Published:Updated:

முதல் நாளில் வெள்ளி... கடைசி நாளில் தங்கம்... டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதித்த இந்தியர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா!
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் மொத்தம் 126 வீரர்கள் 18 விளையாட்டுகளில் கலந்துகொண்டனர். இதில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்கள் வென்று இதுவரையிலான ஒலிம்பிக்கில் அதிக பட்ச பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா.

2012 லண்டன் ஒலிம்பிக்ஸில் இந்தியா 6 பதக்கங்களை வென்றிருந்தது. ஒலிம்பிக் வரலாற்றில் ஒரே ஒலிம்பிக்கில் இந்தியா அந்த முறைதான் அதிகபட்ச பதக்கங்களை வென்றிருந்தது. டோக்கியோ ஒலிம்பிக்கில் அதை முறியடித்து 7 பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா. டோக்கியோ ஒலிம்பிக்கை இந்தியாவின் வரலாற்று பெருமையாக மாற்றிய வீரர்/வீராங்கனைகளைப்பற்றி தொகுப்பு இங்கே!

மிராபாய் சானு
மிராபாய் சானு

மிராபாய் சானு


டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் நாளிலேயே இந்தியாவின் பதக்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருந்தார் மிராபாய். வெயிட்லிஃப்ட்டிங்கில் 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவே முகழ்ச்சியில் மூழ்கவைத்தார். 2016 ரியோ ஒலிம்பிக்கிலுமே மிராபாய் பங்கேற்றிருந்தார். ஆனால், அப்போது அவரால் பளுவை முழுமையாகக் கூடத் தூக்க முடியவில்லை. 6 வாய்ப்புகளில் ஐந்தில் பளுவை தூக்க முடியாமல் தோல்வி முகத்தோடு வெளியேறியிருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் கடுமையாக பயிற்சி செய்து தன்னுடைய பிரிவில் க்ளீன் & ஜெர்க்கில் உலக சாதனையே செய்திருந்தார். ரியோவில் தவறவிட்டதை டோக்கியோவில் சாத்தியப்படுத்த வேண்டும் என்கிற தீர்க்கத்தோடு களமிறங்கியவர் 202 கிலோ பளுவை தூக்கி சாதித்தும் காட்டினார். மணிப்பூரில் எளிய குடும்பத்தில் பிறந்து விறகு சுமந்தவர் இப்போது தேசத்தின் பெருமையாக உயர்ந்து நிற்கிறார்.

பிவி சிந்து
பிவி சிந்து

பி.வி.சிந்து


ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று ஏற்கெனவே வரலாறு படைத்திருந்தார். ஆனால், இந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்பாக அவர் அவ்வளவு சிறப்பான ஃபார்மில் இல்லை. தன்னைவிட தரவரிசையில் கீழே இருக்கும் வீராங்கனைகளிடமெல்லாம் தோற்றிருந்தார். ஆனால், ஒலிம்பிக் என்று வந்தவுடன் நெருப்பாக மாறிவிட்டார். காலிறுதிப் போட்டிகள் வரை ஆடிய அத்தனை போட்டிகளிலும் நேர் செட் கணக்கில் வென்றிருந்தவர், அரையிறுதியில் மட்டுமே தோற்றிருந்தார். வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் மீண்டும் விஸ்வரூபமெடுத்தார். நேர் செட் கணக்கில் வென்று இரண்டாவது ஒலிம்பிக் பதக்கத்தை கைப்பற்றினார். மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு பிறகு அடுத்தடுத்த ஒலிம்பிக்க்குகளில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்தியர் எனும் பெருமையை பெற்றார்.

லவ்லினா போர்கோஹெய்ன்

லவ்லினா போர்கோஹெய்ன்
லவ்லினா போர்கோஹெய்ன்

குத்துச்சண்டையில் எல்லாருடைய கவனமும் மேரி கோமின் மீது மட்டுமே இருக்க சத்தமே இல்லாமல் சரித்திரம் படைத்தார் லவ்லினா. வெல்டர் வெயிட் பிரிவில் வெண்கலம் வென்று இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார். முகமது அலியின் ரசிகையான இவர் அசாமைச் சேர்ந்தவர். அசாமிலிருந்து ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றிருந்தார். பதக்கம் வென்றதன் மூலம் அசாம் சார்பில் இந்தியாவிற்கு ஒலிம்பிக் பதக்கம் பெற்றுக்கொடுத்த முதல் நபர் எனும் பெருமையையும் பெற்றார்.

இந்திய ஹாக்கி அணி (ஆண்கள்)
இந்திய ஹாக்கி அணி (ஆண்கள்)

இந்திய ஹாக்கி அணி (ஆண்கள்)


இந்த ஒலிம்பிக்கின் மிகப்பெரிய ஆச்சர்யம் ஹாக்கி அணிதான். நாக் அவுட் சுற்று வரை முன்னேறுவார்கள் என கணிக்கப்பட்டிருந்தாலும் பதக்கம் வெல்வார்கள் என யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவுடன் 7-1 என மோசமாக தோற்றதிலிருந்து மீண்டு வந்து மூன்று போட்டிகளில் தொடர்ந்து வென்று நாக் அவுட் சுற்றுக்குத் தகுதிப்பெற்றனர். அரையிறுதியில் பெல்ஜியத்துடன் தோல்வியை தழுவியிருந்தாலும் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஜெர்மனியை 5-4 என அட்டகாசமாக வீழ்த்தினர். கடைசி நொடி வரை பரபரப்பின் உச்சத்தை தொட்டிருந்த இந்த போட்டியில் வென்று வெண்கல பதக்கத்தை பெற்றது இந்திய அணி. 41 ஆண்டு கால பதக்க ஏக்கத்திற்கு தீர்வாக அமைந்தது இந்த வெற்றி.

ரவிக்குமார் தஹியா
ரவிக்குமார் தஹியா
Aaron Favila

ரவிக்குமார் தஹியா


ஒலிம்பிக் போட்டிகளில் சமீபமாக இந்தியாவுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்து வருவது மல்யுத்த போட்டிகள்தான். ஹரியானாவின் புழுதிக்காட்டில் புரண்டெழுந்த சிங்கங்களாக இந்திய மல்யுத்த வீரர்கள் அசத்தி வருகின்றனர். ரவிக்குமார் தஹியா மீதும் மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது. அதை பொய்யாக்காத விதத்தில் வெள்ளி வென்று பெருமை சேர்த்திருக்கிறார். காலிறுதி போட்டியில் பல்கேரிய வீரரை தோற்கடித்தவர், அரையிறுதியில் கஜகஸ்தான் வீரருக்கு எதிராக ஃபால் முறையில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி வீரருடன் துரதிஷ்டவசமாக தோற்ற போதும் வெள்ளியை வென்று சிறப்பித்திருந்தார்.

பஜ்ரங் புனியா
பஜ்ரங் புனியா
Aaron Favila

பஜ்ரங் புனியா


இவரும் ஹரியானாவைச் சேர்ந்த மல்யுத்த வீரரே. இந்தியாவின் உத்தேச பதக்க பட்டியலில் இவருடைய பெயரும் இடம்பெற்றிருந்தது. உறுதியாக பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றப்படியே கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி வெண்கலம் வென்று கொடுத்திருந்தார். ''இந்த வெண்கலத்தில் எனக்கு திருப்தியில்லை. தங்கம் வெல்லவே டோக்கியோவுக்கு வந்தேன்'' என தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார் பஜ்ரங். அடுத்த பாரிஸ் ஒலிம்பிக்கிற்கும் தங்கப்பதக்கத்தை மனதில் வைத்து வெறித்தனமாக தயாராகப் போகிறார் பஜ்ரங் புனியா.

நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா
Martin Meissner

நீரஜ் சோப்ரா

இந்த ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை கண்டிராத மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. தடகளத்தில் இந்தியாவின் நூற்றாண்டு பதக்க ஏக்கத்தை போக்கியிருக்கிறார், அதுவும் தங்கப்பதக்கத்தை வென்று! அபினவ் பிந்த்ராவுக்கு அடுத்து தனிநபர் பிரிவில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் வென்று கொடுக்கும் இரண்டாவது வீரர் எனும் பெருமையை பெற்றார் நீரஜ். தகுதிச்சுற்றிலிருந்தே மிகச்சிறப்பாக ஈட்டியை வீசியிருந்தார். தகுதிச்சுற்று இறுதிச்சுற்று இரண்டிலுமே அவரைத் தாண்டி மற்ற நாட்டு வீரர்களால் ஈட்டியை வீச முடியவில்லை. இப்போது நீரஜுக்கு 23 வயதுதான் ஆகிறது. நிச்சயம் அடுத்தடுத்த ஒலிம்பிக்கிலும் பங்கேற்பார். அவற்றிலும் அடுத்தடுத்து வென்று தங்கவேட்டை நடத்த வேண்டும் என்பதை ஒட்டுமொத்த இந்தியாவின் விருப்பம்.

ஒட்டுமொத்த தேசத்தையே வேற்றுமைகளை மறந்து ஒன்றிணைத்து கொண்டாட வைத்திருக்கும் இந்த வீரர் வீராங்கனைகளின் புகழ் என்றைக்கும் வரலாற்றில் நிலைத்திருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு