Published:Updated:

மகனுக்கு கேன்சர்... மூன்று நாடுகளுக்கு ஒலிம்பிக்ஸ்... தடைகளைத் தாண்டி சாகசம் செய்த சுஸோவிட்னா!

தன்னுடைய 16 வயதில் உலக சாம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக் போட்டியில் முதன்முதலாக கலந்து கொண்டார் சுஸோவிட்னா. அன்றிலிருந்து கடந்த 30 வருடங்களாக ஜிம்னாஸ்டிக் களத்தில் கோலோச்சுக் கொண்டிருக்கிறார்.

சாதிக்க வயது ஒரு தடையல்ல என்று எளிதாக சொல்லிவிடலாம். ஆனால், விளையாட்டில் அது அவ்வுளவு சுலபம் அல்ல. போட்டியில் வெற்றி பெற வேண்டுமென்றால் வேகமும் துடிப்பும் மிகவும் முக்கியம். அதற்கு நம் சொல்பேச்சை கேட்கும் உடல் தேவை. வயது ஏற ஏற உடல் உங்கள் பேச்சைக் கேட்காது. ஆனால், அதையும் மீறி தங்கள் உயிருக்கு உயிராக நேசித்த விளையாட்டில் பல தடைகளைத் தாண்டி, சாதனைகள் பல குவித்து, வயதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என நிரூபிக்கும் வீரர்களை நாம் என்னவென்று அழைப்பது? சாம்பியன்!

ஜிம்னாஸ்டிக் போட்டியில் லெஜண்டாக கருதப்படும் 46 வயதான ஒக்சனா சுஸோவிட்னா, டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வால்ட் பிரிவில் தோல்வியடைந்ததை அடுத்து தனது ஓய்வை அறிவித்தார். புற்றுநோயில் இருந்து மீண்ட 21 வயது நிரம்பிய இவருடைய மகனும் இப்போட்டியை காண நேரில் வந்திருந்தார்.

ஜிம்னாஸ்டிக்கில் இவ்வுளவு காலம் நீடித்திருப்பதற்கு அசாத்திய திறனும் மன உறுதியும் வேண்டும். பெரும்பாலும் ஜிம்னாஸ்டிக் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் இள வயதினர்களாகவே இருப்பார்கள். ஏனென்றால் இந்த விளையட்டின் தன்மை அப்படி. ரப்பர் போல் உடலை வளைக்க வேண்டும், காற்றில் பம்பரம் போல் சுழல வேண்டும். காலத்துக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டதோடு புதிய உத்திகளையும் திறன்களையும் வளர்த்துக் கொண்டார்.

தன்னுடைய 16 வயதில் உலக சாம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக் போட்டியில் முதன்முதலாக கலந்து கொண்டார் சுஸோவிட்னா. இப்போட்டியில் சோவியத் யூனியன் சார்பாக மாற்று வீரராகவே கலந்து கொண்டாலும் ஊருக்கு திரும்பி வருகையில் அவருடைய கையில் இரண்டு பதக்கம் இருந்தது. அன்றிலிருந்து கடந்த 30 வருடங்களாக ஜிம்னாஸ்டிக் களத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்.

சுஸோவிட்னா
சுஸோவிட்னா
Gymnastics Federation
உஸ்பெகிஸ்தான் நாட்டில் பிறந்த சுஸோவிட்னா, இதுவரை மூன்று நாடுகளுக்காக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

சோவியத் நாடுகள் சிதறுண்டு தனித்தனி நாடாக பிரிந்து போனதால், 1992 பார்சிலோனா ஒலிம்பிக்கில் முன்னாள் சோவியத் நாடுகள் அனைத்தும் சுதந்திர காமன்வெல்த் நாடுகள் என்ற பெயரில் ஒருங்கிணைந்த அணியாக களம் கண்டன. இந்த அணியின் கீழ் விளையாடிய சுஸோவிட்னா, ஜிம்னாஸ்டிக் குழு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.

2002-ல் இவரது மகன் அலிஷர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து, உஸ்பெகிஸ்தானில் சிகிச்சை அளிக்கப் போதுமான வசதி இல்லாத காரணத்தினல் நோய்வாய்ப்பட்ட தன் மகனோடு ஜெர்மனிக்கு இடம்பெயர்ந்தார் சுஸோவிட்னா.

இனி சர்வதேச போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என கூறியிருந்த சுஸோவிட்னா, தன் மகனின் சிகிச்சை செலவிற்கு நிதி திரட்டுவதற்காக மறுபடியும் ஜிம்னாஸ்டிக் களத்தில் கால் பதித்தார்.

2008 பீஜிங் ஒலிம்பிக்கில் ஜெர்மனி சார்பாக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டார். இதில்தான் தனிநபர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அப்போது அவருக்கு வயது என்ன தெரியுமா? 33. இந்த வயதில் ஜிம்னாஸ்டிக்கில், அதுவும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வது சாதாரண விஷயம் இல்லை. வயதானாலும் தன்னுடைய திறமையும் ஜிம்னாஸ்டிக் மீது தான் கொண்ட காதலும் குறையவில்லை என இந்த உலகத்திற்கு நிரூபித்தார். இரண்டு மாதத்திற்கு முன்புதான் அவருடைய மகனும் புற்றுநோயிலிருந்து முழுமையாக குணமாகியிருந்தார். இது அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்தது.

இதுவரை 11 உலக சாம்பியன்ஷிப் பதக்கம், எட்டு ஆசிய பதக்கம், நான்கு ஆசிய சாம்பியன்ஷிப் பதக்கம், நான்கு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்றுள்ளார்

சுஸோவிட்னா
சுஸோவிட்னா
Gymnastics Federation
தற்போது 46 வயதில் உஸ்பெகிஸ்தான் சார்பாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள சுஸோவிட்னாவிற்கு இது எட்டாவது ஒலிம்பிக்.

தன்னுடைய கடைசி ஒலிம்பிக்கில் எப்படியாவது இறுதிப் போட்டிக்காவது தகுதி பெற்றுவிட வேண்டும் என நினைத்திருந்தார். ஆனால், அவரால் 14-வது இடமே பெற முடிந்தது.

சுஸோவிட்னா இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை என்று தெரிந்ததும் சக வீரர்கள் அனைவரும் அவரை சூழ்ந்தபடி, அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர். அரங்கில் இருந்த தன்னார்வலர்கள், பணியாளர்கள், ஊடகத்தினர் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு மாரியாதை செலுத்தினர். ஆனால், இதில் பெரிய சோகம் என்னவென்றால், சுமார் அரை நூற்றாண்டு காலத்திற்கு மேல் ஜிம்னாஸ்டிக்கில் கொடி கட்டிப் பறந்த ஒரு வீரரின் கடைசிப் போட்டியை காண அரங்கத்தில் ஒரு ரசிகர் கூட இல்லாததுதான்.

“உங்களுக்கு 40 வயதோ அல்லது 16 வயதோ, பதக்க மேடையில் நிற்கும்போது அனைவரும் சமமே. அங்கு யாரும் வயதைப் பார்ப்பதில்லை” எனக் கூறும் சுஸோவிட்னாவை, இத்தனை ஆண்டு காலம் தொடர்ந்து இயங்க வைத்தது எது? வேறு என்ன, விளையாட்டின் மீது அவர் கொண்ட காதல்தான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு