Published:Updated:

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் : ஆணுறைக்குத் தடை, ஒற்றைப் படுக்கை, பிளாஸ்டிக் திரை… கடும் கட்டுப்பாடுகள் ஏன்?!

‘’ ‘என்னுடைய சந்தோஷத்திற்கு யாரும் தடை போட முடியாது, தண்டனை கிடைத்தாலும் பரவாயில்லை’ என முடிவெடுக்கும் வீரர்கள் ஒருமுறைக்கு இருமுறை தங்கள் அறைக்குச் சென்று அங்குள்ள படுக்கையை சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.''

வழக்கமாக ஒலிம்பிக் போட்டிகளின் போது வீரர்களுக்கு இலவசமாக ஆணுறை வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு போட்டிகள் முடியும் வரை ஆணுறை எதுவும் வழங்கப்பட மாட்டாது என டோக்கியோ போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

ஒலிம்பிக் கிராமத்தை கொரோனா வைரஸ் தாக்கும் அபாயம் இருப்பதலேயே போட்டி அமைப்பாளர்கள் இப்படியொரு முடிவை எடுத்துள்ளனர். எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுக்கும் பொருட்டு 1988-ம் ஆண்டு முதல் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கும் வீரர்களுக்கு ஆணுறை வழங்கும் பழக்கம் பின்பற்றப்படுகிறது. ஆனால், கோவிட்-19 ஆபத்து காரணமாக வீரர்கள் தங்கியுள்ள ஒலிம்பிக் கிராமத்தில் சமூக விலகல் உறுதியாக கடைபிடிக்கப்படும் என டோக்கியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

‘’ ‘என்னுடைய சந்தோஷத்திற்கு யாரும் தடை போட முடியாது, தண்டனை கிடைத்தாலும் பரவாயில்லை’ என முடிவெடுக்கும் வீரர்கள் ஒருமுறைக்கு இருமுறை தங்கள் அறைக்குச் சென்று அங்குள்ள படுக்கையை சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், சுற்றுச்சூழலுக்கு தகுந்தார்போல் இந்தப் படுக்கையை கார்ட் போர்டில் தயாரித்துள்ளோம். ஒருவருக்கு மேல் இந்தப் படுக்கை எடை தாங்காது.

டோக்கியோ ஒலிம்பிக் கிராமம்
டோக்கியோ ஒலிம்பிக் கிராமம்

போட்டியின் போது வீரர்கள் அடிக்கடி சந்திக்க கூடிய நபர்களின் பட்டியலை அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும். இதில் அவர்களது பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்ட், அணி உறுப்பினர்களும் அடங்குவர். இந்த உத்தரவை பின்பற்றாவிட்டால், உதாரணமாக கொடுக்கப்பட்டுள்ள பெயர் பட்டியலில் இல்லாத நபரை சந்தித்தால் முதலில் எச்சரிக்கை கொடுக்கப்படும். அதையும் மீறினால் போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள்’’ என்று எச்சரித்திருக்கிறார்கள்.

கொரானா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பல தடைகள் போடப்பட்டுள்ளது. அதில் ஒன்றுதான் உடலுறவு மற்றும் இதர வகையான உடலியல் ரீதியான தொடர்புகளுக்கான தடை.

டோக்கியோவில் உள்ள ஹருமி மாவட்டத்தில் 44 ஏக்கரில் அமைந்துள்ளது ஒலிம்பிக் கிராமம். போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வரவுள்ள 18,000 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் யாரும் இந்தக் கிராமத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களோடு நெருக்கமாக பழகவும் அனுமதி இல்லை.

மேரி கோம் - டோக்கியோ ஒலிம்பிக் கிராமம்
மேரி கோம் - டோக்கியோ ஒலிம்பிக் கிராமம்

ஒலிம்பிக் கிராமத்திற்குள் மதுபானங்களை வீரர்கள் தாராளமாக எடுத்து வரலாம் என்றாலும் அவர்கள் தங்கள் அறைகளில் தனியாகவோ அல்லது அவர்களது அறைவாசிகளோடு மட்டுமே கண்டிப்பாக அருந்த வேண்டும் என்ற உத்தரவும் போடப்பட்டுள்ளது.

சாப்பிடும் நேரத்தில் உணவு மேஜையில் ஒருவருக்கொருவர் இரண்டு மீட்டர் இடைவெளி விட்டு அமர்ந்திருக்க வேண்டும் என்றும் குடிப்பது, உண்பது தவிர மற்ற எல்லா நேரங்களிலும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் இடைவெளி விட்டு அமரவும் எச்சில் மூலம் வரைஸ் பரவுவதை தடுக்கவும் மேஜைகளில் பிளாஸ்டிக்கால் நடுவில் திரை போல் மறைக்கப்பட்டுள்ளது

டோக்கியோ ஒலிம்பிக் கிராமம்
டோக்கியோ ஒலிம்பிக் கிராமம்

பல்வேறு நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வரவுள்ளதால், அதிக வீரியமுள்ள புது வகையான கொரானோ வைரஸ் பரவுவதற்கு இது காரணமாகி விடக் கூடாது என ஜப்பான் மக்கள் அஞ்சுகிறார்கள். உகாண்டா ஒலிம்பிக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கு பரிசோதனையின் போது பாசிட்டிவ் முடிவு வந்ததால், அவரை ஜப்பான் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கவில்லை. ஒலிம்பிக் அணிகளில் வந்த முதல் பாசிட்டிவ் கேஸ் இது.

ஒலிம்பிக் போட்டிகள் கண்டிப்பாக நடக்கும் என்பதை உறுதிப்படுத்தும் முயற்சியாக, விளையாட்டு வீரர்களுக்கும் பணியாளர்களுக்கும் 40,000 Pfizer தடுப்பூசியை வழங்கியுள்ளது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி. போட்டியில் கலந்துகொள்ளும் 75 சதவிகிதத்தினருக்கும் ஏற்கெனவே தடுப்பூசி போட்டாகிவிட்டது.

வீரர்கள் டோக்கியோ நகரைச் சுற்றிப் பார்க்கச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜப்பான் உணவின் சுவையை ருசிக்க அவர்களுக்கு எந்த தடையும் இல்லை. 280 பேர் அமரக்கூடிய உணவு மேஜையில் ஜப்பானின் பிரபல உணவுகளான டெம்புரா, அரிசி உருண்டை, ஓகனோமியாகி போன்றவை பரிமாறப்படுமாம்.

போட்டி நடைபெறும் ஒவ்வொரு இடத்திற்கும் அதிகபட்சம் 10,000 பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என டோக்கியோ போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர். எப்படியும் இதில் பாதியளவாவது பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு