Published:Updated:

வந்தனா : மரணித்த தந்தையின் முகத்தைக்கூட காணவில்லை... ஹாட்ரிக் கோல் அடித்தும் கொண்டாட்டம் இல்லை!

வந்தனா கட்டாரியா
வந்தனா கட்டாரியா ( John Minchillo )

‘’தன் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்வதைவிட, இந்தியாவுக்காக தன் மகள் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதையே என் அப்பா விரும்புவார். என் அப்பாவைப் பெருமைப்படுத்தவே விரும்புகிறேன். நான் இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக விளையாடும் ஒவ்வொரு நிமிடமும் என் தந்தை என்னைப் பார்த்து மகிழ்வார்.’'

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வந்தனா கட்டாரியா… கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால், முதல்முறையாக இப்போதுதான் வந்தனாவுக்கான தனித்த அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது.

இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பாலுக்கு அடுத்து அதிக போட்டிகளில் விளையாடிவர், அதிக கோல்கள் அடித்தவர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் வந்தனாதான். 29 வயதான இவர் 245 போட்டிகளில் விளையாடி இதுவரை 67 கோல்கள் அடித்திருக்கிறார். ஆனால், ஏன் இவ்வளவு காலமும் இவரைப்பற்றி பெரிதாக எந்த செய்திகளும், தகவல்களும் இல்லை?!

ஏனென்றால் அவர் தன்னை முன்னிறுத்திக்கொண்டதே இல்லை. இப்போதும் முதல் இந்திய ஹாக்கி வீராங்கனையாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஹாட்ரிக் கோல்கள் அடித்தபோதும் அதை ஒரு பெரிய சாதனையாகவே அவர் எடுத்துக் கொள்ளவில்லை. எந்த கொண்டாட்டமும் இல்லை

ஹாக்கி என்பது ஒரு குழு விளையாட்டு. ஒரு கோல் அடிப்பதற்காக முழு அணியும் விளையாடுகிறது. அத்தனைப் பேரின் உழைப்பும் அதில் இருக்கிறது. அப்படியிருக்கும்போது ஒரு கோலுக்கு நான் எப்படி சொந்தம் கொண்டாட முடியும். நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. நான் கோல் அடித்தேன் என்பதற்காக அல்ல!
வந்தனா
வந்தனா கட்டாரியா
வந்தனா கட்டாரியா
John Locher

வந்தனா எப்போதும் இப்படித்தான். இந்திய ஹாக்கி அணிக்கு தான் எவ்வளவு முக்கியம் என்பது மட்டுமல்ல, தான் மட்டுமே முக்கியம் அல்ல என்பதையும் உணர்ந்தவர் வந்தனா. இப்போது 41 ஆண்டுகளுக்குப்பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக்கின் காலிறுதிக்குள் நுழைவதற்கு வந்தனா எவ்வளவு முக்கிய காரணமோ அதேப்போல, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ரியோ ஒலிம்பிக்கிற்கு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஹாக்கி அணி தகுதிபெறவும் முக்கிய காரணமாக இருந்தவர். 2013 ஜூனியர் உலகக் கோப்பையில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது வந்தானாவின் ஸ்பெஷல் ஆட்டத்தால்தான். 2014-2015 ஹாக்கி உலக லீகில் இந்தியா மிகச்சிறப்பாக விளையாடவும் வந்தனாதான் காரணமாக இருந்தார். அந்த தொடரில் மட்டும் 11 கோல்கள் அடித்திருந்தார் வந்தனா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கூச்சமும், தயக்கமும் கொண்ட சிறு நகரத்தைச் சேர்ந்த பெண்தான் வந்தனா. உத்ராகண்ட் மாநிலத்தின் ஹரித்வார்தான் சொந்த ஊர். அப்பா BHEL நிறுவனத்தில் டெக்னீஷியனாகப் பணியாற்றியவர். விளையாட்டு வீரரான தந்தைக்கு இரண்டு மகள்கள். வந்தனா இளையவர். அக்கா ஹாக்கி விளையாடுவதைப் பார்த்து விளையாட ஆரம்பித்தவரின் ஆட்டத்தை கவனித்த உள்ளூர் பயிற்சியாளர் முறைப்படி பயிற்சியளிக்க 15 வயதிலேயே தேசிய ஜூனியர் அணிக்குள் நுழைந்துவிட்டார் வந்தனா.

வந்தனா
வந்தனா

‘’நான் 15 வயதில் ஹாக்கி விளையாடத் தொடங்கியபோது பயம் என்றால் என்ன என்பதே எனக்குத் தெரியாது. எதிரணியினர் பற்றி நான் கொஞ்சமும் யோசித்ததில்லை. பந்து என் பேட்டுக்கு வந்துவிட்டால் முடிந்தவரை அதை நீண்டநேரம் என்னிடமே வைத்திருந்து, கோல் போஸ்ட்டை நோக்கி முன்னேறி கோல் அடிப்பேன். ஆனால், பின்னர்தான் ஹாக்கி என்பது குழு விளையாட்டு எனப் புரிந்தது.

பந்தை நாமே வைத்திருப்பதற்கு பதில் மற்ற வீராங்கனைகளுக்கு பாஸ் செய்து அவர்கள் கோல் அடிக்க உதவேண்டும், மற்றவர்களும் நமக்கு உதவுவார்கள் என விளையாட்டை உள்வாங்கிக்கொண்டேன். அணிக்காகவும், அணியின் மற்ற வீரர்களுக்காகவும் விளையாடுவதுதான் முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டேன். அந்தப்புரிதல்தான் என்னை இவ்வளவு ஆண்டுகளாக இந்தியாவுக்காக விளையாடவைத்திருக்கிறது’’ என்று இந்திய ஹாக்கி அணிக்குள் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக நீடிப்பது பற்றி சொல்வார் வந்தனா.

வந்தனா
வந்தனா
John Locher

வந்தனாவுக்கு விளையாட்டின் மீது ஆர்வத்தைத் தூண்டி, அவருக்கு எல்லாமுமாக இருந்த அவரது தந்தை கடந்த மே 30-ம் தேதி மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார். அப்போது வந்தனா ஒலிம்பிக் பயிற்சிக்காக பெங்களூரு கேம்ப்பில் இருந்தார். கொரோனா காரணமாக பயோபபுள் பயிற்சி. வந்தனா நினைத்திருந்தால் பயோபபுள் விதிகளை உடைத்து மரணித்த தந்தையின் முகத்தை இறுதியாக ஒருமுறை பார்த்துவிட்டு வந்திருக்கலாம். ஒலிம்பிக் பயிற்சிகளுக்கு இடைவெளி விட்டிருக்கலாம். ஆனால் வந்தனா அதை செய்யவில்லை.

‘’தன் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்வதைவிட, இந்தியாவுக்காக தன் மகள் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதையே என் அப்பா விரும்புவார். என் அப்பாவைப் பெருமைப்படுத்தவே விரும்புகிறேன். நான் இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக விளையாடும் ஒவ்வொரு நிமிடமும் என் தந்தை என்னைப் பார்த்து மகிழ்வார்’' எனச் சொல்லி பெங்களூருவில் பயிற்சி முகாமிலேயே தங்கிவிட்டார் வந்தனா.

வந்தனா
வந்தனா
John Locher

‘’பெங்களூரு கேம்ப்பில் இருக்கும்போதுதான் என் தந்தை இறந்த செய்தி எனக்கு வந்தது. கொரோனா காரணமாக ஹோட்டல் அறைக்குள்ளேயே முடங்கியிருந்தோம். எங்கள் பயிற்சிகளை ஹோட்டல் அறைகளில் இருந்தபடியே செய்தோம். அப்பா இறந்த நேரம் யாரையும் நேரில் பார்க்காமல் ஒரே அறைக்குள் இருந்தபடியே பயிற்சிகளை செய்த அனுபவம் மிகவும் கடினமாக இருந்தது'’ என அந்த துயர நாட்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் வந்தனா.

இங்கிலாந்தின் உதவியால் இப்போது இந்தியா ஒலிம்பிக் காலிறுதிக்குள் நுழைந்துவிட்டது. வந்தனாவின் கனவு என்பது இந்தியாவை பதக்கம் வெல்ல வைக்கவேண்டும் என்பதுதான். ஆஸ்திரேலியாவுடன் நாளை நடைபெற இருக்கும் ஆட்டத்தில் வெற்றிக்குத் தேவையான அத்தனை உழைப்பையும் வந்தனா கொடுப்பார். வெற்றி கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருப்போம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் ஒலிம்பிக் காலிறுதிப் போட்டி நாளை காலை 8.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு