Published:Updated:

வயதெல்லாம் ஒரு விஷயமே இல்ல... அபிஷேக் வெர்மா ஒரு பிறவி வீரன்!

2015-ல் தோட்டாக்களைச் சிதறவிட தொடங்கியவர் 2021 ல் உலகளவில் நம்பர் 1 வீரர். இதற்கிடையில் நடந்ததெல்லாம் ஒரு மாயாவியின் மந்திரக்கோல் செய்யும் மேஜிக்குகளுக்கு ஒப்பானது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொதுவாக விளையாட்டு வீரர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒரு குறிப்பிட்ட விளையாட்டின் மீது ஈர்ப்பு உண்டாகி வெறித்தனமாக பயிற்சிகளில் ஈடுபட்டு முட்டிமோதி அந்த விளையாட்டில் நிபுணத்துவம் பெறுபவர்கள் ஒரு வகை. பெரிதாக எந்த மெனக்கெடலும் இல்லாமல் இயற்கையாகவே தங்களுக்குள்ளிருக்கும் திறனின் மூலம் முன்னேறுபவர்கள் இன்னொரு வகை. அபிஷேக் வெர்மா இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்.

'He is bloody 36 years old. இதெல்லாம் புரொஃபஷனல் ஸ்போர்ட்ஸ்ல ரிட்டையர் ஆகுற வயசு' ஜெர்ஸி படத்தில் வரும் இந்த வசனம்தான் விளையாட்டு வீரர்களின் யதார்த்தம். ஒரு வீரருக்கு 30 வயதை தாண்டிவிட்டாலே 'இவர் அவ்வளவுதான்' என முடிவுசெய்து ஓரங்கட்ட தொடங்கிவிட்டார்கள். விளையாட்டில் நீங்கள் சாதிக்க நினைப்பதையெல்லாம் 20-30 வயதிற்குள்ளேயே சாதித்து முடிக்க வேண்டும். அப்படிச் சாதிக்க வேண்டுமெனில் நீங்கள் நடைபழகிய வயதிலிருந்தே பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இது ஓர் எழுதப்படாத விதி. ஆனால், எல்லாவற்றுக்கும் ஒரு விதிவிலக்கு உண்டுதானே! இந்த டெம்ப்ளேட்டுக்கு விதிவிலக்காக அமைந்தது 31 வயதாகும் அபிஷேக் வெர்மாவின் கரியர்.

அவர் நடை பழகிய காலத்திலிருந்து கடின முயற்சி செய்து முட்டி மோதி துப்பாக்கிச் சுடுதலில் ஓர் இடத்தை பிடிக்கவில்லை. மாறாக, தனது 27 வயதுக்கு பிறகு ஒரு பொழுதுபோக்கிற்காக மட்டுமே துப்பாக்கியை கையிலெடுத்தார்.

பஞ்சாபில் பிறந்த அபிஷேக்கின் தந்தை ஒரு நீதிபதி. தந்தையை போலவே இவரும் நீதித்துறையையே தேர்ந்தெடுத்து வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டிருந்தார். வேலைப்பளுக்களின் இடையில் புத்துணர்வு பெற எதாவது ஒரு பொழுதுபோக்கில் ஈடுபட வேண்டும் என எண்ணுகிறார். நீதிபதியின் குடும்பம் என்பதால் சிறுவயதிலிருந்தே துப்பாக்கி ஏந்திய காவலர்களை பார்த்து பார்த்து பழகியிருந்தார். அதனாலோ என்னவோ துப்பாக்கிச் சுடுதலை தனது பொழுதுபோக்காக எடுத்துக் கொண்டார். தினமும் ஒரு 20 நிமிடம் மட்டுமே துப்பாக்கிச் சுடுதலில் ஈடுபட்டு திருப்திப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், ஒரு சமயம் க்ளப்களுக்கு இடையிலான போட்டியில் மற்ற முழு நேர வீரர்கள் சிலரை விட சிறப்பாக்க இலக்கை துளைக்க அவருக்குள் இருக்கும் இயற்கையான திறனை பார்த்து அனைவரும் ஆச்சர்யப்பட்டு போனார்கள்.

பயிற்சியாளர்கள் அவரை நிர்பந்திக்க, அபிஷேக்கும் ஒரு பக்கம் இதிலும் கவனம் செலுத்தாலமே எனத் துப்பாக்கியை நிரந்தரமாக கையிலெடுக்க முடிவு செய்தார். அங்கேதான் எல்லாம் தொடங்கியது.

2015-ல் தோட்டாக்களைச் சிதறவிட தொடங்கியவர் 2021-ல் உலகளவில் நம்பர் 1 வீரர். இதற்கிடையில் நடந்ததெல்லாம் ஒரு மாயாவியின் மந்திரக்கோல் செய்யும் மேஜிக்குகளுக்கு ஒப்பானது.

அபிஷேக் வெர்மா
அபிஷேக் வெர்மா
SAIMedia
2018 ஆசிய போட்டிகள், அபிஷேக் கலந்துக்கொண்ட முதல் பெரிய தொடர். அதிலேயே வெண்கலம் வென்று பிரமிப்பூட்டினார். தொடர்ந்து, உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி, பீஜிங் உலகக்கோப்பையில் இரண்டு தங்கங்கள் என வென்று அசத்தினார். இந்த பீஜிங் உலகக்கோப்பை தங்கமே டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான டிக்கெட்டையும் அவருக்கு பெற்றுக்கொடுத்தது.

'Better late than never' இதுதான் அபிஷேக் வெர்மாவிற்கான வரையறை. அபிஷேக் துப்பாக்கியை கையிலெடுத்த போது 'நீங்கள் ரொம்ப தாமதித்துவிட்டீர்கள். 27 வயதில் பயிற்சியை தொடங்கி ஒன்றும் செய்ய முடியாது' எனப் பலகுரல்களும் சீறிப்பாய காத்திருந்த தோட்டாவை பின்னோக்கி இழுத்தது. இலக்கணங்களை உடைத்தே பழகிய அபிஷேக் அவர்களுக்கெல்லாம் கூறியது ஒன்றே ஒன்றுதான், 'நான் பதக்கம் வெல்வதற்காகவோ உலக சாதனை செய்வதற்காகவோ வரவில்லை. துப்பாக்கிகள் எனக்கு பிடித்தமானவை. எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன். வெற்றி தோல்வியெல்லாம் ஒரு பொருட்டே இல்லை' சொல்லப்போனால், எந்த அழுத்தத்தையும் எடுத்துக் கொள்ளாமல் தனக்கு பிடித்ததை செய்கிறேன் என்கிற அவரின் இந்த மனநிலைதான் பல வெற்றிகளுக்கும் காரணமாக இருந்தது. 30 வயதிற்கு மேல் அதுவும் லேட்டாக கரியரை தொடங்கிய ஒரு விளையாட்டு வீரனால் சாதிக்க முடியாது என கூறியவர்களெல்லாம் இப்போது அபிஷேக்கின் குறி தவறிவிடக்கூடாது என பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்னதான் பதக்கங்களின் மீதெல்லாம் இவருக்கும் ஆர்வம் இல்லையென்றாலும், அபினவ் பிந்த்ராவுக்கு பிறகு இந்தியாவுக்கு தங்கத்தை வென்று கொடுக்கக்கூடிய திறனுடயவர் என அபிஷேக் வெர்மா பார்க்கப்படுகிறார். அவருடைய சமீபத்திய ஃபார்மும் பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

அபிஷேக் வெர்மா
அபிஷேக் வெர்மா
Abhishek's Twitter handle

இந்த ஆண்டு நடைபெற்ற டெல்லி உலகக்கோப்பையில் ஒரு தங்கம் இரண்டு வெண்கலம் உட்பட மூன்று பதக்கங்களை வென்றிருக்கிறார். டோக்கியோவில் நிச்சயம் போடியத்தில் ஏறுவார் அதுவும் தங்கம் வென்று என்கிற ஆவலை இது உண்டாக்கியிருக்கிறது.

அபிஷேக்கின் ஒலிம்பிக் தகுதி சொல்லும் செய்தி ஒன்றுதான், நீங்கள் உண்மையாக ஒரு விஷயத்தை காதலிக்கும்போது வயதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. Three wise monkeys போல இருந்து கொண்டு உள்ளன்போடு உங்கள் இலக்கிற்கு குறி வையுங்கள், அது மிஸ் ஆகாது! அபிஷேக்கை போல...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு