Published:Updated:

தீபிகா குமாரி: மாங்காயை குறிவைத்த கண்கள், இன்று ஒலிம்பிக் தங்கம் வெல்லப்போகின்றன!

2012 லண்டன் ஒலிம்பிக்ஸ். புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானம். வில்வித்தை போட்டிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்திய ரசிகர்களின் நம்பிக்கை பலமடங்கு அதிகரித்திருக்கிறது. காரணம், தீபிகா குமாரி. ரீகர்வ் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக அந்த அரங்கில் கால் பதித்தார் 18 வயது தீபிகா.

அந்த இளம் வயதில் 100 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்பை சுமந்துகொண்டிருந்தவருக்கு காய்ச்சல் வேறு. போதாக்குறைக்கு அன்று லண்டனில் தொடர்ந்து காற்றடிக்க, அவரால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. தன் முதல் போட்டியிலேயே தோல்வியடைந்து வெளியேறினார்.

இன்று 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒலிம்பிக் களத்துக்குள் நம்பர் 1 வீராங்கனையாக நுழையப்போகிறார். ஆனால், இந்த முறை எதிர்பார்ப்புகள் ஏற்படுத்தும் நெருக்கடியோ, உடல் நிலையோ, தட்பவெட்ப நிலையோ எதுவும் அவரை, அவரின் வெற்றியைத் தடுக்கப்போவதில்லை. இந்தக் காலகட்டத்தில் அவர் கண்டிருக்கும் முன்னேற்றம், அவர் பெற்றிருக்கும் அனுபவம் அவரை வேறொரு லெவலுக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. அதற்குச் சான்று, சமீபத்தில் பிரான்ஸில் நடந்து முடிந்த உலகக் கோப்பை!

வயது: 27
பிறந்த ஊர்: ராஞ்சி
வேர்ல்ட் ரேங்கிங்: 1
சக வில்வித்தை வீரர் அடானு தாஸை 2020 ஜூனில் மணந்தார் தீபிகா
Deepika Kumari
Deepika Kumari
சக வில்வித்தை வீரர் அடானு தாஸை 2020 ஜூன் மாதம் மணந்தார் தீபிகா

ஒலிம்பிக் போட்டிக்கு முன்பான தொடர் ஒவ்வொரு வீரருக்குமே முக்கியமானது. அது பெரிய தொடரோ இல்லை மிகவும் சிறிய தொடரோ, அந்த வீரரின் நம்பிக்கையில், அவர்களின் மனநிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தீபிகா பங்கேற்றது உலகக் கோப்பை வேறு. அதுவே ஒலிம்பிக் தொடருக்கு நிகரான நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், மிகவும் கூலாக அதைக் கையாண்டார் இந்த ராஞ்சிப் பெண்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனி நபர் பிரிவு - தங்கம்
அணிப் பிரிவு - தங்கம்
கலப்பு அணிப் பிரிவு - தங்கம்

மூன்று பிரிவுகளிலும் தங்கம் வென்று ஹாட்ரிக் அடித்தார். மீண்டும் நம்பர் 1 அரியணை ஏறினார். இப்போது உச்சபட்ச நம்பிக்கையோடு தங்கத்தை சுட்டே தீர்வது என்ற லட்சியத்தோடு தன் துப்பாக்கியோடு டோக்கியோவில் கால் பதித்திருக்கிறார்.

சிறு வயதில் கற்கள் கொண்டு மாங்காயைக் குறிவைத்துக்கொண்டிருந்த தீபிகா, வில்வித்தையில் பயிற்சி பெற அவர் பெற்றோரால் உதவிட முடியவில்லை. அவர் உறவினர் ஒருவரால் ஜார்கண்ட் டாடா அகாடெமியில் பயிற்சி பெற வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு குறுகிய காலகட்டத்திலேயே பதக்கங்கள் வெல்லத் தொடங்கினார். 2010 டெல்லி காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவின் கவனம் பெற்றவர், 2011 உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்று மொத்த உலகின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.

2010 காமன்வெல்த் போட்டிகள் - ரீகர்வ் தனிநபர் பிரிவு: தங்கம்
2010 காமன்வெல்த் போட்டிகள் - ரீகர்வ் அணிப்பிரிவு: தங்கம்
2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - ரீகர்வ் அணிப்பிரிவு: வெண்கலம்
2011 உலக சாம்பியன்ஷிப் - ரீகர்வ் அணிப்பிரிவு: வெள்ளி
2015 உலக சாம்பியன்ஷிப் - ரீகர்வ் அணிப்பிரிவு: வெள்ளி
2021 உலகக் கோப்பை, குவாட்டமாலா - ரீகர்வ் தனிநபர் பிரிவு: தங்கம்

லண்டன் ஒலிம்பிக் ஏமாற்றம், ரியோவிலும் தொடர்ந்தது. அணிப் பிரிவில் காலிறுதியிலும், தனிநபர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றிலும் வெளியேறினார். அந்த ஏமாற்றங்களுக்கெல்லாம் பதில் சொல்ல இப்போது ஜப்பான் தலைநகரத்தில் கால்வைத்திருக்கிறார் உலகின் நம்பர் 1 வீராங்கனை. அவர் எய்தும் ஒவ்வொரு அம்பும், தங்கத்தை நோக்கியே பாயப்போகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு