Published:Updated:

ஹாக்கி : இந்தியாவின் 41 ஆண்டுக்கால பதக்க வேட்கை... வரலாற்றை மாற்றி எழுதிய இரண்டு ஆஸ்திரேலியர்கள்!

இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருப்பது ரொம்பவே கஷ்டம் என பேசப்படும் நிலையில், பயிற்சியாளராகி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து இந்தியாவிற்கு ஒரு வரலாற்று வெற்றியையும் பெற்று கொடுத்திருக்கிறார் கிரஹாம் ரீட்.

41 ஆண்டுக்கால வேட்கைக்குப் பின் இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளது. இந்தியா முழுவதும் 'சக்தே இந்தியா' பாடல் பெருமிதத்தோடு ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த மகத்தான வெற்றிக்கு வீரர்களை மட்டுமே காரணமாக சொல்லிவிட முடியாது. வீரர்களுக்கு பின்னால் நின்ற அந்த ரியல் கபீர் கான் கிரஹாம் ரீடையும் நாம் கொண்டாடியே ஆகவேண்டும்.

இந்தியாவில் ஹாக்கி வீழ்ந்ததற்கு செயற்கையான நவீன புற்களை கொண்ட மைதானங்களே காரணம் என கூறப்படுவதுண்டு. வீழ்ச்சியின் தொடக்கம் வேண்டுமானால் அதுவாக இருந்திருக்கலாம். ஆனால், எழவே முடியாத தொடர் வீழ்ச்சிக்கு இந்தியாவில் பயிற்சியாளர்கள் பந்தாடப்பட்டதே முக்கிய காரணம்.

கிரஹாம் ரீட்
கிரஹாம் ரீட்

எப்போதும் ஒரு அணியில் வீரர்களுக்குத்தான் அதிக நெருக்கடி இருக்கும். அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்களில் அணியில் இருப்போமா என்கிறா கேள்விகள் வீரர்களுக்கே எழும். ஆனால், இந்திய ஹாக்கியில் மட்டுமே பயிற்சியாளர்களும் அப்படி ஒரு நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.

ரிக் சார்ல்ஸ்வொர்த்
ரிக் சார்ல்ஸ்வொர்த்

ஒரு தொடரில் பயிற்சியாளராக இருக்கும் நபர் அடுத்த தொடரிலேயே நீக்கப்படுவார். ஏன், எதற்கு போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலே இருக்காது. 2014-க்குப் பிறகு மட்டும் 7 பயிற்சியாளர்கள் மாறியிருக்கிறார்கள். கடந்த 20 வருடத்தில் மட்டும் குறைந்தபட்சம் 20 பயிற்சியாளர்களாவது மாறியிருப்பார்கள்.

2002 உலகக்கோப்பை போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போதே பயிற்சியாளர் டிசோசா பாதியில் நீக்கப்பட்டிருந்தார். 2004 ஒலிம்பிக்கிற்கு ஒரு மாதம் முன்பு அப்போதைய பயிற்சியாளர் ரஜீந்தர் சிங் மாற்றப்பட்டிருந்தார். இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர்களுக்கு அதிகபட்ச ஆயுட்காலம் ஒரு வருடம் மட்டுமே.

20 வருடத்துக்கு முன்பு நடந்த கதைதான் இப்போது வரை அரங்கேறி கொண்டிருக்கிறது. இப்போதைய பெண்கள் அணியின் பயிற்சியாளராக இருக்கும் மரினே இரண்டு ஆண்டுகளுக்கு முன் பந்தாடப்பட்டிருந்தார். முதலில் பெண்கள் அணிக்கு பயிற்சியாளராக வந்தவரை ஆண்கள் அணிக்கு மாற்றிவிட்டார்கள். ஆண்கள் அணியிலிருந்த ஹரேந்திர சிங்கை பெண்கள் அணிக்கு மாற்றிவிட்டார்கள். கொஞ்ச நாள் கழித்து மீண்டும் களைத்துப்போட்டார்கள்.

மரினே மீண்டும் பெண்கள் அணிக்குச் சென்றார். ஹரேந்திர சிங் ஆண்கள் அணிக்கு வந்தார். 2018 இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு ஹரேந்திர சிங் நீக்கப்பட்டார். இதன்பிறகே இப்போதைய பயிற்சியாளரான கிரஹாம் ரீட் உள்ளே வந்தார்.

கிரஹாம் ரீட் ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் ஹாக்கி வீரர். 1992 பார்சிலோனா ஒலிம்பிக்கில் அந்த அணி வெள்ளி வென்றபோது அதில் இடம்பிடித்திருந்தவர். ஓய்வுக்குப் பிறகு, பயிற்சியாளராக தனது பயணத்தை தொடர்ந்தார்.
கிரஹாம் ரீட்
கிரஹாம் ரீட்
Graham's Twitter handle

கிரஹாம் ரீட் இந்தியாவிற்கு பயிற்சியாளராக வருகை தந்ததன் பின்னால் இன்னொரு சுவாரஸ்யமான கதையும் இருக்கிறது.

ரிக் சார்ல்ஸ்வொர்த்... ஆஸ்திரேலியாவின் பிரபலமான விளையாட்டு வீரர். ஆஸ்திரேலிய ஹாக்கி அணிக்காக ஒலிம்பிக் போட்டிகளில் ஆடியிருக்கிறார். மிகச்சிறந்த வீரராக அறியப்பட்டவர். கிரிக்கெட்டராகவும் சில காலம் இருந்தார். ஓய்வுக்கு பிறகு, பயிற்சியாளராக மாறி உச்சத்தை தொட்டார்.

சார்ல்ஸ்வொர்த் 2008-ம் ஆண்டு இந்திய அணியின் டெக்னிக்கல் டைரக்டராக நியமிக்கப்பட்டார். வழக்கமான கதைதான். பத்தே மாதங்களில் வேலையே வேண்டாம் என சென்றுவிட்டார் சார்ல்ஸ்வொர்த். உலகின் தலைசிறந்த வீரரால் கூட இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் நிர்வாக கோளாறுகளையும், அரசியலையும், அவர்கள் கொடுக்கும் அழுத்தத்தையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இங்கிருந்து சென்ற சார்ல்ஸ்வொர்த் ஆஸ்திரேலிய அணிக்கு பயிற்சியாளராகி அந்த அணியை நம்பர்-1 ஆக்கினார்

இந்திய அணியை விட்டு சென்றாலும், இந்திய ஹாக்கி அணி மீது அவர் கொண்டிருந்த அன்பும் அக்கறையும் இன்று வரை மாறவில்லை. 2008-லிருந்து இப்போது வரை இந்தியா ஒவ்வொரு தொடரில் ஆடும்போதும் இந்திய அணிக்காக அவருடைய ஆலோசனை குரல் ஆஸ்திரேலியாவிலிருந்து ஒலித்துக் கொண்டே இருக்கும். இந்திய ஹாக்கி அணி எப்படியாவது மேலெழும்பி விட வேண்டும் என்கிற ஆத்மார்த்தமான அக்கறை அவரிடம் வெளிப்படும். ஒரு ஆஸ்திரேலியர் இந்தியா வெல்ல வேண்டும் என நினைப்பது வினோதமாக இருக்கிறதே? என கேட்டால்..

ஒரு காலத்தில் இந்தியர்களை பார்த்துதான் நாங்கள் ஹாக்கி கற்றுக்கொண்டோம். அவர்களின் ஆட்டத்தை பார்த்துதான் எங்களுக்கு உத்வேகமே கிடைக்கும். இந்தியாவிலிருந்து வந்த ஆங்கிலோ இந்தியர்களே ஆஸ்திரேலிய ஹாக்கி அணியில் பயிற்சியாளராகவும் வீரர்களாகவும் கோலோச்சினர். ஹாக்கியில் இந்திய அணியின் மீண்டெழுதல் என்பது இந்தியாவுக்கு மட்டுமில்லை உலகத்துக்கே நல்லது!
ரிக் சார்ல்ஸ்வர்த்

சார்லஸ்வொர்த் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக இருந்த போது துணை பயிற்சியாளராக இருந்தவரே கிரஹாம் ரீட். 2018-ல் இந்திய அணிக்கு பயிற்சியாளர் தேவை என்கிற அறிவிப்பு வெளியானவுடனேயே கிரஹாம் ரீடை அந்த பொறுப்புக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தினார் சார்ல்ஸ்வொர்த். அவரின் ஆலோசனைப்படியே பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த கிரஹாம் ரீட் பயிற்சியாளராக தேர்வும் செய்யப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிரஹாம் ரீட்
கிரஹாம் ரீட்
Graham's Twitter handle

2019 ஏப்ரலில் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்று கொண்டார் ரீட். ஒட்டுமொத்த அணியின் அணுகுமுறையையுமே மாற்றத் தொடங்கினார். இந்திய அணியினர் எப்போதும் டிஃபென்ஸிலேயே அதிக கவனம் செலுத்துவர். நல்லபடியாக வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே இறங்கி அட்டாக் செய்வார்கள். தாங்களாக வாய்ப்புகளை உருவாக்கத் தவறி வந்தனர். ரீட் செய்த மிகப்பெரிய மாற்றம் இதுதான். டிஃபென்ஸ் இந்தியாவின் பலம்தான். ஆனால், அதற்காக அட்டாக்கே இல்லாமல் ஆடினால் எதிரணியினர் ஏறியடித்துவிட்டு சென்றுவிடுவார்கள். அட்டாக்கிலும் தீவிர கவனம் செலுத்தி வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதற்கேற்றவாரே, ஃபார்வர்டில் இளமையான துடிப்புமிக்க வீரர்களை மொத்தமாக இறக்கினார். ஒலிம்பிக்கிற்கான அணியில் எஸ்.வி.சிங், ஆகாஷ்தீப் சிங், ரமன்தீப் சிங் போன்ற சீனியர் ஃபார்வர்ட் ப்ளேயர்களுக்கு இடமே கொடுக்கவில்லை. இந்த முடிவு பலத்த விமர்சனத்துக்கும் உள்ளானது. ஆனால், ரீட் தெளிவாக இருந்தார்.

ஒலிம்பிக் மற்ற தொடர்களை போன்றது கிடையாது. இங்கே 10 நாட்களுக்குள் ஏழெட்டு போட்டிகள் ஆட வேண்டியிருக்கும். அதற்கு அதிக போட்டிகள் ஆடாமல் முழு எனர்ஜியோடு துடிப்பாக இருக்கும் இளைஞர்களே தேவை என கூறினார். சீனியர்களை ஒதுக்கிய சர்ச்சையை சாமர்த்தியமாக சமாளித்தது மட்டுமல்ல, ஒலிம்பில் அரையிறுதி போட்டியில் பீரேந்திர லக்ரா போன்ற வீரர்களை வெளியில் உட்கார வைத்தது வரை கிரஹாம் ரீட் எடுத்ததெல்லாமே துணிச்சலான முடிவுகள்.

கடந்த 40 ஆண்டுகளில் தோல்விக்காக ஒருவர் மீது ஒருவர் பழி போட்டு, ஹாக்கி ஒரு அணி விளையாட்டு என்பதே மறந்து போயிருந்த சூழலில் அதையும் சரி செய்தார் ரீட். கொரோனா லாக்டெளன் காலகட்டத்தில் பயிற்சி மையத்தில் வீரங்கள் அனைவரும் தங்கியிருக்க அவர்களுடனே தங்கியிருந்து தினசரி உரையாடினார். ரீடிடம் இந்திய அணியின் வெற்றி ரகசியம் என்னவென்று கேட்டால், லாக்டெளனில் வீரர்கள் அனைவரும் ஒன்றாக செலவிட்ட நேரங்களையே குறிப்பிடுவார். அந்தளவுக்கு எல்லாருடைய பின்னணி கதைகளையும் கேட்டறிந்து ஒரு அணியாக, ஒரு குடும்பமாக மாறுவதற்கான சூழலை உருவாக்கியிருக்கிறார் ரீட்.

இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருப்பது பெரும்துயரம் என பேசப்பட்ட நிலையில், பயிற்சியாளராகி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து இந்தியாவிற்கு ஒரு வரலாற்று வெற்றியையும் பெற்று கொடுத்திருக்கிறார் ரீட். ரீடின் இந்திய வருகைக்கு காரணமாக இருந்த சார்ல்ஸ்வொர்த்துக்கும் இந்த வெற்றியில் பங்குண்டு. வரலாற்றிலேயே முதன்முறையாக இந்தியா வெல்ல வேண்டும் என்பதற்காக இந்தளவு பிரயத்தனப்பட்ட இரண்டு ஆஸ்திரேலியர்களை இப்போதுதான் பார்த்திருக்கிறோம். இவர்களுக்கும் இந்திய ஹாக்கி வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு இடமுண்டு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு