Published:Updated:

கோல்ஃப் : அதிதி அசோக் பதக்கம் வெல்வாரா... சத்தம் இல்லாமல் ஒரு யுத்தம்!

அதிதி அசோக்
அதிதி அசோக்

புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களை நம்பி ஏமாந்திருந்த இந்திய ரசிகர்களுக்கு, கவனமே பெறாத எதிர்பார்ப்பே இல்லாத கோல்ஃப் விளையாட்டில் ஒரு பதக்கத்தை வென்று இன்ப அதிர்ச்சி கொடுக்கப்போகிறார் அதிதி அசோக். தற்போது நடைபெற்றுவரும் இறுதியாட்டத்தில் அவர் நான்காம் இடத்தில் இருக்கிறார்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சத்தமே இல்லாமல் சரித்திரத்தை எழுதிக்கொண்டிருக்கிறார் அதிதி அசோக். கோல்ஃப் எப்போதுமே இந்தியர்களுக்கு அந்நியமான விளையாட்டாகவே இருக்கிறது. ஒலிம்பிக்கில் கோல்ஃப் இருக்கிறதென்று தெரியும். ஆனால், அதில் இந்தியர்கள் ஆடுகிறார்களா என்று கூட பலருக்கும் தெரியாது. அந்தளவுக்கான கவனமே கோல்ஃப் விளையாட்டிற்கு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இனியும் அப்படியிருக்கப்போவதில்லை.

1983-க்கு முன்பாக கிரிக்கெட்டுமே கூட பலருக்கும் அந்நியமான விளையாட்டாகவே தெரிந்தது. கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியின் உலகக்கோப்பை வெற்றி இந்தியாவில் கிரிக்கெட்டை மூலை முடுக்கெல்லாம் பிரபலப்பட்டுத்தியது. கோல்ஃபில் அதிதி அசோக்கின் வெற்றியும் அப்படி ஒரு விளைவை ஏற்படுத்தினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அப்படி என்ன செய்துவிட்டார் அதிதி?

ஒலிம்பிக்ஸில் குறிப்பிட்ட விளையாட்டு வீரர்/வீராங்கனைகளை நம்பி நம்பி ஏமாந்திருந்த இந்திய ரசிகர்களுக்கு, கவனமே பெறாத எதிர்பார்ப்பே இல்லாத கோல்ஃப் விளையாட்டில் ஒரு பதக்கத்தை வென்று இன்ப அதிர்ச்சி கொடுக்கப்போகிறார் அதிதி அசோக்.

அதிதி அசோக் பெங்களூருவை சேர்ந்தவர். இவருடைய அப்பா ரியல் எஸ்டேட் துறையில் இயங்கிக்கொண்டிருப்பவர். உயர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் சிறுவயதிலேயே கோல்ஃப் விளையாட்டு இவருக்கு அறிமுகமாகிவிட்டது. வார இறுதி நாள்களில் குடும்பத்தோடு பொழுதுபோக்கிற்காக கோல்ஃப் ஆட ஆரம்பித்தவர் ஒரு கட்டத்தில் தொழில்ரீதியாக தீவிரமாக இதில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.

2011-ல் கர்நாடக ஜூனியர் மற்றும் சவுத் இந்தியன் ஜூனியர் சாம்பியன்ஷிப் டைட்டில்களை வென்றிருந்தார். 2012, 2013, 2014 தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளிலும் தேசிய அளவில் ஜூனியர் சாம்பியன்ஷிப் டைட்டிலை வென்றிருந்தார்.
அதிதி அசோக்
அதிதி அசோக்
Matt York

2016-ல் சீனியர் அளவில் ஹீரோ இந்திய ஓபன், 2017-ல் ஃபாத்திமா பிந்த் முபாரக் ஓப்பன் போன்றவற்றிலும் வென்றிருந்தார். இளையோருக்கான ஆசிய போட்டிகள், இளையோருக்கான ஒலிம்பில், ஆசிய போட்டிகள், ஒலிம்பிக் என இந்தியா சார்பில் அத்தனை பெரிய தொடர்களிலும் பங்கேற்ற ஒரே வீராங்கனை எனும் பெருமையையும் பெற்றார். LPGA, LTE போன்ற தொடர்களிலும் சிறப்பாக பெர்ஃபார்ம் செய்திருந்தார்.

உலகளவிலான தரவரிசை பட்டியலில் முதல் 60 இடங்களில் இருப்பவர்கள் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதிதி 45-வது இடம் பிடித்திருந்ததால் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெற்றுவிட்டார்.

1904-க்கு பிறகு, 2016-லயே ஒலிம்பிக்கில் கோல்ஃப் போட்டிகள் மீண்டும் சேர்க்கப்பட்டது. அந்த 2016 ரியோ ஒலிம்பிக்கிலேயே பெண்கள் பிரிவில் இந்தியா சார்பில் ஒற்றை ஆளாகத் தேர்வாகியிருந்தார் அதிதி. அப்போது அவருக்கு 18 வயதுதான். ஒலிம்பிக்கில் கலந்துகொண்டிருந்த 60 வீராங்கனைகளில் இளம் வீராங்கனை அவரே. அந்த ஒலிம்பிக்கில் 41-வது இடம்பிடித்திருந்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் நான்கு வீரர்/வீராங்னைகள் கோல்ஃப் விளையாட்டில் பங்கேற்றிருந்தனர். இதில் அதிதி மட்டுமே சர்ப்ரைஸாக மிகச்சிறப்பாக பெர்ஃபார்ம் செய்து வருகிறார். ஒலிம்பிக்கில் கோல்ஃப் போட்டிகள் நான்கு நாட்கள் நடைபெறும். ஒரு நாளைக்கு இலக்காக இருக்கும் 18 குழிகளில் வீராங்கனைகள் பந்தை சேர்க்க வேண்டும். நான்கு நாட்களுக்கு மொத்தம் 72 குழிகளில் பந்தை சேர்த்திருக்க வேண்டும். ஒவ்வொரு குழிக்கும் பந்தை கொண்டு சேர்க்க அதன் தூரத்தின் அடிப்படையிலும் இடையில் இருக்கும் தடைகளின் அடிப்படையிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாய்ப்புகள் வழங்கப்படும். சரியாக அந்த எண்ணிக்கையிலான வாய்ப்பில் பந்தை குழிக்குள் சேர்த்துவிட்டால் அது பார் (Par) என அழைக்கப்படும். ஒரு வாய்ப்பு குறைவாக எடுத்துக் கொண்டால் பேர்டி (Birdie), இரண்டு வாய்ப்புகள் குறைவாக எடுத்துக்கொண்டால் ஈகிள் (Eagle) என அழைக்கப்படும். கொடுக்கப்பட்ட வாய்ப்புகளுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் போகே, டபுள் போகே (Bogey) என்பார்கள். குறைவான வாய்ப்புகளில் அதிக பேர்டி, ஈகிள் எடுத்து முடிப்பவர்கள் அதிக புள்ளிகளை பெறுவார்கள். இப்படியாக நான்கு நாட்களின் முடிவில் அதிக புள்ளிகளை எடுத்திருப்பவர்களுக்கு பதக்கம் வழங்கப்படும்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் மூன்று நாள் முடிந்திருக்கும் நிலையில் புள்ளிப்பட்டியலில் அதிதி அசோக் தற்போது நான்காம் இடத்தில் இருக்கிறார்.

18 குழிகளையும் 71 வாய்ப்புகளுக்குள் முடித்திருக்க வேண்டும். அதிதி மூன்று நாட்களிலும் 67, 66, 68 வாய்ப்புகளில் 18 குழிகளிலும் பந்தை சேர்த்திருந்தார். 213 வாய்ப்புகள் கொடுக்கப்பட்டதில் 201 வாய்ப்பிலேயே பந்துகளை குழியில் சேர்த்துவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிதி அசோக்
அதிதி அசோக்
எந்த சறுக்கலும் இல்லாமல் மூன்று நாட்களை போலவும் இன்றும் அதிதி சீராக பெர்ஃபார்ம் செய்யும் பட்சத்தில் பதக்கம் நிச்சயம் கிடைக்கும்.

அதிதி பதக்கத்தோடு இந்தியா வரும்பட்சத்தில் அது இந்தியாவில் கோல்ஃப் விளையாட்டுக்கும் ஒரு வெளி உண்டாக வாய்ப்பாக அமையும். கர்ணம் மல்லேஸ்வரியின் பதக்கம் பல பளுதூக்கும் வீராங்கனைகளை உருவாக்கிவிட்டது. அபினவ் பிந்த்ராவின் தங்கப்பதக்கம் இளைஞர்கள் மத்தியில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியது. இன்றைக்கு குத்துச்சண்டையில் லவ்லினா பதக்கம் வெல்ல முக்கியக்காரணமாக அமைந்தது மேரிகோம்.

இந்தியாவில் ஒரு விளையாட்டு பிரபலமாக வேண்டுமெனில் ஒரு பெரிய வெற்றியும் ஒரு இன்ஸ்பயரிங் முகமும் தேவை. கோல்ஃப் விஷயத்தில் அதிதி அப்பட்டிப்பட்ட இன்ஸ்பயரிங் முகமாக ஒரு பெரு வெற்றியை சாத்தியப்படுத்துவார் என நம்புவோம். ஏற்றத்தாழ்வுகளை கடந்து கோல்ஃப் கனவை அனைவரும் மனதில் விதைக்கலாம் என்ற நம்பிக்கையை அதிதியின் வெற்றி கொடுக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு