Published:Updated:

"ரேஷன் கார்டும், டிரைவிங் லைசன்ஸும் வேணா இந்த நாடு கொடுக்கும்... ஆனா?!" - Mirabai Chanu biopic - 2

Mirabai Chanu ( AP )

சாதனையாளர்களின் வாழ்க்கையை படமாக்குவதுதான் இன்றைய டிரெண்ட். ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவின் பயோபிக் எப்படி இருக்கும்?! இது பாகம் இரண்டு.

"ரேஷன் கார்டும், டிரைவிங் லைசன்ஸும் வேணா இந்த நாடு கொடுக்கும்... ஆனா?!" - Mirabai Chanu biopic - 2

சாதனையாளர்களின் வாழ்க்கையை படமாக்குவதுதான் இன்றைய டிரெண்ட். ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவின் பயோபிக் எப்படி இருக்கும்?! இது பாகம் இரண்டு.

Published:Updated:
Mirabai Chanu ( AP )
மீராபாய் சானு பயோபிக் - பாகம் 1: "உன் பொண்ணு இரும்பு மனுஷிப்பா"

மீராபாய் சானுவின் வீடு. வாசலில் ஏழெட்டு குழந்தைகள் கால்பந்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். மீராவின் பெற்றோர், உறவினர்கள் மூவர், வாத்தியார் வீட்டில் அமர்ந்திருக்கிறார்கள். சில நிமிடங்கள் மௌனம் நிலவுகிறது. விளையாடும் குழந்தைகளின் சத்தம் மட்டும் பின்னணியில் கேட்டுக்கொண்டிருக்கிறது. டீ குடித்துக்கொண்டிருந்த டம்ப்ளரை கீழே வைத்துவிட்டுப் பேசுகிறார் கிரித்தியின் அண்ணன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கிரித்தியின் அண்ணன்: "நீங்க ரெண்டு பேரும் தெளிவோடதான் இந்த முடிவு எடுத்திருக்கீங்களா... கொண்டுபோய் விளையாட வைக்கிறேனு சொல்றீங்க?"

கிரித்தி: "அவளுக்கு திறமை இருக்குதுணே. எல்லோருமே அதைத்தான் சொல்றாங்க. அந்த வெயிட்டலாம் தாம்பியாலயே தூக்க முடியாது!"

கிரித்தியின் அண்ணன்: "அதுக்குனு பொம்பளப் புள்ளையப் போய் விளையாட்டுக்கு அனுப்பப்போறியா"

தாம்பி: "பொம்பளப் புள்ள படிக்கிறதுதான் அநாவசியம். இப்போ விளையாடுறதும் அநாவசியமா"

கிரித்தியின் அண்ணி: "நீ சும்மா இரு தாம்பி. அவங்க பேசட்டும்!"

தாம்பி (மற்றவர்களுக்குக் கேட்காத வகையில்): "இதோ நான் பொளங்குற ஊட்டுக்குள்ளயே நான் பேசக்கூடாது"

கிரித்தியின் அண்ணன்: "நான் படிக்க வைனுதான் தாம்பி சொல்றேன்". வாத்தியாரைக் காட்டி - "இந்தா இப்படியொரு வாத்தியாரு அமைஞ்சிருக்காரு. நல்லா படிக்க வை"

கிரித்தி: "அவ சுமாராத்தான்ணே படிக்கிறா. நல்லா பண்றத விட்டுட்டு, இன்னொரு விஷயத்தைத் திணிக்கணுமா"

திடீரென வீட்டுக்குள் பந்து வந்து விழுகிறது. ஒரு சிறுவன் வந்து அதை எடுத்துச் செல்கிறான்.

கிரித்தியின் அண்ணன்: "அட சுமாரா படிச்சாலும் நல்ல வேலை கிடைக்காம போயிடுமா. இப்போலாம் நம்ம புள்ளைங்க எல்லா பக்கமும் சென்னை, டெல்லினு வேலைக்குப் போகுதுங்க. இன்னொன்னு யோசி... 6 புள்ளைங்க வச்சிருக்க. என்ன செலவு பண்றது விளையாட்டுக்கு?"

அதைக் கேட்டதும் குறுக்கிடுகிறார் வாத்தியார்.

வாத்தியார்: "உங்க குடும்ப விஷயம்தான். நான் பேசுறது சரியா தப்பா தெரியல. இருந்தாலும் ஒரு விஷயம் சொல்றேன். உங்களுக்கு ரேஷன் கார்டையும், டிரைவிங் லைசன்ஸையும் வேணா இந்த நாடு கொடுக்கும். வேற எதுவும் கிடைக்காது.

வாய்ப்பு, மரியாதை எதையும் நீங்க எதிர்பார்க்க முடியாது. இங்க இருந்து எத்தனை பேரு நாடே கொண்டாடற அளவுக்கு வளந்திருக்கா சொல்லுங்க. நார்த் ஈஸ்ட்ல எத்தனை தொழிலதிபர் பாத்திருக்கீங்க, எத்தனை பிரதமர், ஜனாதிபதி பார்த்திருக்கீங்க, அட எத்தனை பாலிவுட் ஹீரோயின் பாத்திருக்கீங்க. சினிமாலாம் ஒரு வேலையானு கேட்பீங்க. ஆனா அங்ககூட உங்க புள்ளைங்க சைடு டான்ஸராத்தான் போக முடியும். படிச்சிட்டு வெளிய போனா உங்கள ஏத்துக்குவாங்கனு நினைக்காதீங்க.

விளையாட்டுல மட்டும்தான் உங்களுக்கான இடம் கிடைக்கும். இதே வெயிட்லிஃப்ட்டிங்ல குஞ்சரணி தேவின்ற பொண்ணு நிறைய பதக்கம் ஜெயிச்சுது. இப்போ மேரினு நம்ம மணிப்பூர் புள்ள பாக்சிங்ல உலக சாம்பியன் ஆகியிருக்கு. இவங்களை இந்தியன்னு தான் கொண்டாடுறாங்க. யாரும் வித்யாசமா பாக்குறது இல்ல. விளையாட்டுதான் இந்த ஊர்க்காரங்க ஜெயிக்க சரியான வழி. அங்கயும் கஷ்டம்தான். இல்லைனு சொல்லல. ஆனா, முட்டி மோதினா நிச்சயமா கதவு தொறக்கும். எனக்கு உங்க பொண்ணு மேல நம்பிக்கை இருக்கு மீரா தூக்கப் போறது வெயிட் மட்டும் இல்ல. உங்க சமுதாயத்தோடு நிலமையையும்தான். தயவு செஞ்சு மத்தவங்க சொல்றதுக்குலாம் யோசிக்காதீங்க!"

கிரித்தியின் அண்ணன் வாயடைத்துப் போய் வாத்தியாரைப் பார்க்கிறார்

தாம்பி: "டெனிஸ் அண்ணன் சொல்றது ரொம்ப கரெக்ட். ஊர் சுத்த வர்றவன்லாம் எங்களைப் பாத்து சீனாக்காரினுதான் சொல்றான். மூக்குல இருந்து எல்லாமே சப்பையா இருக்குனு கிண்டல் பண்றான். இவனுக மத்தியில படிச்சு மட்டும் என்ன பண்ணிட முடியும். அதுவுமில்லாம மீராவைப் பாத்தா 5 அடி கூட வளர மாட்டா போல. அவளைலாம் ஈசியா வாழ விட்றுவாங்களா? அவ வாழ்க்கைல பெருசா வரணும். அவ அண்ணன் சனதோம்பா கூடத்தான் ஃபுட்பால் ஆடறான். இவ விளையாட்றதுக்கு என்ன? எனக்கு மூணு வேளை சோறு இல்லாட்டியும் பரவால்ல. நீங்க அவளை பிராக்டீஸுல சேத்து விடுறீங்க!"

கிரித்தி உறுதியோடு தலையசைக்கிறார். கத்திக்கொண்டே கையில் பந்தோடு உள்ளே வருகிறாள் மீரா. "அம்மா நான் ஜெயிச்சிட்டேன்"

CUT

இம்பால் - குமன் லம்பக் மைதானம்

உள்ளரங்கு மைதானத்தில் பல சிறுவர்கள் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். கிரித்தி தன் மகளை அழைத்துச் செல்கிறார். அங்கிருக்கும் ஒரு பெண் பயிற்சியாளர் அருகே சென்று நிற்கிறார். அவரைக் கவனிக்கிறார் அந்த பயிற்சியாளர்.

பயிற்சியாளர்: "சொல்லுங்க சார். என்ன வேணும்"

கிரித்தி: "இங்க அனிதா கோச்"

பயிற்சியாளர்: "நான்தான் அனிதா. சொல்லுங்க"

கிரித்தி: "என் பேரு கிரித்திங்க. மணிப்பூர்ல நாங்போக்ல இருந்து வர்றோம். இது என் பொண்ணுங்க. மீரா... 12 வயசு ஆகுது. பெரிய பெரிய கட்டையையெல்லாம் அசால்டா தூக்குது. வெயிட்லிஃப்டிங் பிராக்டீஸ்ல சேக்கணும்னு ஆசை. விசாரிச்சதுல உங்ககிட்ட கூட்டிட்டு வர சொன்னாங்க. என் புள்ளைய நீங்க சேத்துக்கணும்"

அனிதா: "அப்டியா சார். சேத்துக்கலாம். ஆனா, அதுக்கு நாங்க டிரயல்ஸ் பாப்போம். அதுல உங்க புள்ள பாஸ் பண்ணிட்டா நிச்சயமா எடுத்துக்கலாம்"

கிரித்தி: "நிச்சயமா புள்ள பாஸ் பண்ணிடுங்க"

அனிதா (மீராவைப் பார்த்து): "என்ன வெயிட்லாம் பயங்கரமா தூக்குவீங்கலாமே. தூக்கலாமா?"

வேகமாகத் தலையாட்டுகிறாள் மீரா. அவளை ஜிம் எக்யூப்மென்ட்கள் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்கிறார்.

அனிதா: "அங்க அந்த வெயிட் பேக்லாம் இருக்கு பாரு. அதுல 20 கிலோ பேக் தூக்கிக் காட்டு பாப்போம்"

10 மீட்டர் தூரம் தள்ளி இருக்கும் அந்த பேக் நோக்கி நகர்கிறாள் மீரா.

கிரித்தி: "அதைத் தூக்கிட்டா சேத்துக்குவீங்களா மேடம்"

அனிதா: "அது மட்டும் போதாது சார். இன்னும்..."

சொல்லிக்கொண்டிருக்கும்போதே பின்னால் ஒரு சத்தம் கேட்கிறது. "மேடம்"

திரும்பிப் பார்த்தால் இரண்டு கைகளிலும் இரண்டு 20 கிலோ பேக்குகளைத் தூக்கிக்கொண்டு நிற்கிறாள் மீரா. கொஞ்சம் கூட அந்த எடையின் வலி தெரியாமல் அநாயசமாக அதைத் தாங்கி நிற்கிறாள். அனிதாவின் கண்கள் விரிந்து ஆச்சர்யத்தை பிரதிபலித்துக்கொண்டிருக்கின்றன.

அனிதா: "உங்க பொண்ணு செலக்டட் சார்"

CUT

மீராபாய் சானுவின் வீடு. இரவு நேரம். எல்லோரும் சாப்பிட அமர்ந்திருக்கிறார்கள்.

தாம்பி (மீராவிடம்): "இங்க இருக்கிற மாதிரிலாம் அங்க இருக்கக்கூடாது சரியா. ஒழுக்கமா இருக்கணும். பள்ளிக்கூடத்தைவிட, விளையாடுற இடத்துல ஒழுக்கத்த அதிகமா எதிர்பார்ப்பாங்கலாம். வாத்தியார் சொன்னாரு. விளையாட்டுத்தனமா இருக்கக்கூடாது மயிலு"

மீரா தலையாட்டுகிறாள்

கிரித்தி: "என்னென்ன சாப்பிடணும் சாப்பிடக்கூடாதுனு நாளைக்கு சொல்லி அனுப்புறேன்னு சொன்னாங்க. அதென்னமோ சொன்னாங்களே... அது நிறைய எடுத்துக்கணும்னு. அதென்ன..."

மீரா: "புரோட்டீன்"

தாம்பி: "அப்டீனா"

கிரித்தி: "நார்ச்சத்து மாதிரி அதுவும் ஒரு சத்தாம். பால், முட்டைலலாம் அதிகமா இருக்குமாம். இனிமேல் ராத்திரி அவளுக்கு இன்னும் ஒரு கிளாஸ் பால் சேத்து கொடு"

தாம்பி: "நாமளும் ரோஷமா போய் சேத்துட்டோம். நீ கட்டட வேலைக்குப் போயிட்டு இருக்க. 20 கிலோமீட்டர் இவ போக வரவே செலவாகும். போதாததுக்கு முட்டை, பால் கூடுதல் செலவு. சமாளிச்சிடுவோமா"

கிரித்தி: "நீதான் மூணு வேலையும் சாப்பிடாம இருப்பேன்னு சொன்னியே"

எல்லோரும் சிரிக்கிறார்கள்.

தாம்பி: "சிரிச்சீங்கனா பூராப் பேரையும் பட்டினி போட்டுடுவேன்"

சாப்பிட்டு முடித்ததும் எல்லோரும் வாசலில் அமர்ந்திருக்கிறார்கள். தாம்பி எல்லோருக்கும் பால் கொண்டுவந்து கொடுத்துவிட்டு அமர்கிறார். மீராவுக்கு மட்டும் இரண்டு கிளாஸ் கொடுக்கிறார்.

மீரா: "நீ குடிக்கலையாமா"

தாம்பி: "எனக்கு வேணாம்டா. உனக்குத்தான் இது முக்கியம். நீ நல்லா குடி!"

எழுந்து வந்து தன் கிளாசை மீராவிடம் நீட்டுகிறான் மூத்த அண்ணன் பியாந்த்.

மீரா: "என்ன?"

பியாந்த்: "உனக்குத்தான் இது முக்கியம். நீ நல்லா குடி"

தாம்பி: "என்னடா நக்கலா"

பியாந்த்: "நிஜமாத்தான் சொல்றேன்"

சொல்லிவிட்டு மீராவின் பக்கத்தில் கிளாசை வைக்கிறான்.

பியாந்த்: "நீ பெரிய ஆள் ஆன அப்புறம், என் வெற்றிக்கெல்லாம் அண்ணன் கொடுத்த அந்த ஒரு கிளாஸ் பால் தான் காரணம்னு சொல்லுவல்ல!"

தாம்பி (சிரித்துக்கொண்டே): "அவ உன்னைய ஒரு நாள் தூக்கி வீசப் போறா பாரு!"

எல்லோரும் சிரித்துக்கொண்டிருக்க, கட்டிலில் படுத்திருக்கும் கிரித்தி வானத்தை வெரித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார். செலவுகள் பற்றி சிந்துத்துக்கொண்டே தன் கைகளைக் குவித்து முகத்தைத் துடைக்கிறார். கட்டட வேலை செய்து காப்புக் காய்ச்சிய அவர் கைகள் இனி இரவுகள் இப்படி இனிமையாய் இருக்கப்போவதில்லை என்பதை உணர்த்தின.

CUT

மீராபாய் சானு பயோபிக் - பாகம் 1 : "உன் பொண்ணு இரும்பு மனுஷிப்பா"