Published:Updated:

பாராலிம்பிக் 2020: 19 பதக்கங்களுடன் வரலாறு காணாத சாதனை படைத்திருக்கும் இந்தியா!

டேபிள் டென்னிஸில் பவினா படேலின் போராட்டத்தோடு தொடங்கிய இந்தியா, பிரமோத் பகத் மற்றும் பாலக் கோலியின் போராட்டத்தோடு டோக்கியோ பாராலிம்பிக்கை முடித்திருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் முடிவடைகின்றன. இந்திய வீரர்/வீராங்கனைகள் தங்களுடைய போட்டிகள் அனைத்தையும் முடித்திருக்கின்றனர். இன்று மேலும் இரண்டு பதக்கங்களை வென்றிருக்கின்றனர்.

SL4 பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சுஹாஸ் யத்திராஜ் பிரான்ஸ் வீரர் மசூர் லூகாஸுடன் மோதியிருந்தார். முதல் செட்டை கொஞ்சம் எளிமையாகவே 21-15 என வென்றிருந்தார் சுஹாஸ். ஆனால், அடுத்தடுத்த செட்களில் லூகாஸ் மீண்டு வந்து மிரட்டினார். சுஹாஸ் போராடி 17-21 என வீழ்ந்தார். முடிவை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் இருவரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்ததால் ஆட்டம் பரபரப்பாக சென்றது. ஆனால், இந்த செட்டிலும் 15-21 என லூகாஸ் வென்றார். இதனால் சுஹாஸ் யத்திராஜுக்கு வெள்ளிப்பதக்கமே கிடைத்தது.

பாராலிம்பிக் 2020
பாராலிம்பிக் 2020

SH6 பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகரும் ஹாங்காங் வீரர் ஜூ மானும் மோதியிருந்தனர். இந்தப் போட்டியும் மூன்றாவது செட் வரை சென்றிருந்தது. முதல் செட்டை 21-17 என வென்றிருந்த கிருஷ்ணா மூன்றாவது செட்டையும் 21-17 என வென்றிருந்தார். இதனால் 2-1 என போட்டியை வென்று தங்கப்பதக்கத்தையும் வென்றார்.

பேட்மிண்டனில் மட்டும் 2 தங்கப்பதக்கங்களுடன் மொத்தமாக 4 பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா.

தனிநபர் பிரிவில் வெண்கல பதக்கத்திற்காக நடைபெற்ற போட்டியில் இந்திய வீரர் தருண் தோல்வியை தழுவியிருந்தார். பிரமோத் பகத் மற்றும் பாலக் கோலி இணை ஆடிய வெண்கல பதக்கத்திற்கான போட்டியிலும் தோல்வியே ஏற்பட்டிருந்தது. ஆனால், இவர்கள் இருவரும் போராடிய விதம் ஊக்கம் அளிக்கக்கூடியதாக இருந்தது. 21-23, 19-21 என நெருங்கி வந்தே தோல்வியை தழுவியிருந்தனர். டேபிள் டென்னிஸில் பவினா படேலின் போராட்டத்தோடு தொடங்கிய இந்தியா பிரமோத் பகத் மற்றும் பாலக் கோலியின் போராட்டத்தோடு டோக்கியோ பாராலிம்பிக்கை முடித்திருக்கிறது.

பிரமோத் பகத்
பிரமோத் பகத்
Twitter/PramodBhagat

இந்த டோக்கியோ பாராலிம்பிக் இந்தியாவிற்கு வரலாற்று சிறப்புமிக்கதாகவே அமைந்திருக்கிறது. ஒலிம்பிக்/பாராலிம்பிக் வரலாற்றில் இந்தியா இதுவரை வென்றிராத அளவுக்கு பதக்கங்களை வென்றிருக்கிறது.

1968 முதல் 2016 வரைக்குமே பாராலிம்பிக்கில் இந்தியா 4 தங்கங்களுடன் 12 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது. ஆனால், இந்த டோக்கியோ பாராலிம்பிக்கில் மட்டும் 5 தங்கப்பதக்கங்களோடு மொத்தமாக 19 பதக்கங்களை வென்றிருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு