Published:Updated:

Tokyo Olympics : மானத்தை மீட்டெடுக்க... ரோஷமுடன் களமிறங்கும் இந்திய ஹாக்கி பரம்பரை!

உலக அரங்கில் ஹாக்கி என்றாலே இந்தியாவை கைக்காட்டினார்கள். ஆனால், இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்று 41 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த முறை பழைய பெருமையை மீட்க காத்திருக்கிறது மன்ப்ரீத் சிங் தலைமையிலான அணி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

1928, 1932, 1936, 1948, 1952, 1956 என தொடர்ச்சியாக ஆறு முறை இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிருந்தது. வெற்றி என்றால் சாதாரண வெற்றியல்ல. அத்தனையும் எதிரணியை மொத்தமாக தடமே தெரியாமல் தோற்கடித்து வென்றவை. இந்த 6 தொடர்களிலும் சேர்த்து இந்திய அணி 178 கோல்களை அடித்திருந்தது. பதிலுக்கு வெறும் 7 கோல்களை மட்டுமே வாங்கியிருந்தது. வீழ்த்தவே முடியாத எஃகு கோட்டையாக மற்ற அணிகளை மிரளச் செய்யதது இந்தியா.

இந்திய ஹாக்கி அணியை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகமே கொண்டாடியது. வெளிநாடுகளில் ஒலிம்பிக் போட்டியில் ஆடும்போது தயான்சந்த், பல்பீர் சிங் போன்ற இந்திய வீரர்களுக்கு வெளிநாட்டினர் போஸ்டர் அடித்து ஆராவாரம் செய்திருக்கின்றனர். ஒலிம்பிக்கில் மட்டும் இதுவரை 11 பதக்கங்களை வென்றிருக்கிறது இந்திய அணி. அதில் 8 தங்கப்பதக்கங்கள். வேறெந்த அணியாலும் இன்னமும் இந்த ரெக்கார்ட்களை உடைக்க முடியவில்லை. ஒலிம்பிக்கில் இந்தியா தனி சாம்ராஜ்யம் நடத்திக் கொண்டிருந்தது. ஆனால், இதெல்லாம் 1980 மாஸ்கோ ஒலிம்பிக் வரை மட்டும்தான். அந்த ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றிருந்தது. அதன்பிறகு, ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியால் பெரிதாக ஒன்றுமே செய்ய முடியவில்லை.

Captain Manpreet Singh
Captain Manpreet Singh

1980-ம் ஆண்டுக்கு பிறகு இப்போது வரை, ஒலிம்பிக்கின் அரையிறுதி வரைக்கூட தகுதிப்பெறவில்லை இந்தியா. 2008 ஒலிம்பிக்கிற்கு தகுதியே பெற முடியாமல் வீழ்ச்சியின் அடி ஆழத்தை தொட்டிருந்தது. இந்தியாவின் ஒலிம்பிக் வரலாற்றில் மிகச்சிறந்த தொடர் 2012 லண்டன் ஒலிம்பிக். ஆனால், அதிலும் ஹாக்கி அணி சொதப்பி 12 வது இடமே பெற்றிருந்தது. கடந்த ரியோ ஒலிம்பிக்கில் 8 வது இடம். இப்படி வாழ்ந்து கெட்ட குடும்பமாக ஒலிம்பிக்கில் தொடர்ந்து சொதப்பும் இந்திய அணி இந்த முறை கொஞ்சம் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் மன்ப்ரீத் சிங் தலைமையில் களமிறங்கும் இந்திய ஹாக்கி அணியின் சராசரி வயது 26. இளமைமிக்க துடிப்பான அணியோடு இத்தனை வருடங்களாக இழந்திருந்த கௌரவத்தை மீட்க களமிறங்குகிறது இந்திய அணி.

2016-க்குப் பிறகு இந்த இந்திய அணி நம்பிக்கையளிக்கும் வகையில் சில சிறப்பான வெற்றிகளை பெற்று வருகிறது. 2017-ல் ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி, 2018-ல் ஆசிய சாம்பியன்ஸ் ட்ராஃபியை வென்றிருந்தது. இடையில், இந்தியாவில் சொந்தமண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் காலிறுதி போட்டியோடு வெளியேறியிருந்தது. இந்த தோல்வி ஏமாற்றமளித்தாலும், இதன்பிறகு பயிற்சியாளர் மாற்றப்பட்டும் புதிய உத்வேகத்தோடும் இந்திய அணி பயணித்து வருகிறது.

2019-ல் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரஹாம் ரீட் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவர் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணிக்கு பயிற்சியாளராக இருந்து அந்த அணியை நம்பர் 1 ஆக்கியவர். இவரது பயிற்சியின் கீழ் இந்தியா 2019 FIH சூப்பர் லீகின் அத்தனை போட்டிகளிலும் வென்று அசத்தியிருந்தது. ஜப்பான், பெல்ஜியம், தென்னாப்பிரிக்கா போன்ற டாப் அணிகளையும் பந்தாடியிருந்தது. லாக்டெளனுக்கு முன்பு கடைசியாக ஆடிய தொடர்களில் சிறப்பாக ஆடியிருப்பதால் பாசிட்டிவாகவே இருக்கிறது இந்திய அணி.

மன்ப்ரீத் சிங்கே இந்திய அணியின் பெரும் நம்பிக்கை. உலகளவில் 2019-ம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதையும் பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக ஃபார்வர்ட் வீரர் மந்தீப் சிங் அதிக கவனம் பெறுகிறார். இப்போதைய இந்திய அணியில் 82 கோல்களை அடித்து அதிக கோல்களை அடித்தவர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். நீண்ட காலமாக சிறப்பாக செயல்பட்டு வரும் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், அனுபவமிக்க டிஃபண்டர்களான ரூபிந்தர் பால் சிங், ஹர்மன்ப்ரீத் சிங், பீரேந்திர லக்ரா போன்றோரும் இந்திய அணிக்கு பெரும்பலமாக இருக்கின்றனர்.

Mandeep Singh
Mandeep Singh

அனுபவ வீரர்கள் முழுவதையும் டிஃபன்ஸில் வைத்திருப்பதால் அட்டாக்கில் இந்திய அணி எப்போதுமே கொஞ்சம் பலவீனமாகவே இருக்கும். இந்த முறை ஃபார்வர்ட் ஆடப்போகும் 5 வீரர்களுக்குமே இது முதல் ஒலிம்பிக் என்பதால் கொஞ்சம் கூடுதல் அழுத்தம் இருக்கலாம். ஆனால், பயிற்சியாளர் ரீட் அட்டாக்கில் கூடுதல் கவனம் செலுத்தி சில யுக்திகளை வகுத்திருப்பதாகவும் தெரிகிறது.

இந்திய அணி தனது முதல் போட்டியில் நியுசிலாந்து அணியை நாளை எதிர்கொள்ளவிருக்கிறது. இழந்த பெருமைகளையும் புகழையும் மீட்பதற்காக யுத்தம் செய்யப்போகும் மன்ப்ரீத் சிங் படை, தயான்சந்த்தின் இந்திய அணி செய்ததை போலவே எதிராளிகளை எழுந்தரிக்க முடியாதபடிக்கு அடிக்க வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு