகிறது. இதெல்லாம் வெளியேற்றுதல் சுற்று என்பதால் இவர்கள் சிறப்பாக ஆடும்பட்சத்தில் அடுத்த சுற்றுக்கு தகுதிப்பெறுவர்.

அணிகள் பிரிவில் ஆண்கள் ஹாக்கி அணி நியுசிலாந்துக்கு எதிராகவும், பெண்கள் அணி நெதர்லாந்துக்கு எதிராகவும் ஆட இருக்கிறது. ஆண்கள் போட்டி நாளை காலை 6.30 மணிக்கும், பெண்கள் போட்டி நாளை மாலை 5.15 மணிக்கும் தொடங்கயிருக்கிறது.

இந்தியாவிற்கு குறைந்தப்பட்சமாக மூன்று பதக்கங்களாவது உறுதியாக நாளை கிடைத்துவிடும் என்ற நிலையே இருக்கிறது. மேலும், ஒலிம்பிக்ஸில் தனிநபராக அபினவ் பிந்த்ரா மட்டுமே தங்கம் வென்றிருக்கிறார். அந்த சாதனை உடைக்கப்பட்டு நாளை இரண்டு மூன்று பேர் தங்கம் வெல்வதற்கும் வாய்ப்பிருக்கிறது. அதனாலயே ஜுலை 24 இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாளாக மாறப்போகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு