Published:Updated:

கேடட் லெவல் டு ஒலிம்பிக் - ஆச்சர்யப்படுத்தும் `அண்டர்டாக்' சோனம் மாலிக்!

Sonam Malik
Sonam Malik

முதல் போட்டியிலேயே கடந்த ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்ஸி மாலிக்கை வீழ்த்தி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சாக்ஸி மாலிக்குடன் நான்கு முறை மோதிய சோனம் நான்கு முறையும் அவரை வீழ்த்தினார்.

ஜுனியர் லெவலில் கூட பெரிதாக அனுபவம் இல்லாத ஒரு வீராங்கனையை எப்படி சீனியர்களுடன் போட்டியிட வைக்க முடியும்? இது மிகப்பெரிய காயங்களுக்கு வழிவகுக்கும். சோனமின் வாழ்வே கேள்விக்குறியாகும் என மல்யுத்த கூட்டமைப்பு தயக்கம் காட்டியது.

ஆனால், டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு யாரும் எதிர்பாராத வகையில் சர்ப்ரைஸாகத் தேர்வாகியுள்ளார் இளம் புயலான சோனம் மாலிக். 18 வயதே ஆகும் சோனம் ஜுனியர் லெவல் போட்டிகளிலேயே பெரிய தொடர்களில் பங்கேற்றதில்லை. ஆனால், டோக்கியோ ஒலிம்பிக்கில் தனக்கான இடத்தை பிடித்துவிட்டார். அதுவும் கடந்த ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்ஸி மாலிக்கை வீழ்த்தி! இது எப்படிச் சாத்தியப்பட்டது?

இந்திய மல்யுத்த வீரர்களுக்கேயுரிய அதே வழக்கமான பிண்ணனிதான் சோனம் மாலிக்குக்கும். ஹரியானாவின் சோனிபாட் மாவட்டத்தில் மதினா எனும் கிராமத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை ஒரு மல்யுத்த வீரர் அதன் தொடர்ச்சியாகவே சோனம் மாலிக்குக்கும் மல்யுத்தம் மீது ஆர்வம் உண்டானது. அவர்களின் கிராமத்தின் அருகே உள்ள ஒரு அகாடமியில் அஜ்மர் மாலிக் எனும் பயிற்சியாளரிடமே மல்யுத்தத்தைப் பயின்றார்.

Sonam Malik
Sonam Malik

சிறுவயதிலிருந்தே எந்த ஒரு விஷயத்திலும் கடினமான உழைப்பை மேற்கொள்ள சோனம் அஞ்சியதே இல்லை. "நான் முதலில் 350 சிட் அப்களை எடுக்கச் சொல்வேன். 350 முடிந்த பிறகு இன்னொரு 150 எடுக்குமாறு கூறுவேன். எல்லா மாணவர்களும் தங்களின் அதிருப்தியை தெரிவிப்பார்கள். ஆனால், சோனம் மட்டும் எதுவுமே மறுப்பு பேசாமல் சொல்வதைச் செய்வார். மல்யுத்தத்தில் சாதிப்பதற்காக அவர் எந்தளவுக்கும் உழைக்கத் தயாராக இருந்தார்" என்கிறார் பயிற்சியாளரான அஜ்மர் மாலிக்.

கடின உழைப்பின் பலனாக கேடட் லெவல் தொடர்களில் பதக்கங்களைக் குவித்தார். 2017 ஆசிய கேடட் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம், அதே ஆண்டில் உலக கேடட் சாம்பியன்ஷிப்பில் தங்கம், 2018-ல் ஆசிய மற்றும் உலக கேடட் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம், 2019 ஆசிய கேடட் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி, அதே ஆண்டில் உலக கேடட் சாம்பியன்ஷிப்பில் மீண்டும் தங்கம் எனப் பட்டையை கிளப்பினார்.

`உட்றாதீங்க பவானி தேவி!' - டோக்கியோ ஒலிம்பிக்கில் வாள் வீசப்போகும் வடசென்னை தமிழச்சி!

2024 பாரிஸ் ஒலிம்பிக்கை குறி வைத்தே சோனம் தயாராகி வந்தார். ஆனால், அவரின் அசத்தலான பெர்ஃபார்மென்ஸ்களை பார்த்த அஜ்மர் மாலிக் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கே முயன்று பார்க்கலாம் எனும் முடிவிற்கு வந்தார். சோனமின் திறனை இந்திய மல்யுத்த கூட்டமைப்பிடம் எடுத்து கூறி அவரை டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான தகுதிச்சுற்று போட்டிகளில் கலந்துக்கொள்ள அனுமதிக்குமாறு முறையிடப்பட்டது.

தொடர் முயற்சிகளுக்கு பிறகு ஒருவழியாக சோனமுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.

முதல் போட்டியிலேயே கடந்த ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்ஸி மாலிக்கை வீழ்த்தி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சாக்ஸி மாலிக்குடன் நான்கு முறை மோதிய சோனம் நான்கு முறையும் அவரை வீழ்த்தினார்.

"நல்லவேளையாக சோனமுக்கு அனுமதி வழங்கினோம். இல்லையேல் நாம் எப்படிப்பட்ட வீராங்கனையை தவறவிட்டிருப்போம்" என மல்யுத்த கூட்டமைப்பே ஆச்சர்யப்பட்டது.
Sonam Malik
Sonam Malik
Pic from Sonam Malik's official Twitter Page

ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஒலிம்பிக்கிற்கான ஆசிய தகுதிச்சுற்று போட்டியில் 62 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டி வரை முன்னேறி டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான டிக்கெட்டை பெற்றார்.

இப்படி ஒரு வீராங்கனை எங்கிருந்தோ வந்து சாக்ஸி மாலிக்கை வீழ்த்தி, டோக்கியோ ஒலிம்பிக் வரை செல்வார் என யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. இப்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பயிற்சிகளை கொஞ்சம் குறைத்து ஒலிம்பிக்கிற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

இழப்பதற்கு எதுவுமில்லை என்பதால் ஓர் அசாத்திய துணிச்சலோடு சோனம் மாலிக் யுத்தம் செய்து வருகிறார். இதே துணிச்சலோடு ஒலிம்பிக்கில் ஆடும்பட்சத்தில் சோனம் மாலிக் உறுதியாக பதக்கத்தை வெல்வார் என நம்பப்படுகிறது.

'அண்டர்டாக்ஸ்' வகைமைக்குள் இருக்கும் சோனம் மாலிக் ஒலிம்பிக்கில் ஆச்சர்யம் நிகழ்த்துவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.
அடுத்த கட்டுரைக்கு