தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமண் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி. இவர், புதியம்புத்தூரிலுள்ள ஜான் தி பப்தீஸ் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதுபோல, ஸ்ரீமதி தனது 13 வயதில் இருந்தே சைக்கிள் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். தன்னிடம் சொந்தமாக சைக்கிள் இல்லாததால் பள்ளியில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் கலந்துகொள்வதற்காகத் தன் உறவினரிடம் சைக்கிளை இரவலாக வாங்கிப் போட்டியில் கலந்துகொண்டு தனது முதல் போட்டியிலேயே முதல் பரிசை வென்றார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தொடர்ந்து மாவட்ட, மண்டல அளவிலான பல்வேறு சைக்கிள் போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்களையும், கோப்பைகளையும் வென்றுள்ளார். 2019-ம் ஆண்டு ஜனவரியில் மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் கலந்துகொள்ளத் தேர்வு செய்யப்பட்டார். வளரும் பயிருக்கு களைகள் இடையூறென முளைப்பதாய், தன்னை சூழ்ந்த வறுமையினால், மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்ளத் தேவையான சைக்கிள் வாங்கப் பணம் இல்லை அவரிடம். எனவே, அவரால் அந்தப் போட்டியில் கலந்துகொள்ள இயலவில்லை.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSசைக்கிள் போட்டிக்கு ஏற்ற சைக்கிளை வாங்குவதற்காக உதவி கேட்டு, பல தரப்பினரின் படிகளை ஏறி, இறங்கிய ஶ்ரீமதிக்கு ஏமாற்றமும் நிராகரிப்பும் மட்டுமே மிஞ்சியது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழியிடம் உதவி கேட்க, ரூ. 5 லட்சம் மதிப்பிலான ரேஸ் சைக்கிளை வாங்கிக் கொடுத்து ஊக்கப்படுத்தினார் கனிமொழி. அந்த சைக்கிளிலேயே பயிற்சி செய்து மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் வென்றுகாட்டிய ஸ்ரீமதி, தேசிய அளவிலான போட்டிக்காக டெல்லியில் உள்ள அகாடமியில் கடுமையான பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ராஜஸ்தானில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான சைக்கிள் போட்டியில் கலந்துகொண்ட ஸ்ரீமதி, மூன்று பேர் கொண்ட குழுப் போட்டியில் தங்கப் பதக்கமும், தனித்திறன் போட்டியில் வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் ஆசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ளவும் இந்திய விளையாட்டு ஆணையத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கீழமுடிமண் கிராமத்துக்குச் சென்று மாணவி ஸ்ரீமதியைச் சந்தித்தோம். ``எங்க அப்பா ஜேசுதாஸ் புதியம்புத்தூர்ல ஒரு தையல் கடையில டெய்லரா வேலை பார்த்தாங்க. கொரோனாவுக்குப் பிறகு தையல் வேலை பெருசா இல்லாமப் போக விவசாய வேலை, டிராக்டர் ஓட்டுறதுனு கிடைச்ச வேலையை செஞ்சுட்டு இருக்காங்க. அம்மா, தாயம்மாள் வீட்லதான் இருக்காங்க. எனக்கு நிறைமதின்னு ஒரு தங்கச்சி இருக்கு; என்னோட ஸ்கூலுல ஒன்பதாம் வகுப்புப் படிக்குது.
எனக்கு சின்ன வயசுல இருந்தே சைக்கிள் ஓட்டுறதுனா ரொம்பப் பிடிக்கும். ஆனா, எங்க வீட்ல சைக்கிள் கிடையாது.

என்னோட சொந்தக்காரங்க வீடுகள்ல உள்ள சைக்கிளை இரவல் வாங்கித்தான் ஓட்டிக் கத்துக்கிட்டேன். கிராமத்துல என்னை மாதிரி பொம்பளைப் பிள்ளைக சேர்ந்து, யாரு சைக்கிள் வேகமா ஓட்டிட்டு வந்து புளியமரத்துகிட்ட போறாங்கன்னு எங்களுக்குள்ள ஒரு போட்டி மாதிரி வச்சோம். அதுவே எங்களுக்கான முக்கியமான பந்தயப் பயிற்சியா மாறிடுச்சு.
போட்டியில கலந்துக்கிடுற எல்லார்கிட்டயும் சைக்கிள் இருக்கும். எங்கிட்ட இருக்காது. சைக்கிள் போட்டியில நான் தொடர்ந்து ஜெயிக்கிறேன்னு எனக்கு சைக்கிள் இரவல் தரமாட்டேனுட்டாங்க. சைக்கிள்ல காத்து இல்லம்மா, செயின் லூசா கிடக்கு, முன் வீல் பஞ்சராகிடுச்சு பாப்பானு ஏதாவது காரணம் சொன்னாங்க. இதுக்காகவே பக்கத்து கிராமத்துக்குப் போயி வாடகைக்கு சைக்கிள் வாங்கிட்டு ஊருக்குள்ள சிட்டாப் பறந்து வருவேன்.

ஸ்கூல்ல நடந்த சைக்கிள் போட்டியில விளையாட்டுப் போக்குல கலந்துகிட்டேன். அதுல முதல் பரிசு கிடைச்சது. அதுக்கப்புறம் ஒவ்வொரு சைக்கிள் போட்டியிலயும் ரொம்ப சீரியஸா கலந்துகிட்டு விளையாட ஆரம்பிச்சேன். 2020-ம் வருஷம் எங்க கிராமத்துல உள்ள சமுதாய நலக்கூடத்துல தி.மு.க-வோட கிராமசபைக் கூட்டம் நடந்துச்சு. கனிமொழியக்கா அந்தக் கூட்டத்துல கலந்துகிட்டுப் பேசுனாங்க. கிராமத்துல உள்ள குறைகளைக் கேட்டுக் குறிச்சு வச்சுக்கிட்டாங்க. அப்போ நிறைய பேரு அவங்கவங்க கோரிக்கையை மனுவா கொடுத்தாங்க.
நானும் என்னோட லாங் சைஸ் நோட்டுல ஒரு பேப்பரைக் கிழிச்சு, `அக்கா... நான் சைக்கிள் போட்டிகள்ல கலந்துகிட்டு மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகள்ல பரிசு வாங்கியிருக்கேன். ஸ்டேட் லெவல், நேஷனல் லெவல் போட்டிகள்ல கலந்துகிட்டு ஜெயிச்சு பரிசு வாங்கணும்னு ரொம்ப ஆசை. எங்கிட்ட சைக்கிள் கிடையாது. அதுக்காக எனக்கு நியூ மாடல் ரேஸ் சைக்கிள் தேவைப்படுது. எனக்கு அந்த சைக்கிள் வாங்கித் தாங்க அக்கா'னு எழுதி லெட்டரைக் கொடுத்தேன்.

பத்து நாள்ல எனக்கு 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள ரேஸ் சைக்கிளை வாங்கிக் கொடுத்துட்டாங்க கனிமொழி அக்கா. ராஜஸ்தான்ல நடந்த நேஷனல் லெவல் போட்டியில வெற்றி பெற்று கோல்டு, சில்வர் மெடல் வாங்குனதையும், ஆசியா லெவல் போட்டிக்கு செலக்ட் ஆனதையும் கனிமொழி அக்காவைச் சந்திச்சு சொன்னேன். என் தோளைத் தட்டி வாழ்த்தினவங்க, டிரெய்னிங்குக்கு தேவையான டி-சர்ட், டிரெஸ், ரன்னிங் ஷூ, டிராவல் பேக்கையும் வாங்கிக் கொடுத்தாங்க. டெல்லிக்கு வர்றப்போ உன்னைப் பார்க்கிறேன்னு சொன்னாங்க.
சாலைகளில் நடைபெறும் பந்தயத்துக்குப் பயன்படுத்தும் சைக்கிளுக்கும், மைதானத்தில் நடைபெறும் பந்தயங்களில் பயன்படுத்தும் சைக்கிளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. சாலையில் நடைபெறும் பந்தயங்கள்ல ஓட்டக்கூடிய மிதிவண்டியைக் கனிமொழி அக்கா, எனக்கு பரிசாக வழங்கி ஊக்கப்படுத்தினாங்க. ஆசிய அளவில் நடைபெறும் சைக்கிள் போட்டியில கலந்துகொள்ள மைதானத்தில் ஓட்டக்கூடிய சைக்கிள்தான் அனுமதிக்கப்படும்.

ஆனா, அதை வாங்கும் அளவுக்கு எங்ககிட்ட வசதி இல்ல. சர்வதேச போட்டிகள்ல கலந்துக்க ஏதுவான மிதிவண்டியைத் தமிழக அரசு நிதியுதவி அளித்து வாங்கித் தர முன்வந்தா, என்னால இன்னும் பல போட்டிகள்ல கலந்துக்க முடியும். இந்தியாவுக்காக சர்வதேசப் போட்டிகள்ல கலந்துக்கிட்டு தங்கப்பதக்கங்களை வாங்கி தமிழ்நாட்டுக்கும், என் சொந்த ஊருக்கும் பெருமை சேர்ப்பதே என் லட்சியம்” என்றார்.
சக்கரங்கள் சிறகுகள் ஆகட்டும்!