Published:Updated:

அடானு தாஸ் : ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்திய திக் திக் நிமிடங்கள்!

Atanu Das
Atanu Das ( AP )

3 ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற தென்கொரிய வில்வித்தை வீரர் ஓ ஜின்-ஹியெக்கை வீழ்த்தி வரலாறு படைத்திருக்கிறார் இந்திய வில்வித்தை வீரர் அடானு தாஸ். மிகவும் பரபரப்பான போட்டியில் ஷூட் அவுட் வரை சென்று வெற்றி பெற்றார் அடானு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆண்கள் ரீகர்வ் வில்வித்தை போட்டிகள் நடந்துவருகின்றன. இந்திய வீரர் அடானு தாஸ் இன்று தன் முதல் போட்டியில் சீன தைபே வீரர் டெங் யு-சென் உடன் மோதினார். அந்தப் போட்டியும் மிகவும் பரபரப்பாகவே சென்றது. கடைசி செட் வரை சென்ற போட்டியில் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார் அடானு. இதன் மூலம் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இரண்டாவது சுற்றில் தென் கொரிய வீரர் ஓ ஜின்-ஹியெக் உடன் மோதினார் அடானு தாஸ். 39 வயதான ஜின்-ஹியெக் இதுவரை 3 ஒலிம்பிக் பதக்கங்கள் வென்றிருக்கிறார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கமும், அணிப் பிரிவில் வெண்கலமும் வென்றிருந்தார். நடந்துவரும் டோக்கியோ ஒலிம்பிக்கில், சில தினங்களுக்கு முன் நடந்த ரீகர்வ் அணிப் பிரிவிலும் தங்கம் வென்றிருந்தார். இவரைத்தான் 29 வயது அடானு தாஸ் எதிர்கொண்டார். அதிலும் தன் முதல் போட்டியின் ஜின்-ஹியெக் 6-0 என்று வென்று வந்திருந்ததால் வெற்றி பெறுவது கடினம் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எல்லாம் சில நிமிடங்களில் மாறியது.

அடானு தாஸ்: ஒலிம்பிக் பதக்கத்தைக் குறிவைத்துப் பாயும் அம்பு!

போட்டியின் முதல் அம்பை எய்தது அடானு தாஸ் தான். சிறப்பான தொடக்கத்தை எதிர்பார்த்தபோது, முதல் அம்பில் 8 புள்ளிகள் மட்டுமே எடுத்தார். ஆனால், தென் கொரிய வீரரும் 8 புள்ளிகளுடன்தான் தொடங்கினார். அடுத்த அம்பிலும் அடானு 8 புள்ளிகளே எடுக்க, 9 புள்ளிகள் எடுத்து முன்னிலை பெற்றார் ஜின்-ஹியெக். அடுத்த அம்பில் இருவரும் 9 எடுக்க, 26 - 25 என முதல் செட்டை வென்று 2 புள்ளிகள் பெற்றார் ஜின்-ஹியெக்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காற்று பலமாக அடித்ததால், வில்வித்தை வீரர்களால் தங்களின் சிறப்பான ஆட்டத்தைக் கொடுக்க முடியவில்லை. 6-0 என வென்றிருந்தாலும் தன் முந்தைய போட்டியில் ஜின்-ஹியெக் சுமாராகவே செயல்பட்டிருந்தார். ஆனால், அடானு தாஸ் சூப்பராக செயல்படாவிட்டாலும், கன்சிஸ்டென்ஸியைக் கடைபிடித்தார். ஒரு கட்டத்தில் தொடர்ந்து 7 முறை 9 பாயின்ட் ஏரோக்கள் அடித்தார். இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்களில் இரு வீரர்களும் சொல்லி வைத்தது போல் 27 புள்ளிகளாக எடுக்க, 2 செட்களுமே டை ஆனது. அதனால், ஒவ்வொரு செட்டுக்கும் ஆளுக்கு ஒரு புள்ளி கொடுக்கப்பட்டது. மூன்றாவது சுற்றின் முடிவில் 4-2 என முன்னிலையில் இருந்தார் ஜின்-ஹியெக்.

Atanu Das
Atanu Das
AP

நான்காவது செட்டை ஜின்-ஹியெக் வென்றால் அவர் போட்டியையும் வென்றுவிடுவார். அடானு வெளியேறவேண்டியிருக்கும். அப்படியொரு நெருக்கடியான சூழ்நிலையில் அட்டகாசமான கம்பேக் கொடுத்தார் அடானு. ஆனால், தொடக்கம் என்னவோ அவருக்கு சுமாராகத்தான் அமைந்தது. அவர் மீண்டும் ஒரு 8 புள்ளி ஷாட் அடிக்க, கொரிய வீரரோ 9 புள்ளிகள் பெற்றார். அடுத்த அம்பில் அடானு 9 புள்ளிகள் எடுக்க, சொதப்பிய கொரிய வீரர் 7 புள்ளிகள் மட்டுமே எடுத்தார். முன்னிலை பெறக் கிடைத்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திய அடானு தாஸ், தன் முதல் 10 பாயின்ட் ஏரோவை எய்து அந்த செட்டை வசப்படுத்தினார். தன் மூன்றாவது அம்பில் 6 புள்ளிகள் மட்டுமே எடுத்து 22 புள்ளிகளுடன் செட்டை முடித்துக்கொண்டார் ஜின்-ஹியெக். 4-4!

பரபரப்பான போட்டி கடைசி செட் வரை சென்றுவிட்டது. கேலரியில் இருந்த அடானு தாஸ் மனைவியும், உலகின் நம்பர் 1 வீராங்கனையுமான தீபிகா குமாரி தன் கணவருக்காக கரகோஷங்கள் எழுப்பிக்கொண்டிருந்தார். அத்தனை நெருக்கடிக்கு மத்தியில் கடைசி செட் தொடங்கியது.

ஜின்-ஹியெக் - 10 | அடானு தாஸ் - 10
ஜின்-ஹியெக் - 9 | அடானு தாஸ் - 9
ஜின்-ஹியெக் - 9 | அடானு தாஸ் - 9

இருவரும் சொல்லிவைத்தது போல் செயல்பட, மீண்டும் புள்ளிகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. போட்டி 5-5 என டை ஆனது. இதனால், ஆட்டம் ஷூட் அவுட்டுக்குச் சென்றது. இருவரும் ஒரேயொரு அம்பை எய்வார்கள். அதிக புள்ளிகள் பெறுபவர்கள் போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இருவரும் ஒரே புள்ளி பெற்றால், யாரின் அம்பு மையப்புள்ளிக்கு மிக அருகில் இருக்கிறதோ, அவருக்கே வெற்றி!

பரபரப்பான ஷூட் அவுட். லண்டன் ஒலிம்பிக் சாம்பியனை எதிர்கொள்கிறார் அடானு. ஒவ்வொருவருக்கும் இதயம் இரு மடங்கு அதிக வேகத்தில் துடித்துக்கொண்டிருந்தது. முதலில் எய்த ஜின்-ஹியெக் 9 புள்ளிகள் எடுத்தார். குறைந்தபட்சம் 9 புள்ளிகளாவது எடுத்துவிடுவாரா என்ற பயத்தில் எல்லோரும் காத்திருக்க, தன் பெஸ்டை கடைசி நொடியில் கொடுத்தார் அடானு. நன்றாக நேரம் அடித்து அவர் எய்த அம்பு, மையப்புள்ளிக்கு மிக அருகே பாய, 10 என்று நடுவர் அறிவிக்க, 3 ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற தென் கொரிய வீரர் ஒருவரை வென்று சரித்திரம் படைத்தார் அடானு தாஸ்.

இந்த வெற்றியின் மூலம் அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு