Published:Updated:

நீரஜ் சோப்ராவை தங்கத் தோள் கொண்டு உருவாக்கிய உவே ஹான்... இந்தியா கொண்டாடவேண்டிய துரோணாச்சார்யர்!

1984-ல் ஒரு தடகள தொடரில் 104.80 மீட்டருக்கு ஈட்டியை எறிந்து ஒட்டுமொத்த உலகத்தையுமே வியப்பில் ஆழ்த்தியிருந்தார் உவே ஹான்(Uwe Hohn). 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்...

ஒலிம்பிக்ஸில் இந்தியா இதுவரை கண்டிராத வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. ஒட்டுமொத்த தேசமுமே அவரை கொண்டாடி கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு வெற்றி....ஒரு வரலாறு எப்போதுமே ஒரே ஒரு மனிதரால் சாத்தியப்பட்டுவிடுவதில்லை. அவர்களுக்கு பின்னால் பலருடைய ஆதரவும் பங்களிப்பும் நிச்சயம் இருக்கும். குறிப்பாக விளையாட்டு வீரர்களின் வெற்றியை பயிற்சியாளரை ஒதுக்கி வைத்துவிட்டு கொண்டாடிவிட முடியாது. பி.வி.சிந்துவுக்கு ஒரு பார்க்கும், கோபி சந்தும் போல, இந்திய ஹாக்கி அணிக்கு ஒரு கிரஹாம் ரீட் போல நீரஜ் சோப்ராவின் வெற்றிக்கு பின்னாலும் அவருடைய பயிற்சியாளரின் பங்களிப்பு பெரிதாக இருந்திருக்கிறது.

உவே ஹான்... இவர்தான் நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர். உவே ஹான் 1980-களில் உலகளவில் பிரபலாக இருந்த ஈட்டி எறியும் வீரர். ஜெர்மனியை சேர்ந்தவர். ஈட்டி எறிதல் வரலாற்றில் 100 மீட்டருக்கு மேல் ஈட்டியை வீசியிருக்கும் வீரர் உவே ஹான் மட்டுமே. 1984-ல் ஒரு தடகள தொடரில் 104.80 மீட்டருக்கு ஈட்டியை எறிந்து ஒட்டுமொத்த உலகத்தையுமே வியப்பில் ஆழ்த்தியிருந்தார். 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜெர்மனி அந்த ஒலிம்பிக்கை புறக்கணித்திருந்தது. இதனால் உவே ஹான் அந்த ஒலிம்பிக்கில் கலந்துக்கொள்ளவில்லை.

அதன்பிறகு, சில ஆண்டுகளில் தடகள போட்டிகளில் பங்கேற்றவர், ஓய்வை அறிவித்து பயிற்சியாளராக மாறிவிட்டார்.

உவே ஹான்
உவே ஹான்

1986-ல் ஈட்டி எறிதலில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. ஈட்டி எறிதலிலில் இருக்கும் அபாயங்களை நீக்கும் பொருட்டு ஈட்டியிலும் விளையாட்டின் விதிமுறைகளிலும் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. இதனால் அதற்கு முன்பு வைக்கப்பட்டிருந்த ரெக்கார்டுகள் அனைத்தும் அப்படியே கை விடப்பட்டது. 1986-க்குப் பிறகான ஈட்டி எறிதல் சாதனைகள் மட்டுமே ரெக்கார்டில் இருக்கும். இதனால் உவே ஹானின் 104.80 மீ சாதனை காலாவதியாகிப் போனது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய விளையாட்டு ஆணையத்தின் சார்பில் தடகள பயிற்சியளிக்க இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டார் உவே. அந்த 2016-17 சமயத்தில்தான் நீரஜ் சோப்ராவும் ஜுனியர் லெவலில் சிறப்பாக ஆடி தனது கரியரை தொடங்கியிருந்தார். நீரஜ் சோப்ராவை செதுக்கும் பொறுப்பு உவே ஹானிடம் கொடுக்கப்பட்டது. ஆரம்பத்திலேயே நீரஜ் சோப்ராவின் உடல் திறனையும் உத்வேகத்தையும் கண்டு ஆச்சர்யப்பட்டிருக்கிறார் உவே ஹான். இந்த நீரஜ் சோப்ரா மிகப்பெரிய சாதனைகளை செய்யப்போகிறார் என்பதை அப்போதே கணித்திருக்கிறார். தனக்கு வாய்க்கப்பெறாத ஒலிம்பிக் பதக்கத்தை தன்னுடைய மாணவனைக் கொண்டு எப்படியாவது வெல்ல வைத்துவிட வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்திருக்கிறார்.

நீரஜ் சோப்ரா - உவே ஹான் கூட்டணி அடுத்தடுத்து தொடர் வெற்றிகளை பெற்றது. 2017-18 இரண்டு ஆண்டுகளில் ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய போட்டி, காமென்வெல்த் போட்டி என மூன்று பெரிய தொடரிலுமே நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றிருந்தார். நீரஜை ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லக்கூடிய அத்தனை வாய்ப்பும் உள்ள வீரராக மாற்றிக் காட்டினார்.

நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா
Matthias Schrader

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியை சேர்ந்த ஜோனஸ் வெட்டர் ஒரு தடகள தொடரில் 97.76 மீட்டருக்கு ஈட்டியை வீசியிருந்தார். செக் குடியரை சேர்ந்த ஜேன் செலன்ஷி 1996-ல் 98.48 மீட்டருக்கு ஈட்டியை வீசியிருந்தார். நவீன ஈட்டி எறிதலில் இதுதான் உலக சாதனை. ஜோனஸ் வெட்டர் 97.76 மீட்டருக்கு வீசி வரலாற்றில் இரண்டாம் இடத்தை பிடித்தார். உவே ஹானும் ஜெர்மனியை சேர்ந்தவர். தன்னுடைய சகநாட்டு வீரர் இவ்வளவு பெரிய சாதனையை செய்திருக்கிறாரே என உவே ஹான் பெருமிதம் கொள்ளவில்லை. நீரஜ் சோப்ராவை எப்படி ஜோனஸ் வெட்டரை விட சிறப்பாக வீச வைக்க முடியும் என்றே சிந்தித்தார்.

இடையில் நீரஜ் சோப்ராவுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது. அதற்காக நீரஜ் அறுவை சிகிச்சை செய்து கொண்டதில் உவே ஹானுக்கு உடன்பாடில்லை. ஆனாலும், காயத்திற்கு பிறகு நீரஜ் சோப்ரா டெக்னிக்கலாக சில மாற்றங்களை செய்ய உறுதுணையாக இருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜோனஸ் வெட்டரை விட மிகச்சிறப்பாக வீசி நீரஜ் சோப்ராவை தங்கம் வெல்ல வைத்திருக்கிறார் உவே. இந்த வெற்றி எதிராளிகளுடன் போராடி பெறப்பட்டது மட்டுமல்ல, இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு எதிராகவுமே போராடியிருக்கிறார் உவே ஹான்.

உவே ஹான் - நீரஜ் சோப்ரா
உவே ஹான் - நீரஜ் சோப்ரா

சமீபத்தில் உவே ஹானின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்த நிலையில், இந்திய விளையாட்டு ஆணையம் கொடுத்த புதிய ஒப்பந்தத்தில் உவே ஹானுக்கு உடன்பாடில்லை. ‘’இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு விளையாட்டை பற்றிய புரிதல் பெரிதாக இல்லை. வீரர்களுக்கு தேவையான சத்தான உணவை கூட அவர்களால் கொடுக்க முடியவில்லை. இப்போது உடன்பாடில்லாத புதிய ஒப்பந்தத்தில் என்னை கையெழுத்திட சொல்லி ப்ளாக்மெயில் செய்கின்றனர்'’ என விளையாட்டு ஆணையத்திற்கு எதிராக சாட்டையை சுழற்றியிருந்தார்.

இந்த மோதல் கடந்த ஜுன் மாதத்தில் அதாவது ஒலிம்பிக்கிற்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன்பாக நடைபெற்றது. நீரஜ் சோப்ராவுக்காக எல்லாவற்றையும் பல்லை கடித்துக் கொண்டு பொறுத்திருந்தார் உவே ஹான். அப்படியே விட்டுவிட்டு சென்றிருந்தால் மனு பாக்கருக்கு ஏற்பட்ட சூழல் நீரஜ் சோப்ராவுக்கும் ஏற்பட்டிருக்கலாம். ஒலிம்பிக்கிற்கு ஒரு மாதம் முன்பாக புதிய பயிற்சியாளர் என்பதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாதது. நீரஜ் சோப்ரா தடுமாறி போயிருப்பார். நீரஜ் சோப்ராவின் உழைப்பு மட்டுமில்லை உவே ஹானின் பொறுமையுமே இந்தியாவிற்கு தங்கத்தை பெற்று கொடுத்திருக்கிறது. இந்த நவீன துரோணாச்சார்யரியரையும் இந்தியா கொண்டாட வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு