
துப்பாகி சுடுதலில் அசத்தியது முதல் கால்பந்து குவாலிஃபையரில் சொதப்பியது வரை இந்திய அணி பற்றிய ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்! #VikatanSportsRoundUp

இந்தியாவில் ஹாக்கி ப்ரோ லீக்
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் `ஹாக்கி ப்ரோ லீக்’ விளையாட்டுத் தொடர் கடந்த ஆண்டு அறிமுகமானது. 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஹாக்கி ப்ரோ லீகின் 2-வது சீசன் வரும் 2020 ஜனவரி 18-ம் தேதி தொடங்குகிறது. அர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஜெர்மனி, பிரிட்டன், நியூசிலாந்து, நெதர்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட அணிகளுடன் இந்திய அணியும் தகுதிபெற்றுள்ளது. இத்தொடரின் சில போட்டிகள் இந்தியாவில் உள்ள புவனேஷ்வரில் நடைபெற இருப்பதாக சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சமீபத்தில், ஒலிம்பிக் தொடருக்கான ஹாக்கி தகுதிச்சுற்று போட்டிகள் புவனேஷ்வரில் நடைபெற்றன. இந்தியாவில் ஹாக்கி விளையாட்டின் `ஹப்’ ஆக மாறி வரும் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஹாக்கி அரங்கில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
பிரேசிலியன் ஜிபி தொடரில் விபத்து
விறுவிறுப்பான பிரேசிலியன் ஃபார்முலா 1 தொடரின் இறுதிக்கட்டத்தில் 4-வது இடத்துக்குக் கடுமையான போட்டி நிலவியது. அதில் பங்கேற்ற ஃபெர்ராரி வீரர்களான செபெஸ்டின் வெட்டல், சார்லஸ் லெக்லெரக்கின் கார்கள் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, இருவரும் போட்டியிலிருந்து விலக்கப்பட்டனர்.
இறுதியில் 33 நிமிடங்கள், 14 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்த ரெட் புல் வீரரான மேக்ஸ் வெர்ஸ்டப்பன் சாம்பியன் பட்டத்தை வென்றார். அவரைத் தொடர்ந்து பிரான்ஸ் வீரரான பியர் கேஸ்ஸி 2-வது இடத்தையும், ஸ்பெயின் வீரரான கார்லஸ் செயின்ஸ் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

2020 ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகும் டோக்கியோ!
2020 ஒலிம்பிக் தொடர் ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் நடைபெறவிருக்கிறது. இதற்கான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஒலிம்பிக் தொடக்க நிகழ்வு 2020 ஜூலை மாதம் 24-ம் தேதி நடைபெறும் நிலையில், டோக்கியோ தேசிய மைதானம் போட்டிகளுக்குத் தயாராக உள்ளதாக ஜப்பான் விளையாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
1.25 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மைதானத்தில் 60,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் பிரமாண்டமாகத் தயார் செய்யப்பட்டுள்ளது. 2016 செப்டம்பர் 16-ம் தேதி தொடங்கப்பட்ட கட்டடப் பணிகள் இப்போது நிறைவடைந்துள்ளதாகவும் ஜப்பான் விளையாட்டுத் துறை அறிவித்துள்ளது.

இந்திய அணி அறிவிப்பு!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, ஒரு நாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாட உள்ளது. மூன்று டி-20 போட்டிகளும், மூன்று ஒரு நாள் போட்டிகளும் நடைபெறவிருக்கும் நிலையில், இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது. வெளியிடப்பட்ட அந்தப் பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை.
ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணி
விராட் கோலி(கேப்டன்), ரோகித் ஷர்மா (துணைக் கேப்டன்), ஷிகர் தவான், கே.எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, கேதர் ஜாதவ், ரவிந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார்
டி-20 போட்டிகளுக்கான இந்திய அணி
விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணைக் கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவிந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார்

இந்தியன் ஷூட்டிங் ஸ்டார்ஸ்!
சீனாவில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடரில் ஐந்து தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் உட்பட மொத்தம் எட்டுப் பதக்கங்களுடன் இந்திய அணி முதல் இடம் பிடித்துள்ளது.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவுக்குத் தங்கம் வாங்கிக்கொடுத்துள்ளார் 16 வயதேயான மனு பக்கர். போட்டியின் முடிவில், மொத்தம் 244.7 புள்ளிகள் பெற்ற மனு, ஜூனியர்ஸுக்கான துப்பாக்கிச் சுடுதலில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச அரங்கில் மீண்டும் ஒரு முறை இளவேனில் வாலறிவனின் பெயர் உரக்க ஒலித்துள்ளது. 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் முதல் இடம் பிடித்த இளவேனில், ஒரே ஆண்டில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். துப்பாக்கிச் சுடுதல் உலக தரவரிசையில் மூன்றாவது இடத்துக்கும் முன்னேறியுள்ளார்!

இந்திய அணியின் ஃபிஃபா உலகக் கோப்பை கனவு!
2022 ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் 2-வது கட்டத்தில் எட்டுப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து அணிகள் போட்டியிடுகின்றன. இந்தத் தகுதிச்சுற்றுப் போட்டியின் முடிவில் 12 அணிகள் 3-வது தகுதிச்சுற்றுப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
`இ' பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி, விளையாடிய 4 போட்டிகளில், 3 போட்டிகளில் டிரா மற்றும் ஒரு போட்டியில் தோல்வியைச் சந்தித்துள்ளது. வெற்றிபெற வேண்டுமென்ற கட்டாயத்தில் ஓமன் அணியுடன் மோதிய இந்திய அணி, முடிவில் தோல்வியடைந்தது. இதனால், 2022 ஃபிஃபா உலகக்கோபையின் அடுத்தகட்ட தகுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை, இந்திய அணி ஏறக்குறைய இழந்துவிட்டது.