Published:Updated:

இளவேனில் வாலறிவன்: ஒலிம்பிக்கில் தமிழகத்தின் முதல் தங்கம் ரெடி!

Elavenil Valarivan

வேனில் - சூரியனின் வெப்பம் உக்கிரமாக இருக்கும் காலம்.

இளவேனில் வாலறிவன்: ஒலிம்பிக்கில் தமிழகத்தின் முதல் தங்கம் ரெடி!

வேனில் - சூரியனின் வெப்பம் உக்கிரமாக இருக்கும் காலம்.

Published:Updated:
Elavenil Valarivan

எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் இந்த இளவேனிலும், களத்துக்குள் கொஞ்சம் உக்கிரம்தான். இலக்கைத் துளைப்பது துப்பாக்கியிலிருந்து கிளம்பும் தோட்டாவா, இல்லை குறி தவறாத இவரின் உக்கிரப் பார்வையா எனத் தெரியவில்லை. ஆனால், இவரின் குறிக்கு எந்த இலக்குகளும் தப்புவதில்லை. ஈயமும் தகரமும் கலந்து செய்யப்பட்ட தோட்டாக்கள் இவரது துப்பாக்கியிலிருந்து பாயும்போது தங்கமாக மாறித்தான் இலக்கை அடைகின்றன. ஜப்பான் தலைநகரத்திலும் தங்கங்களை வேட்டையாடி வரத் தன் ஆயுதத்தோடு கிளம்பியிருக்கிறார் இந்தக் கடலூர்ப் பெண்!

10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில், பிரேசிலின் ரியோ, சீனாவின் புதியான் நகரங்களில் 2019-ம் ஆண்டு நடந்த இரண்டு உலகக் கோப்பை தொடர்களில் தங்கம் வென்று அசத்தினார் இளவேனில். அதுவரை பெரிதாக வெளியே தெரியப்படாத ஒரு வீராங்கனை, இரண்டு உலகக் கோப்பைகளில் தங்கம் வென்றது ஒட்டுமொத்த தேசத்தையும் ஆச்சர்யப்படவைத்தது. ஆனால், அதுவொன்றும் ஆச்சர்யமான விஷயம் இல்லை என்பதை தன் செயல்பாட்டால் தொடர்ந்து உணர்த்தினார் அவர்.

வயது: 21
ஜூனியர் உலகக் கோப்பையில் 4 தங்கங்கள் வென்றிருக்கிறார்
ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் 1 வெள்ளி

இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்களின் ஒரே எதிரி ‘கன்சிஸ்டன்சி’ என்ற வார்த்தைதான். சிறப்பாக செயல்படுவார்கள். ஆனால், திடீரென பெரிய போட்டிகளில் சறுக்கிவிடுவார்கள். ஆனால், இளவேனில் கன்சிஸ்டன்ஸியைத் தன் தோழியாக்கிவிட்டார். ஜூனியர் டூ சீனியர் ஃபார்மேட்டில் ஆடும்போது எந்தவித நெருக்கடியையும் உணராத அவர், தன் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்தபோதும் கூலாகவே இருந்தார்.

2019-ம் ஆண்டை உலகின் நம்பர் 1 வீராங்கனையாக முடித்து, உலக துப்பாக்கி சுடுதல் கழகத்தின் ‘கோல்டன் டார்கெட்’ விருதையும் வென்றார் இளவேனில். அடுத்த சில மாதங்களிலேயே, அவருக்கு நம்பிக்கை இளைஞருக்கான விருது கொடுத்து அழகுபார்த்தது ஆனந்த விகடன். நிச்சயம் அவர் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என்று எல்லோரும் ஆருடம் சொன்னார்கள். ஆனால், இளவேனில் டோக்கியோ செல்வாரா என்பதே மிகப்பெரிய சந்தேகமானது.

2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ககன் நரங் தான் இவரது ஆலோசகர்.
Elavenil Valarivan with Gagan Narang
Elavenil Valarivan with Gagan Narang
12-வது வயதில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி பெறத் தொடங்கிய இளவேனில் 13 வயதில் தன் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்.

துப்பாக்கி சுடுதலில் ஒரு பிரிவில் ஒரு நாட்டிலிருந்து 2 வீரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இந்தியாவுக்கான இரண்டு கோட்டாக்களையும் அபூர்வி சாண்டிலா, அஞ்சும் மொக்டில் ஆகிய இருவரும்தான் வென்று கொடுத்தார்கள். அவர்களோடு இளவேனிலும் சேர்ந்துகொள்ள மூவரில் யாருக்கு ஒலிம்பிக் வாய்ப்பு என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்தது.

இளவேனில்தான் உலகின் நம்பர் 1 வீராங்கனை ஆயிற்றே, நிச்சயம் அவருக்கு இடம் கிடைத்துவிடும் என்று நினைத்தால், அங்குதான் இந்திய துப்பாக்கிசுடுதல் கழகத்தின் ரேங்கிங் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியது. 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனை, இந்தியாவின் நம்பர் 1 இல்லை! இதற்கு மத்தியில் கொரோனா வந்துவிட, நாம் ஒலிம்பிக் செல்வோமா மாட்டோமா என்ற குழப்பத்தில்தான் இளவேனிலின் ஒவ்வொரு நாளும் நகர்ந்தது. ஆனால், அதற்காகவெல்லாம் அவர் துவண்டுவிடவே இல்லை. வீட்டிலேயே ஜிம் அமைத்து தன் பயிற்சியைத் தொடங்கினார். தொடர்ந்து தன் ஆட்டத்தில் முன்னேறினார். நீண்ட நாள்களுக்குப் பிறகு டெல்லியில் நடந்த ட்ரயல்ஸில் அபூர்வி, அஞ்சும் இருவரையும் விடவுமே சிறப்பாகச் செயல்பட்டார். இந்திய ஒலிம்பிக் அணியில் அவருக்கான இடம் உறுதியானது!

Elavenil Valarivan
Elavenil Valarivan

எத்தனை மாற்றங்கள் நடந்தாலும், குழப்பங்கள் ஏற்பட்டாலும், இளவேனில் கொஞ்சம் கூட நம்பிக்கை இழப்பதில்லை. இதோ, உதட்டில் அதே சிரிப்போடும், பார்வையில் அதே உக்கிரத்தோடும் தன் அடுத்த டார்கெட்டை லாக் செய்துவிட்டார். அடுத்த தோட்டா டோக்கியோவில் தங்கத்தை நோக்கிப் பாய்ந்துகொண்டிருக்கிறது.