Published:Updated:

வரலாறாக மாறிய அந்த ஒரு ஃபிளிக்கும், கோலும்... யார் இந்த குர்ஜித் கவுர்?

குர்ஜித் கவுர்
குர்ஜித் கவுர் ( Twitter )

25 வயதாகும் குர்ஜித் கவுர் இந்த தொடர் முழுவதுமே பெரிதாக பெர்ஃபார்ம் செய்திருக்கவில்லை. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த ஒரு ஃபிளிக் அவரை சூப்பர்ஸ்டாராக மாற்றிவிட்டது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

2011 உலகக்கோப்பை தொடரின் போது தோனி பெரியளவில் ஃபார்மில் இல்லை. அணியை தூக்கி நிறுத்தும் வகையிலான இன்னிங்ஸ்களை ஆடியிருக்கவில்லை. ஆனால், இன்றைக்கும் உலகக்கோப்பை என்றவுடன் வான்கடேவில் லாங் ஆனில் தோனி அடித்த அந்த சிக்சரே ஞாபகம் வரும். அந்த ஒரு சிக்சர்... அந்த ஒரு இன்னிங்ஸ்... இந்தியாவுக்கு 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்று கொடுத்தது. வரலாற்றில் தோனி தனது பெயரை அழுத்தமாகப் பதிவு செய்தார். அதேமாதிரியான ஒரு சம்பவமே ஹாக்கியில் அரங்கேறியிருக்கிறது. பெண்கள் அணியில் இந்த ஒலிம்பிக் தொடர் முழுவதுமே குர்ஜித் கவுர் பெரியளவிலான ஃபார்மில் இல்லை. லீக் போட்டிகளில் ஒரு கோலை கூட அடித்திருக்கவில்லை. ஆனால், காலிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குர்ஜித் அடித்த அந்த டிராக் ஃபிளிக்... அந்த ஒரு கோல் ஒரே நாளில் அவரை சூப்பர்ஸ்டார் ஆகிவிட்டது. இந்திய ஹாக்கி அணிக்கு மகத்தான ஒரு வெற்றியை பெற்றுக்கொடுத்து வரலாற்றிலும் இடம்பிடித்துவிட்டார். ஆஸ்திரேலியா ஒலிம்பிக்கில் மட்டும் மூன்று முறை தங்கம் வென்றிருக்கிறது. இரண்டு முறை உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. காமென்வெல்த் போட்டியில் நான்கு முறை சாம்பியன் ஆகியிருக்கிறது. இதுமட்டுமில்லாமல் பல தொடர்களிலும் வெள்ளி, வெண்கலம் வென்றிருக்கிறது.

இப்படியான எந்த ரெகார்டுமே இந்திய அணிக்கு கிடையாது. அதிகபட்சமாக ஆசிய போட்டியில் சிறப்பாக ஆடியிருக்கிறார்கள். கடந்த முறை ரியோ ஒலிம்பிக்கில் கடைசி இடம். குறிப்பாக, ஆஸ்திரேலியாவிடம் 6-1 என மோசமான தோல்வி.
ஹாக்கி அணி
ஹாக்கி அணி

இப்படி ஒரு அணி நாக் அவுட் சுற்றில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லப்போகிறது என ஒரு பேச்சுக்கு சொல்லியிருந்தால் கூட, நம்மை ஏற இறங்க ஒரு மாதிரி பார்த்திருப்பார்கள். ஆனால், நடந்தது அதிசயம். அதை நிகழ்த்தி காட்டியவர் குர்ஜித் கவுர்.

ஆஸ்திரேலியாவின் ஆகச்சிறந்த டிஃபண்டர்கள் நான்கு பேர் ஆஜானுபாகுவான கோல் கீப்பர் இவர்களையெல்லாம் தாண்டி, குர்ஜித் செய்த டிராக் ஃப்ளிக்கில் காற்றை கிழித்துக் கொண்டு பயணித்த பந்து வலைக்குள் விழுகிறது. அந்த நொடி என்ன நடந்தது என்பதே பலருக்கும் புரியவில்லை.

தரவரிசையில் டாப்பில் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9-வது இடத்தில் இருக்கும் ஒரு அணி கோல் அடித்து லீட் எடுக்கிறது. அதுவும் லீக் போட்டியில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோற்று நாக் அவுட்டுக்கு வந்திருக்கும் இந்திய அணி!

குர்ஜித்தின் இந்த கோலுக்கு பிறகு இந்திய வீராங்கனைகள் பெரிதாக அட்டாக்குக்கு முயற்சிக்கவில்லை. குர்ஜித் கவுரின் ஒற்றை கோலை காப்பாற்ற கையை கோர்த்து ஒன்றாக நின்று ஆஸ்திரேலியாவுக்கு தடுப்புச்சுவரை எழுப்பி டிஃபன்ஸ் செய்தது. மொத்தம் 7 பெனால்ட்டி கார்னர்கள் ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்தும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

25 வயதாகும் குர்ஜித் கவுர் இந்த தொடர் முழுவதுமே பெரிதாக பெர்ஃபார்ம் செய்திருக்கவில்லை. ஆனால், அவர் எப்போதுமே ஒரு பெரிய தருணங்களில் சிறப்பாக ஆடக்கூடிய மேட்ச் வின்னர்.

2017 ஆசியக்கோப்பையை வென்ற போது அந்த தொடரில் இந்திய அணிக்காக அதிக கோல்களை அடித்திருந்தது குர்ஜித் கவுர்தான். 2018 உலகக்கோப்பையிலும் அவர்தான் இந்திய அணிக்கு அதிக கோல்களை அடித்திருந்தார்.
குர்ஜித் கவுர்
குர்ஜித் கவுர்
Indian Railways Tweet

முதலில் டிராக் ஃபிளிக் என்பது குர்ஜித்துக்கு பெரியளவில் கைக்கொடுக்காமலேயே இருந்தது. முழுக்க முழுக்க டிஃபண்டராக மட்டுமே ஆடினார்.

டிராக் ஃபிளிக்கில் கவனம் செலுத்த வேண்டும் என குர்ஜித் முடிவெடுத்த பிறகு அவருக்கு பலரும் உதவி புரிந்திருக்கின்றனர். இந்திய விளையாட்டு ஆணையத்தில் உள்ள  பயிற்சியாளர் ஒருவர் குர்ஜித்தின் தவறுகளை திருத்தி டெக்னிக்கலாக சில விஷயங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறார். இந்திய அணியின் பயிற்சியாளரான மரினே குர்ஜித்தை கொஞ்சம் எடை கூடுதலாக இருக்கும் ஸ்டிக்கை பயன்படுத்த அறிவுறுத்தினார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறிய குர்ஜித் இந்திய அணியின் மெயின் டிராக் ஃபிளிக்கராக மாறினார். 

பஞ்சாபின் அமிர்தசரஸில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர் குர்ஜித் கவுர். அரசுப்பள்ளியின் விடுதியில் தங்கியிருந்த போது சகோதரியான பிரதீப் கவுருடன் இவருக்கும் ஹாக்கி மீது ஆர்வம் உண்டாகியிருக்கிறது. ஆரம்பத்தில் பயிற்சி பெற கடினப்பட்டாலும், பின்னாட்களில் ஹாக்கியின் மூலம் அரசு வேலை கிடைத்த பிறகு ஓரளவுக்கு ஸ்திரமானார். 2017 முதல் இந்திய அணியில் தொடர்ச்சியாக ஆடி வருகிறார். குர்ஜித் கவுருக்காக அவரது கிராமமே இப்போது திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. குர்ஜித் அந்த கிராமத்தின் பெருமை மட்டுமில்லை... ஒட்டுமொத்த தேசத்தின் பெருமை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு