Published:Updated:

`இந்த நடுவர்கள் நாசமாக்குகின்றனர்!'- கோபத்தை வெளிப்படுத்திய மெஸ்ஸிக்குத் தடை

ரஞ்சித் ரூஸோ

லியோனல் மெஸ்ஸிக்கு சர்வதேசப் போட்டிகளில் விளையாட மூன்று மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோபா அமெரிக்கா
கோபா அமெரிக்கா

உலகின் தலைசிறந்த கால்பந்து ஆட்டக்காரர்களில் ஒருவரான மெஸ்ஸி, `தென் அமெரிக்க கால்பந்து சம்மேளனத்தில் (CONMEBOL) ஊழல் நடைபெறுகிறது' என்று பேசியதால் தற்போது அவருக்கு 50,000 டாலர் தொகையை அபராதமாக விதித்ததுடன், 3 மாதங்கள் தேசியப் போட்டிகளில் பங்கெடுக்கத் தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது.

சிலிக்கு எதிரான போட்டியில் மெஸ்ஸி வாங்கிய சிவப்பு அட்டை
சிலிக்கு எதிரான போட்டியில் மெஸ்ஸி வாங்கிய சிவப்பு அட்டை
AP

கடந்த மாதம் நடைபெற்ற கோபா அமெரிக்க போட்டியில் அர்ஜென்டினா அணியில் மெஸ்ஸி விளையாடியபோது, பிரேசிலுக்கு எதிராக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் 2 பெனால்ட்டிகள் மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரத்தில், ``கோபா அமெரிக்காவை பிரேசிலுக்கே எழுதிவைத்துவிட்டார்கள் என்றும் ரெஃபிரிகள் காசு வாங்கிவிட்டனர்" என்றும் பேசினார்.

உலகின் பழைமையான கோப்பையை 12 ஆண்டுகளுக்குப் பிறகு வென்ற பிரேசில்!

இதைத்தொடர்ந்து சிலி அணியுடன் நடைபெற்ற மூன்றாம் இடத்துக்கான போட்டியில் கேரி மெடல் என்பவரும் மோதியதால் மெஸ்ஸிக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். மெஸ்ஸியின் கேரியரில் அவர் வாங்கும் இரண்டாவது சிவப்பு அட்டை இது. இந்தப் போட்டி முடிந்த பிறகு, ``இந்த ஊழலில் ஒரு பகுதியாக நாங்கள் இருக்கவேண்டியதில்லை. இந்த டோர்னமென்ட்டில் எங்களுக்கு மரியாதை என்பதே கிடைக்கவில்லை'' என்று பேசினார்.

வருத்தப்பட வேண்டிய விஷயம் இந்த ஊழல். மக்கள் கால்பந்தை ரசிப்பதை இந்த ரெஃபிரிகள் ஏற்றுக்கொள்வதில்லை. நாசமாக்குகிறார்கள்.
மெஸ்ஸி

அவருடைய இந்தப் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியது. தற்போது மெஸ்ஸிக்குக் கிடைத்துள்ள தடையால் அவர் உலகக்கோப்பை குவாலிஃபயர் சுற்றில் விளையாடுவதில் பாதிப்பில்லை. ஆனால், செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நடைபெறும் சிலி, மெக்ஸிகோ, ஜெர்மனி உடனான நட்புரீதியான போட்டிகளில் இவரால் பங்கெடுக்க முடியாது.