Published:Updated:

பப்ஜி ப்ரோ ப்ளேயர் ஒலிம்பியன் ஆன கதை... சாதிப்பாரா 2கே கிட் திவ்யான்ஷ் சிங்?

இளவேனில் வாலறிவனோடு திவ்யான்ஷ் சிங்
இளவேனில் வாலறிவனோடு திவ்யான்ஷ் சிங்

இரண்டே வருடத்தில் அத்தனை சீனியர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர், இப்போது 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பப்ஜி ப்ரோ ப்ளேயராக எதிரிகளை சுட்டு வீழ்த்திக் கொண்டிருந்த ஒரு சுட்டிக்குழந்தை, இந்தியாவுக்காக டோக்கியோ ஒலிம்பிக்கில் 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் கலந்துக்கொள்ள இருக்கிறது. அக்மார்க் 2கே கிட்டான அந்த வீரரின் பெயர் திவ்யான்ஷ் சிங் பன்வர்.

18 வயதேயாகும் இந்த இளம் வீரர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை ஒரு மருத்துவர் மற்றும் தாய் செவிலியர். இவருடைய மூத்த சகோதரி துப்பாக்கிச் சுடுதலில் ஆர்வமிக்கவர். அவருடைய துப்பாக்கிகளை வைத்தே ஆரம்பத்தில் பொழுதுபோக்கிற்காக விளையாடியிருக்கிறார். இவரையும் ஒரு நேர்த்தியான வீரராக மாற்ற வேண்டும் என நினைத்த அவருடைய தந்தை ஜெய்ப்பூரிலேயே ஒரு பயிற்சி மையத்தில் சேர்த்துவிட்டார்.

இலக்குகளை குறிவைத்து தாக்குவதில் தீவிர ஆர்வம் காட்டிய திவ்யான்ஷ், நவயுக 2கே கிட்களின் சாசனப்படி பப்ஜியிலும் கால் பதித்தார். மிகத்தீவிரமாக பப்ஜியில் எதிராளிகளை சுட்டுத்தள்ளுவதை பார்த்த இவருடைய தந்தை, 'மொபைலில் சுட்டது போதும்... இனி நாட்டுக்காக பதக்கங்களை சுட்டுவிட்டு வா' எனக்கூறி டெல்லியிலுள்ள ஒரு அகாடெமியில் திவ்யான்ஷை சேர்த்துவிட்டார். பப்ஜி வீரன் பதக்க வேட்டையராக மாறியது இங்கேதான். 2017-ல் ஜுனியர் மற்றும் சீனியர் இரண்டு பிரிவிலும் தேசியளவில் முதலிடம் பிடித்தார்.

திவ்யான்ஷ் சிங்
திவ்யான்ஷ் சிங்
DD
2018 ஜுனியர் உலகக்கோப்பையில் தனியாக ஒரு தங்கம். இளவேனில் வாலறிவனோடு சேர்ந்து ஒரு தங்கம். அதே 2018-ல் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம். 2019 உலகக்கோப்பையில் தங்கம் என பதக்கங்களை மொத்தமாக வாரிச்சுருட்டியவர், பீஜிங் உலகக்கோப்பையில் வெள்ளி வென்றதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெற்றார். அப்போது அவருக்கும் வெறும் 16 வயது மட்டுமே.

ஒலிம்பிக் தாமதமானதால் இப்போது 18 வயதை தொட்டுவிட்டார்.

இரண்டே வருடத்தில் அத்தனை சீனியர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர், இப்போது 10மீ ஏர் ரைஃபிள் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரர்!

தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாமல் இளவேனில் வாலறிவனோடு இணைந்தும் கலக்கி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி உலகக்கோப்பையில் கூட இளவேனிலோடு சேர்ந்து அணிகள் பிரிவில் தங்கம் வென்றிருந்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் 10 மீ ஏர் ரைஃபிள் ஆண்கள் பிரிவிலும், அணிகள் பிரிவிலும் என இரண்டு பிரிவிலும் கலந்துக்கொள்ள இருக்கிறார். 'கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா' மோடிலேயே இருக்கிறார் திவ்யான்ஷ். இரண்டிலும் தங்கம் அடிக்க வேண்டும். அப்படியே அது தவறிப்போனாலும் எதோ ஒன்றில் தங்கம் நிச்சயம். இப்போதே இவருக்கு ஒரு அட்வான்ஸ் வாழ்த்தை சொல்லி வைக்கலாம்!

திவ்யான்ஷ் பங்கேற்கும் 10மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியின் தகுதிச்சுற்று நாளை(25-07-2021) காலை 9.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு