Published:Updated:

ஒலிம்பிக்கில் நிறைவேறிய இந்தியாவின் பெருங்கனவு... ஹாக்கி வெண்கலம் சாத்தியமான திக் திக் நிமிடங்கள்!

மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணியின் இந்த வெற்றி இந்தியாவில் மீண்டும் ஹாக்கியை உயிர்த்தெழ செய்யும். இனி தோனிக்கும், கோலிக்கும் இணையாக ஸ்ரீஜேஸும் சிம்ரன்ஜித்தும் கொண்டாடப்படுவார்கள்!

மிகப்பெரிய வரலாற்று வெற்றியை சாத்தியப்படுத்தியிருக்கிறது இந்திய ஹாக்கி அணி. ஜெர்மனிக்கு எதிரான போட்டியை 5-4 என வென்று ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றிருக்கிறது. கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு கால பதக்க ஏக்கத்தை தீர்த்து இந்தியாவை திருவிழா கோலமாக்கியுள்ளது இந்திய அணியின் வெற்றி.

பெல்ஜியத்திற்கு எதிரான அரையிறுதி போட்டியிலேயே முதல் கோலை இந்திய அணி அடித்திருந்தது. கடைசி நொடி வரை விட்டே கொடுக்காமல் போராடியிருந்தது. அதனால் இந்திய அணி எப்படியும் இந்தப் போட்டியை வென்றுவிடும் என்ற நம்பிக்கை இருந்தது.

தொடக்கம் இந்திய அணிக்கு சுமாராகவே இருந்தது. போட்டி ஆரம்பித்த அடுத்த நிமிடமே ஜெர்மனியின் டிமுர் ஓருஸ் ஒரு கோலை அடித்தார். 1-0 என ஜெர்மனி லீட் எடுத்தது.

இதன்பிறகு, இந்திய அணிக்கும் ஜெர்மனிக்கும் மாறி மாறி பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், இரண்டு அணியாலுமே அவற்றை கோலாக மாற்ற முடியவில்லை. முதல் பாதியை ஜெர்மனி முன்னிலையோடு முடித்தது.

இந்திய ஹாக்கி அணி
இந்திய ஹாக்கி அணி
John Minchillo

இரண்டாம் பாதியின் தொடக்கத்திலேயே இந்தியாவும் ஒரு கோலை அடித்து போட்டிக்குள் வந்தது. சிம்ரன்ஜித் சிங் அற்புதமாக ஒரு ஃபீல்ட் கோலை அடித்து 1-1 என போட்டியை சமமாக்கினார். ஆனால், ஜெர்மனி விடவில்லை. பதிலுக்கு 24, 25 நிமிடங்களில் அடுத்தடுத்த இரண்டு கோல்களை அடித்து லீட் எடுத்தது.

இந்தியாவும் விடுவதாக இல்லை. இரண்டாம் பாதியின் கடைசி மூன்று நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்து மிரட்டிவிட்டனர்.
இந்திய ஹாக்கி அணி
இந்திய ஹாக்கி அணி

இரண்டுமே பெனால்டி கார்னரில் வந்தவை. சிம்ரன்ஜித் சிங் ஒரு பெனால்டியை பெற்றுக்கொடுக்க ஹர்மன்ப்ரீத்தின் ட்ராக் ஃப்ளிக்கை ஹர்திக் சிங் சிறப்பாக ஃபினிஷ் செய்து கோலாக்கினார். இன்னொரு பெனால்டியை ஹர்மன்ப்ரீத் நேரடியாக ட்ராக் ஃபிளிக்கின் மூலமே கோலாக்கினார்.

3-3 என போட்டியை சமமாக்கி பயங்கர உத்வேகத்துடன் இரண்டாம் பாதியை முடித்தது இந்தியா. விட்ட இடத்திலிருந்தே மூன்றாம் பாதியை தொடர்ந்தது. வந்த வேகத்திலேயே இரண்டு கோல்கள். ஒரு பெனால்டி ஸ்ட்ரோக்கை ரூபிந்தர் கோலாக மாற்ற, சுமித்திடமிருந்து பாஸ் வாங்கிய சிம்ரன்ஜித் ஒரு ஃபீல்ட் கோலை போட்டார். அவ்வளவுதான்! ஆட்டம் முழுவதுமாக இந்தியாவின் கைக்குள் வந்தது.

மூன்றாம் பாதியின் கடைசியில் ஜெர்மனிக்கு தொடர்ச்சியாக மூன்று பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தன. மூன்றையுமே இந்திய டிஃபண்டர்களும் ஸ்ரீஜேஸும் மிகச்சிறப்பாக தடுத்தனர்.

இந்தியா வென்றுவிடும் என்ற நம்பிக்கையோடு நான்காம் பாதி ஆரம்பித்தது. ஆனால், ஜெர்மனி இன்னொரு கோலை போட்டு 4-5 எனத் திகிலூட்டியது.

கடைசி நிமிடங்கள் நெருங்க நெருங்க பரபரப்பு கூடியது. இரண்டு அணிகளுக்கும் ரிவியூவ் இல்லாததால் நடுவரிடம் குமுறினார்கள். இரண்டு அணி வீரர்களுக்கும் இடையே வார்த்தை மோதல்களும் வலுத்தன. இன்னும் ஒரு கோலை ஜெர்மனி அடித்தால் இந்தியாவின் பதக்கக்கனவு தகரக்கூடும் என்ற சூழலில் கடைசி நிமிடத்திற்குள் ஆட்டம் சென்றது. கடைசி 6 நொடிகள் எஞ்சியிருந்த போது ஜெர்மனிக்கு ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு.

ஸ்ரீஜேஸ்
ஸ்ரீஜேஸ்
இதயம் பலகீனமானவர்கள் கதையே முடிந்துவிடும் அளவுக்கு பரபரப்பு. எழுதப்பட்ட வரலாறு உரைந்துபோய் நிற்கிறது. ஆனால், பிரச்னை இல்லை. சூப்பர் ஸ்டார் ஸ்ரீஜேஸ் சுமூகமாக முடித்து வைத்தார்.
ஹாக்கி: 41 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு படைத்த இந்தியா... ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை!

41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்லது.

1972 ஒலிம்பிக்கில் இந்திய அணி வெண்கலம் வென்றிருந்தது. அதுவரை உலக அரங்கில் ஹாக்கிக்கு பெயர்போன நாடாக இந்தியாவே இருந்தது. ஒலிம்பிக்கில் பதக்கம் இல்லாமல் இந்திய ஹாக்கி அணி நாடு திரும்பியதே இல்லை. 1972க்கு பிறகு ஹாக்கியில் மிகப்பெரிய மாற்றம் உண்டானது. இயற்கையான புல்தரையில் ஆடுவதை விடுத்து, செயற்கையான புல் போர்வைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்திய ஹாக்கி அணி
இந்திய ஹாக்கி அணி
John Locher

கரடுமுரடாக மரபு சார்ந்த பாரம்பர்ய முறையில் ஆடி பழக்கப்பட்ட இந்திய அணியால் நவீன மாற்றத்திற்கு தங்களை தகவமைத்துக் கொள்ள முடியவில்லை. 1976 ஒலிம்பிக்கில் மோசமாகத் தோற்று வெளியேறியது. 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கை பல நாடுகளும் புறக்கணித்தன. மொத்தம் ஐந்தே நாடுகளே அதில் கலந்துக்கொண்டன. அதில் இந்திய அணி தங்கம் வென்றிருந்தது. போட்டியளிக்கக்கூடிய அணிகள் இல்லாததால் இந்த வெற்றிக்கு அவ்வளவு மதிப்பில்லை. இந்திய ஹாக்கியின் வீழ்ச்சி 1972 லிருந்தே தொடங்கிவிட்டதாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும்.

அதனாலயே மன்ப்ரீத் சிங் தலைமையிலான அணி பெற்றிருக்கும் வெற்றி அரைநூற்றாண்டு ஏக்கத்திற்கு கிடைத்த பலனாக கருதப்படுகிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு