Published:Updated:

குதிரையேறும் சீமராஜா ஃபவாத் மிர்சா... பதக்கத்தை வெல்வாரா?

ஃபவாத் மிர்சா
ஃபவாத் மிர்சா ( Credits - Indian Olympics Association )

20 வருடங்களுக்கு பிறகு இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் மூன்றாவது குதிரையேற்ற வீரர் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார் ஃபவாத்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குதிரையை வைத்து ஒரு விளையாட்டு என்றவுடன் குதிரை பந்தயம்தான் முதலில் ஞாபகம் வரும். சிலருக்கு, போலோ விளையாட்டு ஞாபகம் வரும். ஆனால், அவற்றைத் தாண்டி குதிரையேற்றம் என்ற விளையாட்டும் இருக்கவே செய்கிறது. குதிரையை பல தடைகளை தாண்ட வைத்து லாவகமாக கட்டுப்படுத்தும் போட்டியே குதிரையேற்றம்.

ஒலிம்பிக்கில் அவ்வளவாக புகழ்பெறாத விளையாட்டாக இது இருக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் அப்படியொரு விளையாட்டு இருக்கிறதென்றே பலருக்கும் தெரியாது. ஆனால், ஒலிம்பிக்கில் ஆடப்படும் மற்ற விளையாட்டுகளுக்கு இல்லாத சில சிறப்பம்சங்கள் குதிரையேற்றத்திற்கு மட்டுமே இருக்கிறது.

ஒலிம்பிக்கில் விலங்குகளை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரே விளையாட்டு குதிரையேற்றம் மட்டுமே. மேலும், குதிரையேற்றத்தில் மட்டும்தான் ஆண், பெண் என்கிற வேறுபாடு இல்லாமல் அனைத்து பாலினத்தவரும் ஒரே பிரிவில் ஆட முடியும்.

இத்தகைய சிறப்புகளை கொண்ட குதிரையேற்றத்தில் இந்தியா சார்பில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கிறார் ஃபவாத் மிர்சா. இதற்கு முன்பு இந்தியா சார்பில் 1996-ல் இந்திரஜித் லம்பாவுன் 2000-ல் இம்தியாஸ் அனீஸ் என்பவரும் ஒலிம்பிக் குதிரையேற்றத்தில் பங்கேற்றிருக்கின்றனர். 20 வருடங்களுக்கு பிறகு இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் மூன்றாவது குதிரையேற்ற வீரர் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார் ஃபவாத்.

29 வயதாகும் ஃபவாத் பெங்களூருவை சேர்ந்தவர். 1800-களில் இவருடைய மூதாதையர் ஒருவர் அரபு குதிரையோடு ஈரானிலிருந்து வந்து இந்தியாவில் குடியேறியிருக்கிறார். அன்றிலிருந்து பல தலைமுறைகளாக குதிரை வளர்ப்பிலும் குதிரை சார்ந்த பணிகளிலும் விளையாட்டுகளிலும் பங்களிப்பு செய்வதே குடும்பத்தின் வழக்கமாக இருந்திருக்கிறது. அந்த வரிசையில் இப்போது ஃபவாத்தும் குதிரையேறி வெற்றிக்கொடியை நாட்ட புறப்பட்டு விட்டார்.

பதக்கத்துடன் ஃபவாத் மிர்சா
பதக்கத்துடன் ஃபவாத் மிர்சா
Credits - Indian Olympics Association
2018-ம் ஆண்டில் ஆசிய போட்டிகளில் இரண்டு வெள்ளிப்பதக்கங்களை வென்றதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தார் ஃபவாத். 2019-ம் ஆண்டு இவருக்கு அர்ஜுனா விருதும் அளிக்கப்பட்டது. அதே ஆண்டில் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கிடையேயான போட்டியில் வென்று டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெற்றுவிட்டார்.

சிறுவயதிலிருந்தே குதிரையேற்றத்தில் ஆர்வமாக பங்கேற்று வரும் ஃபவாத்திற்கு பிடித்தமான குதிரை எல் டொராடோ. ஜுனியர் லெவல் போட்டிகளில் அந்த குதிரையை வைத்தே பல போட்டிகளில் வென்றிருக்கிறார். இப்போது அந்த குதிரைக்கு வயதாகிவிட்டதால் பெங்களூருவில் இருக்கும் ஃபவாத்தின் பண்ணை தோட்டத்தில் பத்திரமாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது.

ஃபவாத் டோக்கியோவில் பயன்படுத்தும் குதிரையின் பெயர் செனியர் மெடிகாட். இது ஜெர்மனியை சேர்ந்த பிரபல குதிரையேற்ற வீராங்கனையான பெட்டினா ஹாயிடமிருந்து வாங்கப்பட்ட குதிரை என்பது குறிப்பிடத்தக்கது. பதக்கம் வெல்லும் உறுதியோடு ஃபவாத்தும் மெடிகாட்டும் தடைகளை தாண்டிக்கொண்டிருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு