Published:Updated:

இரும்பு மனுஷியின் கதை... A Mirabai Chanu Biopic - எபிசோட் : 1 HBDMirabaiChanu

Mirabai Chanu ( Hasif Khan )

உங்கள் டைரியின் ஏதாவதொரு பக்கத்தில் வெற்றி என்ற வார்த்தை எழுதப்பட்டிருந்தால்; அதற்கு முந்தைய பக்கங்கள் வறுமை, தோல்வி, போராட்டம், புறக்கணிப்பு போன்ற வார்த்தைகளால், வலியால் நிரப்பப்பட்டிருந்தால், அந்த டைரி சுயசரிதையாக மாறிப்போகும்.

இரும்பு மனுஷியின் கதை... A Mirabai Chanu Biopic - எபிசோட் : 1 HBDMirabaiChanu

உங்கள் டைரியின் ஏதாவதொரு பக்கத்தில் வெற்றி என்ற வார்த்தை எழுதப்பட்டிருந்தால்; அதற்கு முந்தைய பக்கங்கள் வறுமை, தோல்வி, போராட்டம், புறக்கணிப்பு போன்ற வார்த்தைகளால், வலியால் நிரப்பப்பட்டிருந்தால், அந்த டைரி சுயசரிதையாக மாறிப்போகும்.

Published:Updated:
Mirabai Chanu ( Hasif Khan )

அதைப் பற்றிப் பேச உலகமும், அதை உலகுக்கு விற்பனை செய்ய ஊடகமும் தயாராகும். விரைவில் பயோபிக் வெளியாகும். இது 21-ம் நூற்றாண்டின் வரைமுறை.

இப்போது ஒட்டுமொத்த இந்தியாவும் மீராபாய் சானுவின் டைரியைப் புரட்டிக்கொண்டிருக்கும். கருப்பு வெள்ளைப் பக்கங்களில் கலர் ஊற்றி, கமர்ஷியலாக்கி, திரைக்கதை செய்ய பாலிவுட் ஆயத்தமாகியிருக்கும். பயோபிக் எழுதத் தேவையான அத்தனை இன்கிரீடியன்ட்களும் நிரம்பிய அந்த டைரியை விட்டுவிட முடியுமா என்ன? இந்தியாவின் ஆபரணம் மணிப்பூரில் கிடைத்திருக்கும் இந்த முத்தை மாலையாக்காமல் விட முடியுமா என்ன!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த சில நாள்களாக அந்த டைரியைப் புரட்டிப் பார்த்திருந்ததால், எடுக்கப்படும் பயோபிக்கின் கதை எப்படி இருக்கும் என்று ஊகிக்கத் தொடங்கினேன். அத்தனை பயோபிக் படங்களின், ஸ்போர்ட்ஸ் சினிமாக்களின் டெம்ப்ளேட்களும் கண்முன் ஓடியது. நாமும் ஒரு draft எழுதிப் பார்ப்போம் என்று தோன்றியது. நமக்கு தெரிந்த ஃபார்மேட்டில் எழுதித்தான் பார்ப்போமே! இன்று அவர் பிறந்தநாள் வேறு. அதனால், வெள்ளி வென்ற தங்க மகளுக்கு இதை சமர்ப்பிப்போம்.

மணிப்பூரின் மகள்
எ மீராபாய் சானு பயோபிக்
Disclaimer: இந்தப் படம் மீராபாய் சானுவின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. கமர்ஷியல் காரணங்களுக்காக சில புனைவு காட்சிகள், கதாபாத்திரங்களும் இடம்பெறும். மீராபாய் சானு, அவர் பெற்றோர் தவிர்த்து மற்ற கதாபாத்திரங்கள் ஏதும் யாரையேனும் குறிக்கும்படி இருந்தால், அது முழுக்க முழுக்க தற்செயலே.
Next Card: இந்தக் கதையின் பெரும்பகுதி மணிப்பூரில் நடப்பதாக இருந்தாலும், வாசகர்களின் புரிதலுக்காக கதாப்பாத்திரங்கள் தமிழில் உரையாடுவதுபோன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

மணிப்பூர். ஆகஸ்ட் 7, 2016 - டி.வி-யின் முன்னாள் இருக்கும் சேரில் செல்போனை வைத்துக்கொண்டு அமர்கிறார் தாம்பி லெய்மா. செல்போனில் மீரா என்ற contact. அவர் கணவர் தொலைக்காட்சியில் சேனலை மாற்றிக்கொண்டிருக்கிறார். வீட்டில் சில உறவினர்கள், அக்கம்பக்கத்தினரும் அமர்ந்திருக்கிறார்கள். ஒருசில பத்திரிகையாளர்களும் உட்கார்ந்திருக்கிறார்கள்.

கிரித்தி மீதேய்: "இதோ வந்திடுச்சு. நம்ம புள்ள இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடும்"

தொலைக்காட்சியில் பளுதூக்கும் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு வீராங்கனைகளாக வந்துகொண்டிருக்கிறார்கள்.

உறவினர் ஒருவர்: "நம்ம புள்ள ஒலிம்பிக்ல ஆடுது. எப்பேர்பட்ட விஷயம். அதை ஸ்கிரீன் கட்டி ஊரே பாக்கலாம்னு சொன்னா, வூட்டுல உட்காந்து பாத்துட்டு இருக்கீங்க"

கிரித்தி மீதேய்: "அதெல்லாம் வேணாம்னே"

வேஷ்டி சட்டை, சேலை அணிந்துகொண்டு தமிழர்கள்போல் ஒரு தம்பதியும் அங்கே அமர்ந்திருக்கிறது.

ஒரு உறவினர் அந்த வேஷ்டி கட்டியவரைப் பார்த்துக் கேட்கிறார்: "ஏன் வாத்தியாரே இதுக்கு முன்னாடி வெயிட் லிஃப்டிங்ல ஒலிம்பிக் மெடல் ஜெயிச்சாங்கல்ல மல்லேஷ்வரி அவங்க உங்க ஊருக்காரங்களா?"

வாத்தியார்: "தமிழ்நாடு இல்ல. ஆந்திராக்காரங்க"

தாம்பி எதுவும் பேசாமல் மிகவும் அமைதியாக இருக்கிறார். இன்னும் சில மணி நேரங்களில் தன் மகளின் பிறந்த நாள். தலையைப் பின்சாய்த்து 22 ஆண்டுகளுக்கு முன் அவளைக் கடைசியாய் கருவில் சுமந்த நாளை நினைத்துக்கொண்டிருக்கிறார்.

கிரித்தி மீதேய்: "மீரா வாரா... மீரா வாரா..."

எல்லோரும் ஆர்ப்பரிக்கிறார்கள். டி.வி-யில் மீராபாய் சானுவின் முகம். பளுவைத் தூக்க வந்துகொண்டிருக்கிறார். அவரைக் காட்டியதுமே தாம்பியின் இமைகள் மூடி தேங்கியிருந்த கண்ணீரை வெளியே தள்ளுகின்றன. 22 ஆண்டுகளுக்கு முன்பு உணர்ந்ததையெல்லாம் உணரத் தொடங்குகிறார். உடல் சற்று நடுங்குகிறது. நெஞ்சம் படபடக்கிறது. சந்தோஷம் எல்லையற்று பொங்குகிறது. வழிந்தோடும் கண்ணீரின் ஊடே தெரியும் மங்கிய மீராவின் முகமும், அந்த வீட்டில் இருப்பவர்களின் ஆர்ப்பரிப்புக் குரலும் சேர்ந்து அவர் முகத்தில் ஓர் கர்வச் சிரிப்பைப் புதைக்கின்றன.

அதைப் பார்த்துவிட்டு வாத்தியார் தன் மனைவியிடம் சொல்கிறார்: "வள்ளுவர் ஒரு ஆணாதிக்கவாதியா இருந்திருப்பாரோ. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்... பொம்பளப் புள்ளையப் பெத்தவளுக்கும் அது இருக்கத்தான செய்யுது"

அவர் மனைவி லேசாய்ச் சிரிக்கிறார்.

ஒரு உறவினர்: "இது எத்தனை 82 கிலோ தான"

மற்றொருவர்: "ஆமா"

திடீரென எல்லோரும் அமைதியாகிறார்கள். மீராபாய் சானு பளுதூக்கத் தயார். 82 கிலோ பளுவைத் தூக்க முயற்சித்துத் தோற்கிறார். முதல் வாய்ப்பு தோல்வியில் முடிகிறது.

நிசப்தம் தொடர்கிறது. இப்போது தாம்பியின் கைகள் நடுங்குகின்றன. முன்னாள் அமர்ந்திருக்கும் கிரித்தி, திரும்பி தன் மனைவியைப் பார்க்கிறார்.

உறவினர்: "இது வெறும் டிரயல்ஸ்தான். அதெல்லாம் நம்ம புள்ள பட்டையைக் கிளப்பிடும். இந்த எடையை எல்லாம் கொள்ளையில ஒரே கையில வீசிட்டு இருக்கும்"

அமைதி தொடர, சில நிமிடம் கழித்து மீண்டும் வருகிறார் மீரா. இம்முறை 82 கிலோ எடையைத் தூக்குகிறார். வீடே அதிர்கிறது. எல்லோரும் ஒருவரையொருவர் கட்டித் தழுவுகிறார்கள். தாம்பி ஆசுவாசப்படுகிறார். எழுந்து போய் தண்ணீர் குடித்துவிட்டு வந்து அமர்கிறார்.

Mirabai Chanu
Mirabai Chanu
AP

அடுத்த சில நிமிடங்கள் அந்த வீட்டில் சோகமே நிரம்பியிருக்கிறது. Snatch சுற்றின் மூன்றாவது வாய்ப்பை தூக்கத் தவறிய மீரா, Clean & Jerk பிரிவின் மூன்று வாய்ப்புகளையும் தூக்கத் தவறுகிறார். அதனால், ரேங்கிங்கிலேயே அவர் பெயர் இல்லை. ஏமாற்றத்தோடு அவர் மேடையில் இருந்து இறங்குவதைப் பார்த்து தாம்பியின் கண்ணில் கண்ணீர். தன் மகள் மொத்த தேசத்துக்கும் பிறந்த நாள் பரிசு கொடுப்பாள் என்று நினைத்திருந்த தாம்பிக்கு, இப்போது எப்படி அவளுக்கு ஆறுதல் சொல்வது என்ற பயம். செல்போனை வெறித்துப்போய் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

தங்கள் மகளின் தோல்வி குறித்து பேட்டி எடுக்க நினைத்த அந்த ரிப்போர்டர்களை வெளியே அழைத்துச் சென்றுவிட்டு, தாங்களும் வெளியேறுகிறார்கள் பக்கத்து வீட்டினர். கிரித்தி தன் மனைவியை அனைத்து ஆறுதல் சொல்ல முற்படுகிறார். கண்ணில் கண்ணீர் வழிந்தோட மீராவின் நம்பருக்கு கால் செய்கிறார் தாம்பி. திரையில் Calling Meera என்று காட்டப்படுகிறது.

CUT

மணிப்பூரின் அழகிய மலைகளின் நடுவே 'சுமார் 10 வருடங்களுக்கு முன்பு' என்ற கார்ட் போடப்படுகிறது. மீராபாய் சானுவின் வீடு. இளம் தாம்பி, வீட்டுக்கு வெளியே துணிகள் துவைத்துக்கொண்டிருக்கிறார். அப்போது வாத்தியாரின் மனைவி வந்து அந்தப் பக்கம் கடந்து செல்கிறார்.

வாத்தியார் மனைவி: "எங்க பொடிசுங்க யாரையும் காணோம்"

தாம்பி: "எல்லாம் விறகுக் கட்டை எடுத்துட்டு வரப் போயிருக்காங்க"

வாத்தியார் மனைவி: "மீரா அவ படையோட கிளம்பிட்டாலா?"

தாம்பி: "இவனுக ரெண்டு விறகு எடுத்தாந்தா, அவதான் நாலு தூக்கிட்டு வர்றா"

சொல்லிக்கொண்டிருக்கும்போது சிறுவர்கள் வரும் சத்தம் கேட்கிறது. இரு சிறுவர்கள் சின்னச் சின்ன கட்டைகளைத் தூக்கிவருகிறார்கள்.

தாம்பி: "ஏண்டா பெரியவனே, ஒரு நாளாவது இதைவிடப் பெருசா எடுத்துட்டு வர்றீங்களா நீங்க"

மூத்த மகன்: "அடப் போம்மா இதையே தூக்க முடியல"

"எங்கடா உன் தங்கச்சி" என்று கேட்டுக்கொண்டே, தன் மகனின் முழங்காலில் ஒட்டியிருக்கும் குப்பையைத் துடைத்துவிட்டு லேசாக நிமிர்கிறார் தாம்பி. அப்படியே அசைவற்று நிற்கிறார். அவரைப் பார்த்த வாத்தியார் மனைவி, தாம்பியின் கண்கள் பார்க்கும் திசை நோக்கித் திரும்புகிறார். அந்த அதிர்ச்சி இங்கேயும் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டிருக்கிறது.

இளைய அண்ணன், "ஏ மீரா எப்டிடி தூக்துன" என்று கேட்க, கேமரா அவர்கள் பார்த்த திசை நோக்கி நகர்கிறது. மிகப்பெரிய கட்டை ஒன்றைத் தன் தலைமீது சுமந்து வருகிறார் 12 வயது மீராபாய் சானு. தாம்பி பதறிப்போய் ஓடுகிறார்.

தாம்பி: "என்னடி இது இவ்ளோ பெருசா ஒரே ஆளா தூக்கிட்டு வந்திருக்க!"

மீரா: "இவனுக முன்னாடி போய்ட்டானுங்க. வந்துட்டு இருக்கைல இதப் பாத்தேன். இப்டியெல்லாம் நமக்கு கிடைச்சதே இல்லைல. அதான் தூக்கியாந்துட்டேன்."

அதிர்ச்சி குறையாத வாத்தியாரின் மனைவி அதைத் தூக்கிப் பார்க்க முயற்சிக்கிறார். கொஞ்சம் தூக்கினாலும் முழுமையாகத் தூக்க முடியவில்லை. போட்டுவிடுகிறார். மீராவின் அண்ணனும் விளையாட்டாய் தூக்க முயற்சி செய்கிறான். அவனால், அதை நகற்றக்கூட முடியவில்லை.

வாத்தியர் மனைவி: "நாப்பது அம்பது கிலோ இருக்கும் போலயேக்கா"

தாம்பி: "அவ்ளோ இருக்குமா என்ன?"

"உடம்பு வலிக்கலையாடி" என்று சொல்லிக்கொண்டே திரும்பி மீராவைப் பார்க்கிறார். எந்தச் சலனமும் இல்லாமல் வீட்டிற்குள் சென்றுகொண்டிருக்கிறாள் மீரா.

CUT

மறுநாள் காலை. மீராவின் வீட்டிற்கு வெளியே நான்கைந்து பேர் கூடி நிற்கிறார்கள். அதே கட்டை கீழே கிடக்கிறது.

ஒரு ஆண்: "இந்த கட்டைய இந்தச் சின்னப் புள்ள தூக்கிடுமா"

மற்றொருவர்: "தூக்குனானுல சொல்றாங்க. என்னதான் நடக்குதுனு பாப்போமே!"

மீரா அந்தக் கட்டையைத் தூக்கி தோள் மீது வைக்கிறார். அசால்ட்டாக நிற்கிறார். தன் தந்தையை நோக்கி நடக்கவும் செய்கிறார். 'இதற்கு மேல் இன்னொன்று வையேன்' என்று சொல்வதுபோன்ற பார்வை. எல்லோரும் திகைத்துப்போய் நிற்கிறார்கள்.

தாம்பி (தன் கணவரைப் பார்த்து): "இப்போ நம்புறீங்களா"

அந்தக் கட்டையை மீராவின் தோளிலிருந்து வாங்கி கீழே போடுகிறார் கிரித்தி. முதலில் கேள்வி கேட்டவர் வந்து தூக்கிப் பார்க்கிறார். உடனே கிரித்தியிடம் சொல்கிறார் - "உன் பொண்ணு இரும்பு மனுஷிப்பா"

CUT

தொடரும்...