Published:Updated:

Nikhat Zareen: அப்பா கொடுத்த பயிற்சி; அசராத துணிச்சல்; காமன்வெல்த் தங்கம்; குத்துச்சண்டை வீரரின் கதை

Nikhat Zareen

இந்தியாவின் முகமாக உலக அளவில் குத்துச் சண்டைப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைக் குவித்து வரும் குத்துச் சண்டை வீரர் நிகத் ஜரீனின் சுவாரஸ்யமான வெற்றிப் பயணம்.

Nikhat Zareen: அப்பா கொடுத்த பயிற்சி; அசராத துணிச்சல்; காமன்வெல்த் தங்கம்; குத்துச்சண்டை வீரரின் கதை

இந்தியாவின் முகமாக உலக அளவில் குத்துச் சண்டைப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைக் குவித்து வரும் குத்துச் சண்டை வீரர் நிகத் ஜரீனின் சுவாரஸ்யமான வெற்றிப் பயணம்.

Published:Updated:
Nikhat Zareen
மேரி கோம், சரிதா தேவி, ஜென்னி மற்றும் லேகா ஆகிய இந்திய குத்துச்சண்டை ஸ்டார்களின் வரிசையில் புது வரவு நிகித் ஜரீன்.

25 வயதான நிகத் ஜரீன், தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியை சேர்ந்தவர். சிறுவயதில் ஓட்டப்பந்தயப் போட்டிகளில் ஆர்வம் கொண்ட ஜரீனுக்கு, அவரின் தந்தை ஜமீல் அகமது பக்கபலமாக இருந்து பயிற்சி அளித்துள்ளார். தந்தையும் விளையாட்டுப் போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதால் மகள் ஜரீனின் ஆசைகளை புரிந்து கொண்டு அவருடன் பயணிகத் தொடங்கினர். அம்மாவுக்கு இதில் பெரிதாக உடனப்பாடு இல்லை, ஜரீனின் திருமண வாழ்க்கைப் பற்றி மட்டும் ஒரு சிறிய கவலை இருந்தது. இருப்பினும் தன் மகளின் கனவுகளுக்கு அவர் தடையாக இருக்க விரும்பவில்லை.

நிகத் ஜரீன் பெற்றோருடன்
நிகத் ஜரீன் பெற்றோருடன்

ஒட்டப்பந்தயத்தில் ஆர்வம் கொண்ட ஜரீன், ஒரு நாள் மைதானத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தபோது அவரது மனதில் சில சந்தேகங்கள் எழத் தொடங்கியுள்ளது. அதுதான் அவர் எதிர்காலத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக மாறுவதற்குக் காரணமாக அமைந்தது. இது பற்றி நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், "நான் என் அப்பாவிடம் ஒருமுறை, ஏன் பெண்கள் பெரும்பாலும் குத்துச் சண்டைப் போட்டிகளில் கலந்துகொள்வதில்லை. இது ஆண்களுக்கு மட்டுமானதா என்று கேட்டேன். அதற்கு என் அப்பா, 'அப்படி இல்லை. பெரும்பாலான மக்கள், பெண்கள் வீட்டிலேயே இருக்கு வேண்டும் என்று விரும்புகிறார்கள்' என்று பதிலளித்தார். அப்போது என் மனதில் ஓடியது இதுதான் 'ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் வலிமை மிக்கவர்தான்'. நான் என்னை எப்போதும் குறைத்து மதிப்பிட்டதில்லை" என்று கூறியிருந்தார்.

இப்பயணத்தில் ஜரீன் பல்வேறு எதிர்ப்புகளையும் தடைகளையும் சந்திக்க வேண்டியிருந்தது. ஆண்கள் இருப்பார்கள் என்று அசௌகரியமாக உணராமல் தொடர்ந்து உடற்பயிற்சி கூடத்திற்குச் செல்வது, தந்தையின் உதவியுடன் குத்துச் சண்டைப் பயிற்சிகளை மேற்கொள்வது எனத் தீவிரமாக பயிற்சி எடுத்து வந்தார் ஜரீன். இப்படி தந்தையுடனான நீண்ட நாள் பயிற்சிக்குப் பிறகு 2009-ம் ஆண்டு சிறந்த ஆசிரியருக்கான துரோணாச்சாரியார் விருது பெற்ற 'IV ராவ்' என்பவரிடம் பயிற்சி பெற்று இந்திய விளையாட்டு ஆணையத்தில் பயிற்சிக்கு இணைந்து பயிற்சியைத் தொடர்ந்துள்ளார். தெலங்கானாவில் குத்துச்சண்டை பயிற்சி கொடுத்த ஷம்சம்சுதீன் என்பவர் இவரது சாதனைகளுக்கு முக்கிய அடித்தளமாக இருந்தப் பயிற்யாளர்களில் ஒருவர் என்று கூறப்படுகிறது.

நிகத் ஜரீன்
நிகத் ஜரீன்

இப்படி தன் லட்சியத்தை நோக்கிப் பயணித்த ஜரீனின் இடைவிடாத முயற்சிகளின் விளைவாக சப்-ஜூனியர் தேசிய பட்டம், 15 வயதில் 2011-ல் துருக்கியில் ஜூனியர் மற்றும் இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் ஃப்ளைவெயிட் பிரிவில் தங்கம், 2014 இல் யூத் வேர்ல்ட் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி என வெற்றிகள் குவியத்தொடங்கின. அதன்பின் மேரி கோம் போன்ற தன் சீனியர் குத்துச் சண்டை வீரர்களுக்கே டஃப் கொடுக்க ஆரம்பித்துவிட்டார் ஜரீன். இதையடுத்து 2019-ல் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற ஜரீன், ஸ்ட்ராண்ட்ஜா நினைவு குத்துச்சண்டை போட்டியில் தங்கத்தைத் தட்டித் தூக்கினார். இதையடுத்து கடந்த மே மாதம் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 52 கிலோ ஃப்ளைவெயிட் பிரிவில் தங்கம் வென்றிருந்தார்.

தற்போது, உலகப்புகழ் பெற்ற காமன்வெல்த் போட்டியில் 50 கிலோ ஃப்ளைவெயிட் பிரிவு இறுதிப் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். இது அவர் வெல்லும் முதல் காமன்வெல்த் பதக்கம். இந்நிலையில் இந்தியாவின் முகமாக உலக அளவில் பதக்கங்களை வென்று புகழ்பெற்றுள்ள நிகத் ஜரீனின் வெற்றியை இந்தியா முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.