Published:Updated:

டோக்கியோ ஒலிம்பிக்கில் 16 பேருக்கு கொரோனா தொற்று... கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020

மூன்று தடகள வீரர்கள், விளையாட்டுக்களுடன் தொடர்புடைய நபர்கள் 8 பேர், ஒலிம்பிக் ஊழியர் ஒருவர் மற்றும் ஒலிம்பிக் ஒப்பந்ததாரர்கள் 4 பேர் என மொத்தம் 16 பேர் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடந்து வரும் நிலையில், தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உயர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இன்று (26.7.2021) 16 நபர்கள் கொரோனா பாதிப்புடன், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த 148 நபர்களில் பெரும்பாலானோர் 15 நாட்களில் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள். இன்று பாதிக்கப்பட்ட 16 நபர்களுள் மூன்று தடகள வீரர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tokyo Olympics 2020
Tokyo Olympics 2020

மூன்று தடகள வீரர்கள், விளையாட்டுகளுடன் தொடர்புடைய நபர்கள் 8 பேர், ஒலிம்பிக் ஊழியர் ஒருவர் மற்றும் ஒலிம்பிக் ஒப்பந்ததாரர்கள் 4 பேர் என மொத்தம் 16 பேர் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். டோக்கியோவிற்கு வந்த பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களில் செக் குடியரசு, அமெரிக்கா, சிலி, தெற்கு ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாட்டைச் சேர்ந்த பங்கேற்பாளர்களும் அடங்குவர்.

இதுவரை செக் குடியரசின் 4 தடகள வீரர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். கடந்த வாரம் பாதிப்புக்குள்ளான இரண்டு தடகள வீரர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக பீச் வாலிபால் மற்றும் ரோட் சைக்கிளிங் ஆகிய போட்டிகளில் பங்கேற்கவில்லை. 4 தடகள வீரர்கள் பாதிப்புக்குப் பின் பாதுகாப்பு நெறிமுறைகளை செக் குடியரசு வீரர்கள் மீறினார்களா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பவர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை
ஒலிம்பிக் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை

ஜப்பான தலைநகர் டோக்கியோவில் கடந்த வியாழக்கிழமை 1,979 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஜனவரி மாதத்திற்குப் பிறகு கடந்த வியாழக்கிழமைதான் அதிகபட்ச தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த மாதம் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் ஜூலை தொடக்கத்தில் இருந்து மீண்டும் டோக்கியோவில் உயரத் தொடங்கியிருக்கிறது.

இதனால் ஜூலை தொடக்கத்திலேயே டோக்கியோவில் எமர்ஜன்ஸி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒலிம்பிக் பயோ பபுளில் ஏற்கெனவே கொரோனா பரவல் ஏற்பட்டிருக்கலாம் எனவும், புதிய பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் எனவும் நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதனால், ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்குக் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகளுக்காக டோக்கியோ வந்திருக்கும் அனைவருக்கும் தினமும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு