Published:Updated:

புதிய வரலாறு படைக்குமா இந்திய மகளிர் ஹாக்கி அணி... முதல் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் மோதல்?!

Indian Women's Hockey Team

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறது ராணி ராம்பால் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி. நாளை மாலை 5.15 மணிக்கு நெதர்லாந்தை சந்திக்கிறது இந்திய பெண்கள் அணி!

புதிய வரலாறு படைக்குமா இந்திய மகளிர் ஹாக்கி அணி... முதல் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் மோதல்?!

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறது ராணி ராம்பால் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி. நாளை மாலை 5.15 மணிக்கு நெதர்லாந்தை சந்திக்கிறது இந்திய பெண்கள் அணி!

Published:Updated:
Indian Women's Hockey Team

ஆண்கள் அணியைப் போல், இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு ஒலிம்பிக் அரங்கில் பெரிய வரலாறு இல்லை. இப்போதுதான் மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளப் போகிறார்கள். ஆகையால் வரலாறு படைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள் நம் வீராங்கனைகள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதல் முறையாக தொடர்ந்து இரண்டு முறை ஓலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்று வரலாற்று சாதனை படைத்தது ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி. ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு 36 வருடங்களுக்குப் பிறகு தகுதி பெற்றிருந்தாலும், அது மறக்கக்கூடிய நிகழ்வாகவே அமைந்தது. விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கில் தோல்வியுற்றதோடு 19 கோல்களை எதிரணிக்குத் தாரை வார்த்து வெறும் மூன்று கோல்களை மட்டுமே அடித்தது இந்திய அணி. ஜப்பானுக்கு எதிரான ஒரு போட்டியை மட்டுமே டிரா செய்தது. அதுவும் இருமுறை பின்தங்கிய நிலையில் இருந்த பிறகே ரானி ராம்பால் தலைமையிலான இந்திய அணியால் டிரா செய்ய முடிந்தது.

தற்போது பத்தாவது ரேங்க்கில் உள்ள இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றாலே பெரிய விஷயம்தான். ஆனால், இது எட்டக்கூடிய இலக்குதான் என நம்பிக்கையோடு பேசுகிறார் பயிற்சியாளர் ஜோயர்ட் மரினே.

“கடந்த நான்கு வருடங்களாக நாங்கள் நன்றாக விளையாடி வருகிறோம். காலிறுதிக்கு தகுதி பெறுவதே எங்களுடைய ஒரே இலக்கு. அது அடையக் கூடியதுதான். ஒருவேளை நாங்கள் தகுதி பெற்றுவிட்டால், அதன்பிறகு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். வீரர்கள் நம்பிக்கையோடு இருப்பதை நானே பார்க்கிறேன். முன்பு சிறிய மார்ஜினில் தோல்வியுற்றால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இப்போது தோல்வியடைந்தால் அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை” என்கிறார் மரினே.

உலககோப்பை (காலிறுதி சுற்றை அடைந்தது), காமன்வெல்த் போட்டிகள் மற்றும் ஆசிய போட்டிகளில் இந்திய அணியின் செயல்பாடு, நிச்சயம் டோக்கியாவில் சிறப்பாக விளையாடுவதற்கான நம்பிக்கையை அவர்களுக்கு கொடுக்கும். அதேசமயம் மனதளவிலும் தொழில்நுட்ப அளவிலும் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

“36 வருடங்களுக்குப் பிறகு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற போது நாங்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தோம். ஆனால், அந்த சமயத்தில் எங்களிடம் போதிய அணுபவம் இல்லை. ரேங்கிங்கை பற்றிதான் நாங்கள் நிறைய யோசித்தோம்” எனக் கூறுகிறார் இந்திய அணியின் துணை கேப்டனும் கோல்கீப்பருமான சவிதா.

Indian Women's Hockey Team
Indian Women's Hockey Team

மேலும், “எதிரணியின் ரேங்கிற்கு இப்போதும் நாங்கள் மதிப்பளிக்கிறோம். அதே சமயத்தில் எங்கள் பலத்தையும் நாங்கள் அறிந்தே வைத்துள்ளோம். அவர்களுக்கு சரிசமாக நின்று, ஒவ்வொரு முறையும் எங்களது சிறப்பான பங்களிப்பை வழங்குவோம். எந்த சாக்குப்போக்கும் சொல்ல நாங்கள் விரும்பவில்லை. எல்லாவற்றுக்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்” என்றும் அவர் கூறினார்.

எனினும், உடல்திறனை பொறுத்தளவில் எந்த அணியோடும் போட்டி போடும் அளவுக்கு சிறப்பான நிலையில் தான் இந்திய அணி உள்ளது.

“ஐரோப்பிய அணியோடு எங்களால் சரிசமமாக போட்டி போட முடியாது என முன்பெல்லாம் மக்கள் கூறுவார்கள். கடந்த நான்கு வருடங்களாக எங்கள் அணியை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், ஃபிட்னஸ் விஷயத்தில் எந்த விதத்திலும் மற்ற அணியை விட நாங்கள் குறைந்தவர்கள் இல்லை என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்” என்கிறார் இந்திய அணியின் கேப்டன் ராணி.

Rani Rampal
Rani Rampal

இந்திய பெண்கள் அணி பல காலமாக கேப்டன் ராணியையே பெரிதும் சார்ந்திருக்கிறது. பெரும்பாலும் அவரின் செயல்பாடுகளைப் பொறுத்தே அணியின் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், சமீப வருடங்களாக, இந்திய கேப்டனின் சுமையை குறைக்கும் அளவுக்கு புதிய வீரர்கள் அணியில் உருவெடுத்துள்ளார்கள்.

தொடர்ந்து இரண்டு முறை ஒலிம்பிக் போட்டிக்கு தகுபெற்றதோடு மட்டுமல்லாமல் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஸ்பெயின் போன்ற பலமிக்க அணிகளை தோற்கடித்ததன் மூலம் முன்பை விட தாங்கள் பலமிக்க அணியாக மாறியுள்ளோம் என அனைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்கள்.

“பெண்கள் அணியினர் அற்புதமாக விளையாடுகிறார்கள். முன்னணி அணியாக வர முடியாவிட்டாலும் ஒட்டுமொத்த அளவில் சிறப்பான அணியாக உருவெடுத்துள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் திட்டமிடுதலிலும் உடலளவிலும் நிறைய முன்னேற்றம் கண்டுள்ளார்கள். இனியும் இந்திய அணி ராணி ராம்பாலை மட்டும் சார்ந்திருக்க தேவையில்லை. ஏனென்றால பல நல்ல வீரர்கள் அணியில் உள்ளனர்” என்கிறார் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் எம்.எம் சோமையா.

Vandana Kataria
Vandana Kataria

இந்திய அணியில் அணுபவ வீரர்களுக்கு பஞ்சமில்லை. டிஃபெண்டர் தீப் கிரேஸ் எக்கா மற்றும் கோல்கீப்பர் சவிதா ஆகியோர் இந்திய அணிக்காக 200 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளனர். அதேபோல், கோல் போடும் வேலையை ராணியோடு சேர்ந்து வந்தனா கடாரியா பங்கிட்டுக்கொள்வார். மொத்தம் 64 கோல்கள் அடித்து தற்போதைய அணியில் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார் அவர். ராணியை விட ஓரு போட்டி மட்டுமே குறைவாக விளையாடியுள்ள வந்தனா, அணுபத்திலும் சளைத்தவர் இல்லை.

“நிச்சயம் இந்திய அணிக்கு ராணி ராம்பால் முக்கியமான நபராக இருப்பார். ஆனால், என்னைப் பொறுத்தவரை தீப் கிரேஸ் எக்காவும் வந்தனா கடாரியாவும் முக்கிய பங்காற்றுவார்கள் என்றே நினைக்கிறேன். தங்கள் அணுபவத்தை நிச்சியம் அவர்கள் போட்டியில் காண்பிக்க வேண்டும். ஃபிலிக்கர் குர்ஜித் கவுர், ஃபார்வர்ட் லால்ரெம்சியாமி போன்ற நம்பிக்கை அளிக்கக்கூடிய இளம் வீரர்களும் அணியில் இருக்கிறார்கள். பொறுப்பை உணர்ந்து இவர்களும் நன்றாக விளையாடினால், இந்தியாவின் வாய்ப்பு அதிகரிக்கும்” என்று கூறுகிறார் சோமையா.

பலமிக்க அணிகளுக்கு எதிராக இந்திய அணியின் செயல்பாடு மெச்சக்கூடியதாக இருந்தாலும் போட்டி முடிவுகள் எதுவும் சொல்லும்படியாக இல்லை. சமீப காலமாக இதுவே இந்திய அணியின் பிரச்னையாக இருக்கிறது.

நெதர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் தென் ஆப்ரிக்கா போன்ற பலமிக்க அணிகள் அடங்கிய கடினமான குரூப்பில் இடம்பெற்றுள்ளது இந்தியா. இதில் தென் ஆப்ரிக்காவை தவிர்த்து மற்ற அணிகள் அனைத்தும் இந்தியாவை விட ரேங்கில் முன்னனியில் உள்ளது. அயர்லாந்தை தோற்கடித்து விட்டால் காலுறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விடலாம். ஏனென்றால் அந்த அணி தான் இந்தியாவை விட ஒரு ரேங்க் முன்னணியில் உள்ளது. 2018 உலக கோப்பை காலிறுதிப் போட்டியில் இரு அணிகளும் சந்தித்த போது, பெனால்ட்டி ஷூட் அவுட் முறையில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.