Published:Updated:

`உட்றாதீங்க பவானி தேவி!' - டோக்கியோ ஒலிம்பிக்கில் வாள் வீசப்போகும் வடசென்னை தமிழச்சி!

பவானி தேவி
பவானி தேவி

எளியவர்கள் அந்த விளையாட்டை பற்றி யோசித்துக் கூட பார்க்க முடியாது. ஆனால், கனவுகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகளெல்லாம் கிடையாதே! வாள்வீச்சில் சாதிக்க வேண்டும் என பவானி தேவி ஒரு கனவுலகில் சிறகடித்து பறந்தார்.

யாரோ செப்பனிட்டு கொடுத்த பாதையில் வீறுநடை போட்டு பயணிப்பது சுலபமான காரியம். முன்னுதாரணமே இல்லாத நிலையில் நமக்கான பாதையை நாமே உருவாக்கி முன்னுதாரணமாக மாறும் வகையில் பயணிப்பது ஆகப்பெரும் கடினம். அப்படியொரு கடினமான பயணத்தை மேற்கொண்டே இன்று ஒலிம்பிக் வரை தகுதிப்பெற்றிருக்கிறார் தமிழக வாள் வீச்சு வீராங்கனையான பவானி தேவி.

இந்தியர்களின் நாடி நரம்பில் ஊறிப்போயிருக்கும் விளையாட்டு கிரிக்கெட். அப்படிப்பட்ட விளையாட்டிலேயே பெண்கள் கிரிக்கெட் அவ்வளவாக கவனிக்கப்படுவதில்லை. வாள்வீச்சு மாதிரியான ஒரு விளையாட்டு இருக்கிறதா என்று கூட பெரும்பாலானோருக்கு தெரியாது. அதில் பெண்கள் பிரிவில் கலந்துகொண்டு பயிற்சி பெற்று முன்னேறியதோடு மட்டுமில்லாமல், இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் வாள்வீச்சில் பங்கேற்கும் முதல் நபர் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார் தமிழக வீராங்கனையான பவானி தேவி.

27 வயதாகும் பவானி தேவி வடசென்னையின் பழைய வண்ணாரப்பேட்டையில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர். பள்ளியில் முதன்முதலாக வாள்வீச்சு என்று ஒரு விளையாட்டு தொடங்கப்பட்ட போது, ஒரு கியூரியோசிட்டியோடு அதில் இணைந்திருக்கிறார். வாள் வீச்சின் சுவாரஸ்யங்கள் அவரை ஆட்கொண்டுவிட சீக்கிரமே பவானிதேவியின் அத்தனையுமாக மாறிப்போனது அந்த விளையாட்டு.

 பவானி தேவி
பவானி தேவி

வாள் வீச்சில் கலந்துக்கொள்வது எல்லாருக்கும் எளிதில் சாத்தியப்பட்டுவிடாது. அதற்கான உபகரணங்கள் எல்லாமே லட்சங்களில்தான் கிடைக்கும் என்பதால் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் அந்த விளையாட்டை பற்றி யோசித்துக் கூட பார்க்க முடியாது. ஆனால், கனவுகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகளெல்லாம் கிடையாதே! வாள்வீச்சில் சாதிக்க வேண்டும் என பவானி தேவி ஒரு கனவுலகில் சிறகடித்து பறந்தார். அவருக்குப் பொருளாதார பின்னணி ஒரு தடையாக அமைந்துவிடாதபடிக்கு பெற்றோர்களும் தங்கள் சக்திக்கு மீறி பல விஷயங்களை செய்து கொடுத்தனர்.

பள்ளி அளவில் சிறப்பாக வாள் வீசிய பவானியின் திறனை சாகர் லாகு என்கிற இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர் கண்டுகொண்டார். கேரளாவின் தலசேரியில் உள்ள பயிற்சி மையத்தில் பவானிக்குச் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. வாள் வீச்சோடு சேர்த்து எஞ்சிய பள்ளிப்படிப்பையும் கல்லூரிப்படிப்பையும் கேரளாவிலேயே முடித்தார்.

இந்தியாவில் வாள் வீச்சில் தனக்கென ஒரு முன்னோடியை எடுத்துக் கொள்ளும் அளவுக்கு யாரும் இல்லாத நிலையில், தானே மற்றவர்களுக்கு ஒரு முன்னோடியாக மாற தொடங்கினார்.

அன்ஷு மாலிக்: `ஒரே கனா... ஒரே குறி' - லட்சியத்தோடு களமிறங்கும் 2கே கிட்!

2009 காமென்வெல்த் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம், 2010 சர்வதேச ஓபனில் வெண்கலம், 2012 காமென்வெல்த் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் என வாளைச் சுழற்றி பதக்கங்களை அள்ளினார்.

எல்லாவற்றுக்கும் உச்சமாக 2019 ல் காமென்வெல்த் வாள் வீச்சு சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். இந்தியா சார்பில் வாள் வீச்சில் தங்கம் வென்ற முதல் நபர் என்கிற பெருமையையும் பெற்றார்.
பவானி தேவி
பவானி தேவி

உலக தரவரிசையில் 42வது இடம் வகிக்கும் பவானி தேவி, தரவரிசையின் அடிப்படையில் சப்ரே பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெற்றார்.

இந்த இடத்தை அடைவதற்கு பவானிதேவி எதிர்கொண்ட சிரமங்களை வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது. தேவையான கருவிகளை வாங்குவதற்கு வசதியில்லாமல் மூங்கில் குச்சிகளை வாளாக கற்பனை செய்துகொண்டே பல நேரங்களில் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். 2015 ல் பொருளாதார நெருக்கடிகள் அதிகமாக இந்த விளையாட்டை விட்டே ஒதுங்கிவிடலாம் எனும் நிலைக்குச் சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு உறுதுணையாக இருந்தது அவருடைய அம்மா ரமணி மட்டுமே. தன்னுடைய நகைகளையெல்லாம் விற்று மகளை வாள் வீச வைத்திருக்கிறார்.

"இப்போது பவானி தேவியின் அம்மாவாக இருப்பதில் நீங்கள் பெரும்பைப்பட வேண்டும் எனப் பலரும் அம்மாவிடம் கூறுகின்றனர். ஆனால், உண்மையிலேயே இப்படியொரு அம்மாவுக்காக நான்தான் பெருமைப்பட வேண்டும்!"
பவானி தேவி
அம்மாவுடன் பவானி தேவி
அம்மாவுடன் பவானி தேவி

டோக்கியோவிற்கு பவானியுடன் அம்மா ரமணியும் சென்றிருக்கிறார். இத்தனை வருட கடின உழைப்பின் பலனாக தியாகத்தின் பலனாக உலகின் உச்சபட்ச ஒரு மேடையில் தன் மகள் வாள் வீசப்போகும் அந்தத் தருணத்திற்காக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார் ரமணி.

அம்மாவின் தியாகம், ட்ராவிட்டை ஆலோசகராக கொண்ட Go Sports மையத்தின் உதவி மற்றும் க்ரவுட் ஃபண்டிங் என பல ஏணிப்படிகளின் உதவியுடனே ஒலிம்பியன் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார் பவானி. எளிய பின்னணியோடு முகவரியற்ற ஒரு விளையாட்டில் நிபுணத்துவம் பெற்று இந்தியாவில் அந்த விளையாட்டுக்கான முகமாகவும் மாறவிருக்கிறார் பவானி தேவி.

பாதைகளில் பயணிப்பது எளிது... புதிய பாதைகளை உருவாக்குவது கடினம். அதை பவானி தேவி செய்திருக்கிறார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும்பட்சத்தில், இனி இந்தப் பாதையில் பலருடைய கைகள் நம்பிக்கையுடன் வாளேந்தும். உட்றாதீங்க பவானி!
அடுத்த கட்டுரைக்கு