இம்முறை அதிகபட்சமாக 127 இந்திய வீரர்கள் ஜப்பான் தலைநகர் சென்றிருக்கின்றனர். ரியோ ஒலிம்பிக்கில் வெறும் 2 பதக்கம் மட்டுமே வென்று ஏமாற்றம் அடைந்திருந்தாலும், இம்முறை நம் வீரர்கள் நிச்சயம் முத்திரை பதிப்பார்கள்
இந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லக்கூடியவர்களாகக் கருதப்படும் 11 டிரீம் அத்லெட்கள் இங்கே...
மீராபாய் சானு - பளுதூக்குதல்
இந்த ஒலிம்பிக்கில் மீராபாய் சானு பதக்கம் வெல்லவில்லை என்றால்தான் ஆச்சர்யம். அதை உலக அதிசயமாகக்கூட அறிவித்துவிடலாம். அப்படியொரு சூழல் உருவாகியிருக்கிறது. 49 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்கும் மீராபாய் சானு, அதிகபட்சமாக 205 கிலோ தூக்கக்கூடியவர். அவருக்குப் போட்டியாக இருந்த ஒரு சீன வீராங்கனையும் வட கொரிய வீராங்கனையும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இல்லை. அதனால், குறைந்தபட்சம் சானுவுக்கு வெள்ளிப் பதக்கமாவது கிடைத்துவிடும்!
தீபிகா குமாரி - வில்வித்தை
வில்வித்தையில் உலகின் நம்பர் 1 எனும்போது, நிச்சயம் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அந்த எதிர்பார்ப்பை டோக்கியோவுக்கு சுமந்து செல்கிறார் தீபிகா குமாரி. ரீகர்வ் பிரிவில் பங்கேற்கும் தீபிகா, சமீபத்தில் பிரான்ஸில் நடந்த உலகக் கோப்பை தொடரில் 3 பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். ஒலிம்பிக்கில் தனி நபர் பிரிவிலும், தன் கணவர் அடானு தாஸோடு சேர்ந்து கலப்பு அணிப் பிரிவிலும் பங்கேற்கிறார். ஒன்றுக்கு இரண்டு பதக்கங்கள் வந்தாலும் ஆச்சர்யமில்லை.
பஜ்ரங் பூனியா - மல்யுத்தம்
இந்தியாவில் ஒவ்வொரு மல்யுத்த வீரருக்கும் இருக்கும் கதை பஞ்ரங் பூனியாவுக்கும் உண்டு. இவர் தந்தையும் மல்யுத்த வீரர்தான். ஏழு வயதிலேயே கோதாவில் இறங்கியவர், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தன் தேசத்தின் கனவைச் சுமந்து ஒலிம்பிக் அரங்கில் ஏறப்போகிறார். பஞ்ரங் பூனியா ஃபிட்டாக இருந்தால், 65 கிலோ ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் நிச்சயம்.

வினேஷ் போகத் - மல்யுத்தம்
ரியோ ஒலிம்பிக்கில் முழங்கால் காயத்தின் காரணமாக காலிறுதியில் தோற்று வெளியேறினார், அப்போது 21 வயதே ஆகியிருந்த இளம் வினேஷ். அதன்பிறகு வழங்கப்பட்ட அர்ஜுனா விருதையும்கூட வீல்சேரில் வந்துதான் வாங்கினார். ஆனால், இடைப்பட்ட ஆண்டுகளில் மீண்டும் எழுந்து மிரட்டத் தொடங்கிவிட்டார். அப்போது 48 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றவர், டோக்கியோவில் 53 கிலோ பிரிவில் கலந்துகொள்கிறார்.
சௌரப் சௌத்ரி - துப்பாக்கி சுடுதல்
19 வயதுதான். ஆனால், வைக்கும் குறி தவறுவதே இல்லை. தங்கத்தைத் துண்டாக குறிவைத்துத் தூக்கிவிடுகிறார் சௌரப். 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றபோது ஒட்டுமொத்த நாடும் அதிசயத்து நின்றது. காரணம், இந்தியாவுக்காக இளம் வயதில் தங்கம் வென்றவர் என்ற சாதனையை படைத்திருந்தார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனி நபர் பிரிவில் பங்கேற்கும் சௌரப், கலப்பு அணி பிரிவில் மனு பாக்கருடன் இணைந்து களமிறங்குகிறார்.

மனு பாக்கர் - துப்பாக்கி சுடுதல்
மனு பாக்கர் துப்பாக்கியில் இருப்பதெல்லாம் பதக்கத்தை நோக்கிப் பாயும் தோட்டாக்கள்தான். இவரும் சௌரப் சௌத்ரியும் சேர்ந்துவிட்டால் தங்க மழைதான். எவ்வளவு பெரிய தொடராக இருந்தாலும், எவ்வளவு பெரிய எதிராளிகளாக இருந்தாலும் ஜஸ்ட் லைக் தட் டீல் செய்கிறார்கள். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனி நபர் பிரிவு, கலப்பு அணி மட்டுமல்லாமல் 25 மீட்டர் பிஸ்டல் போட்டி என 3 பிரிவுகளில் பங்கேற்கிறார்.
இளவேனில் வாளறிவன் - துப்பாக்கி சுடுதல்
இதுவரை தமிழக வீரர்கள் யாரும் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றதில்லை. ஆனால், இம்முறை அந்த வரலாறை மாற்றப்போகிறார் இளவேனில். 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் உலகின் நம்பர் 1. 2019-ல் அடுத்தடுத்து 2 தங்கப் பதக்கங்கள் வென்று உலக அரங்கில் தன்னை அறிவித்தவர், தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். கடலூரைப் பூர்வீகமாகக் கொண்ட இளவேனிலுக்கு 21 வயதுதான். லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ககன் நரங் இவருடைய குரு. பதக்கம் வெல்லும் வித்தையைக் கற்றுக்கொடுக்காமலா விட்டிருப்பார்!

அபிஷேக் வெர்மா - துப்பாக்கி சுடுதல்
பெரும்பாலானவர்கள் அபிஷேக் வெர்மாவின் பெயரைச் சொல்லமாட்டார்கள். இளம் பட்டாளம் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருப்பதால் அவர்கள் மீதுதான் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால், 31 வயதான அபிஷேக், அனைத்து திறமைகளையும் தன்னகத்தே கொண்டிருப்பவர். இம்முறை ஏதேனும் ஆச்சர்யம் ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. இவரும் இரண்டு பிரிவுகளில் பங்கேற்கிறார்.
மேரி கோம் - குத்துச்சண்டை
Age is just a number என்பதை உணர்த்திக்கொண்டே இருக்கிறார் மேரி கோம். 38 வயதிலும் இந்தியாவுக்காக இரண்டாவது ஒலிம்பிக் மெடல் வாங்கவேண்டும் என்ற உத்வேகத்தோடு டோக்கியோ சென்றிருக்கிறார். ஃப்ளைவெயிட் பிரிவில் பங்கேற்கும் மேரி, 3 போட்டிகளில் வென்றாலே ஒரு பதக்கம் உறுதியாகிவிடும். ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவருக்கு அது அவ்வளவு கடினமாக இருந்துவிடுமா என்ன!

அமித் பங்கல் - குத்துச்சண்டை
இந்த ஒலிம்பிக் தொடருக்கு நம்பர் 1 வீரராகச் செல்லும் பல்வேறு இந்தியர்களில் அமித் பங்கல் ஒருவர். குத்துச்சண்டையின் 52 கிலோ எடைப் பிரிவில் இந்த 25 வயது ஹரியானா வீரர் தங்கம் வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. 2020-ல் ஜெர்மனியில் நடந்த பாக்சிங் உலகக் கோப்பையில் தங்கம் வென்றார். தொடர்ந்து தன்னுடைய செயல்பாட்டில் மெறுகேறிக்கொண்டே இருப்பதால், நிச்சயம் விஜேந்தர் சிங் போல மெடலோடு வருவார் என்று நம்புகிறார்கள்.
பி.வி.சிந்து - பேட்மின்டன்
ரியோவில் தவறவிட்ட தங்கத்தை டோக்கியோவில் வேட்டையாடும் வேட்கையோடு காத்திருக்கிறார் பி.வி.சிந்து. சில்வர் சிந்து என்று தன்மீதான விமர்சனத்துக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் 2019 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று அசத்தினார். ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பவர்களில் சிந்துவுக்கு ஆறாவது தரநிலை வழங்கப்பட்டிருக்கிறது. குரூப் பிரிவும் எளிமையாகவே அமைந்திருக்கிறது. அதனால், சிந்துவுக்கு இரண்டாவது பதக்கம் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கலாம்.