சர்வதேச அளவில் குங்ஃபூ (Kung fu) போட்டிகளில் தங்கப் பதக்கங்களைக் குவித்த வீராங்கனை, தற்போது அன்றாட வாழ்க்கைப் போராட்டத்துக்கு மீன் விற்று வருகிறார்.
மணிப்பூரை சேர்ந்த 36 வயது குங்ஃபூ வீராங்கனை அங்கோம் பினா தேவி, 2018-ம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய வுஷு சாம்பியன்ஷிப்பில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றவர். 2009-ம் ஆண்டு, இவரின் கணவர் நாள்பட்ட நோய் காரணமாக இறந்துவிட்டார். கணவனின் மறைவுக்குப் பிறகு தன் மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, அம்மா வீட்டுக்குச் சென்றுள்ளார். இவரின் பெற்றோரும் ஏழைகள் என்பதால், குடும்பத்தை நடத்த மீன்களை விற்க ஆரம்பித்ததுடன், குங் ஃபூக்கான பயிற்சியையும் மேற்கொண்டு பல பதக்கங்களைக் குவித்தார்.

தேசிய அளவில் 7 தங்கப் பதக்கங்களையும், மாநில அளவில் 5 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
நாட்டுக்காக விளையாடிய இவருக்கு அரசு எதுவும் உதவி செய்யவில்லை. இந்த விளையாட்டுகளில் பங்குபெற 20 முதல் 30 ஆயிரம்வரை தனது சொந்தப்பணத்தைச் செலவு செய்துள்ளார்.
இவரின் மூத்த மகள் இளங்கலை படிப்பு படிக்கிறார். இரண்டாவது மகள் கணவனைப் பிரிந்து தாயுடன் வாழ்கிறார். மூன்றாவது மகன் ஏழாம் வகுப்புப் படிக்கிறார். தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கவும் அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என அங்கோம் பினா தேவி கோரிக்கை விடுத்துள்ளார்.