Published:Updated:

பஜ்ரங் புனியா: டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லப்போகும் மல்யுத்த மாவீரன்!

பஜ்ரங் புனியா

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படும் இந்தியாவின் பஜ்ரங் புனியா முதல் சுற்றுப்போட்டியில் வெற்றி. கிர்கிஸ்தான் வீரரை தோற்கடித்தார். காலிறுதி சுற்று இன்னும் சற்று நேரத்தில்...

பஜ்ரங் புனியா: டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லப்போகும் மல்யுத்த மாவீரன்!

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படும் இந்தியாவின் பஜ்ரங் புனியா முதல் சுற்றுப்போட்டியில் வெற்றி. கிர்கிஸ்தான் வீரரை தோற்கடித்தார். காலிறுதி சுற்று இன்னும் சற்று நேரத்தில்...

Published:Updated:
பஜ்ரங் புனியா

இந்தியாவின் மல்யுத்த வீரர்களுக்கென்று ஒரு டெம்ப்ளேட் இருக்கும். ஹரியானாவில் பிறந்தவராக, மல்யுத்த வீரரின் மகனாக, தந்தையின் ஒலிம்பிக் கனவுகளை சுமப்பவராக என இப்படித்தான் இந்தியாவின் பெரும்பாலான மல்யுத்த வீரர் அல்லது வீராங்கனையின் பிண்ணனி இருக்கும். பஜ்ரங் புனியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. அவரும் இதே பின்னணியை கொண்ட மல்யுத்த வீரர்தான். ஆனால், அவர் செய்திருக்கும் சாதனைகள் எந்த டெம்ப்ளேட்டுக்குள்ளும் அடங்காதவை. இதற்கு முன் யாரும் செய்திடாதவை. டோக்கியோ ஒலிம்பிக்கின் பதக்க ரேஸில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை இவர்தான் வென்று கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்டதைப்போல, 27 வயதாகும் பஜ்ரங் புனியா ஹரியானா மாவட்டத்தில் குதாம் என்ற கிராமத்தில் பிறந்தவரே. அவருடைய தந்தையான பல்வான் சிங் புனியா ஒரு மல்யுத்த வீரர். மல்யுத்தம் ஆழமாக வேர் கொண்டிருக்கும் மண்ணில் பிறந்ததாலும் தந்தையே ஒரு மல்யுத்த வீரர் என்பதாலும் இயற்கையாகவே பஜ்ரங்கிற்கு மல்யுத்தத்தின் மீது ஆர்வம் உருவாகியிருக்கிறது. பெரிய அளவில் பணம் செலவழித்து அகாடமிகளில் சேர்த்து பயிற்சி கொடுக்கும் அளவுக்கு குடும்பத்தில் வசதியில்லை என்பதால், அருகிலுள்ள ஒரு சாதாரண மல்யுத்த பள்ளியிலேயே தனது ஆரம்பகால பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.

கொஞ்சம் வளர்ந்த பிறகு, ஹரியானாவை சேர்ந்த பிரபல மல்யுத்த வீரர் மற்றும் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் வெண்கல பதக்கம் வென்றவருமான யோகேஷ்வர் தத்திடம் பயிற்சிக்கு சேர்ந்தார் பஜ்ரங். மல்யுத்தத்தில் ஒரு உயரத்தை அடைய வேண்டும் என நினைத்த பஜ்ரங், அந்த மல்யுத்தத்தில் ஏற்கெனவே ஒலிம்பிக் பதக்கம் வரை வென்ற யோகேஷ்வர் தத்திடம் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்ததை மிகப்பெரிய விஷயமாக நினைத்தார். இதனால் மல்யுத்தத்தின் மீதான அவரது ஆர்வம் இன்னமும் அதிகரித்தது.

பஜ்ரங் புனியா
பஜ்ரங் புனியா
முதல் முறையாக 2013-ம் ஆண்டில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கம் வென்றதன் மூலமே வெளி உலகுக்கு அவர் தெரிய ஆரம்பித்தார். தொடர்ந்து 2014-ல் ஆடிய அத்தனை தொடர்களிலும் பதக்கங்களை குவித்தார். அந்த ஆண்டில் ஆசிய சாம்பியன்ஷிப், காமென்வெல்த் தொடர், ஆசிய போட்டிகள் மூன்றிலுமே வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2016 ஒலிம்பிங்கில் பஜ்ரங் புனியாவும் மிகப்பெரிய பங்களிப்பை அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இங்கேதான் அவர் ஒரு ட்விஸ்ட்டை வைத்தார்.

தன்னுடைய குரு மற்றும் ஆதர்ச வீரரான யோகேஷ்வர் தத் தனது கடைசி ஒலிம்பிக்கில் ஆட இருப்பதால், அவர் ஆடும் 65 கிலோ எடைப்பிரிவில் ஆடி அவருக்கு அசௌகரியத்தை கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக தனது ஒலிம்பிக் கனவை தள்ளிப்போட்டார்.

நான் அப்போது ஒலிம்பிக்கில் பங்கேற்பது பற்றியெல்லாம் யோசிக்கவே இல்லை. யோகேஷ்வர் தத் தனது கடைசி ஒலிம்பிக்கில் ஆடவிருக்கிறார். அவர் எப்படியாவது பதக்கத்தை வென்றுவிட வேண்டும் என்றே நினைத்தேன்.
பஜ்ரங் புனியா

2012 லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றிருந்ததால் யோகேஷ்வர் தத் மீதும் பயங்கர எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர் முதல் சுற்றிலேயே தோற்று ஏமாற்றம் அளித்தார். அந்த ஒலிம்பிக்ஸுக்கு பிறகு அவர் மெதுவாக ஒதுங்கி அரசியலுக்கு வந்துவிட்டார். குரு ஒதுங்கிய நிலையில் அவருடைய சிஷ்யன் தனது ஆட்டத்தை தொடங்கினார்.

பஜ்ரங் புனியா
பஜ்ரங் புனியா

இதுவரை மல்யுத்தத்தில் இந்தியா செய்யாத சாதனைகளையெல்லாம் செய்தார். 2016-ல் ஒரே ஆண்டில் காமென்வெல்த் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் இரண்டிலுமே தங்கம் வென்றார். 2018,19 இரண்டு ஆண்டிலும் உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றார். இந்தியர் ஒருவர் மல்யுத்தத்தின் உலக சாம்பியன்ஷிப் தொடரில் மூன்று முறை பதக்கம் வென்ற நிகழ்வு இதற்கு முன் நடந்ததே இல்லை. 2018 காமன்வெல்த் தொடரில் தங்கம், ஆசிய போட்டிகளில் தங்கம், ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் என பஜ்ரங் பூனியா ஆடிய அத்தனை தொடர்களிலும் போடியத்தில் ஏறி இந்தியாவின் பெருமையை உயர்த்தினார். இந்த வெற்றிகள் மூலம் 65 கிலோ எடைப்பிரிவில் உலகளவில் நம்பர் 1 வீரர் என்ற அந்தஸ்த்தை பெற்றிருக்கிறார். மேலும், டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான டிக்கெட்டையும் பெற்றார்.

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையில் காயங்கள் எப்போதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும். பஜ்ரங் புனியாவும் பலமுறை காயங்களால் அவதிப்பட்டிருக்கிறார்.

2011-ல் ஒரு முறையும் 2017-ல் ஒரு முறையும் முதுகு மற்றும் கழுத்து பகுதியில் ஏற்பட்ட காயங்களால் சில மாதங்கள் ஓய்வில் இருந்திருக்கிறார். ஆனால், காயங்கள் அவரின் ஆட்டத்தில் துளி கூட மோசமான தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இரண்டு முறை காயங்களிலிருந்து மீண்ட பிறகும் மிகப்பெரிய தொடர்களில் பதக்கம் வென்றிருந்தார். தற்போது கூட அவருடைய வலது முட்டியில் லேசான காயம் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. ''பெரிய காயம் எல்லாம் இல்லை. ஒரே வாரத்தில் மீண்டு விடுவேன்'' என நம்பிக்கையோடு பேசியிருக்கிறார்.

பயிற்சியாளர் ஷாகோவுடன்
பயிற்சியாளர் ஷாகோவுடன்
பஜ்ரங் மாதிரியான பொறுமையான அதேநேரத்தில் தன்னுடைய இலக்கில் துல்லியமான பார்வை கொண்ட வீரரை நான் பார்த்ததே இல்லை. மல்யுத்தத்தின் மீது பயங்கர ஆர்வத்துடனும் அர்ப்பணிப்போடும் இருக்கிறார். எனக்கு பதக்கம் வென்ற பல முன்னாள் வீரர்களையும் இப்போது பயிற்சியாளராக இருப்பவர்களையும் தெரியும். அவர்களிடமெல்லாம் எதிர்மறையான சிந்தனைகளும் எப்போதும் இருக்கும். ஆனால், பஜ்ரங்கிடம் நான் ஒரு நொடி கூட எதிர்மறையான சிந்தனைகளை உணர்ந்ததில்லை. எப்போதுமே நேர்மறையாகவே யோசிப்பார். அவருக்கு பயிற்சியளிப்பதன் மூலம் நிறைய கற்றுக்கொள்கிறேன்.
பயிற்சியாளர் ஷாகோ பெண்டின்டிஸ்

2008, 2012, 2016 ஒலிம்பிக் போட்டிகள் என மல்யுத்தத்தில் இந்தியா தொடர்ச்சியாக பதக்கங்களை வென்றிருந்தாலும் தங்கப்பதக்கத்தை இந்தியா இது வரை வென்றதில்லை. அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் 65 கிலோ எடைப்பிரிவில் பஜ்ரங் பூனியா தங்கமகனாக உருவெடுப்பார் என நம்பிக்கையோடு காத்திருப்போம்!

பஜ்ரங் புனியாவின் காலிறுதி சுற்று ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில் நடைபெற இருக்கிறது.