2021 பாராலிம்பிக் விளையாட்டு விருதுகள் நேற்று அறிவிக்கபட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த விருது விழாவில், பாராலிம்பிக் விளையாட்டுகளில் சாதித்த வீரர்கள் சிறப்பிக்கபடுவார்கள். கொரோனா காலகட்டம் என்பதால் இம்முறை விருது விழா இணையம் வழியே நிகழ்ந்துள்ளது.
இதில் ஐந்து பிரிவுகளில் விருதுகள் வழங்கபடுவது வழக்கம். இம்முறை சிறந்த அறிமுக வீராங்கனைக்கான விருதை, இந்தியாவின் 20 வயது துப்பாக்கி சுடுதல் வீராங்கனி அவனி லெகரா வென்றுள்ளார். இவர் இந்தாண்டு டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் துப்பாக்கிசுட்டில் ஒரு தங்கபதக்கமும் ஒரு வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்தார். இவர் இந்தியாவிலிருந்து பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற முதல் பெண்!
விருது விழாவில் பேசிய அவனி, "இந்த விருதைப் பெறுவது எனக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய கௌரவம். எப்போதும் என் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி நாட்டிற்காக பதக்கம் வெல்வதே என் கவனமாக இருந்துள்ளது. கடின உழைப்பு, அர்பணிப்பு, பேரார்வம் இருந்தால் எதையும் சாதிக்கமுடியும். பதக்கம் வென்ற அந்தத் தருணம் எனக்கு கனவுகள் நனவான தருணம். வெற்றியுடன் பொறுப்பும் அதிகமாகி உள்ளது" என்று கூறினார். மேலும் இந்தியா திரும்பிய பின்னர் அவர் படித்த பள்ளிக்குச் சென்றதாகவும் அங்கு பல சிறு குழந்தைகள் அவரால் உத்வேகம் கொண்டதைக் காண மகிழ்ச்சியாக இருந்தது என்றும் குறிப்பிட்டார்.
இந்தாண்டு இந்திய அரசாங்கத்தால் கேல் ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது. 11 வயதில் கார் விபத்தில் முதுகெலிம்பில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாமல் போன அவானி, இன்று தனது 20 வயதில் புகழ் மழையில் நடந்து கொண்டிருக்கிறார்.

மேலும், மற்ற பிரிவுகளில் வெவ்வேறு நாட்டை சேர்ந்த வீரர்கள் விருதுகளை பெற்றனர். சிறந்த அறிமுக வீரராக (ஆண்) பாராலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற செக் குடியரசு நாட்டை சேர்ந்த அடெம் பெஸ்கா தேர்ந்தெடுக்கபட்டார். சிறந்த பெண் தடகள வீரராக நெதர்லாந்து டென்னிஸ் வீரர் டெய்டு டீ க்ரூட் தேர்ந்தெடுக்கபட்டார்.
சிறந்த ஆண் தடகள வீரராக ஸ்விட்சர்லாந்தின் மார்சல் ஹக் தேர்ந்தெடுக்கபட்டார். இவர் இந்தாண்டு பாராலிம்பிக்கில் பங்கேற்ற நான்கு தடகளப் போட்டிகளில் நான்கு தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்தவர். சிறந்த அணியாக இங்கிலாந்து ரக்பி அணி தேர்ந்தெடுக்கபட்டது. இவர்களும் டோக்கியோ பாராலிப்பிக்கில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் சிறந்த அதிகாரியாக ஜெர்மன் அணியின் மருத்துவர் அஞ்சா ஹிர்ஷ்முல்லர் தேர்ந்தெடுக்கபட்டார். பெல்ஜிய டென்னிஸ் வீரர் ஜோச்சிம் ஜெராட்டின் உயிரைக் காப்பாற்றிய தருணம் இவருக்கு இந்த விருதினை பெற்று தந்துள்ளது.