சினிமா
Published:Updated:

“தங்கப்பதக்கங்களை எதிர்பார்க்கிறோம்!”

கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகம்
பிரீமியம் ஸ்டோரி
News
கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகம்

மனநலம் குன்றியவர்களுக்கான ‘சிறப்பு ஒலிம்பிக்’கில் தன்னார்வலராகப் பங்கெடுத்திருந்தபோதுதான், அவர்களின் திறன்களை நேரடியாகக் கண்டுகொண்டேன்

கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகம். சூரிய ஒளி புள்ளிகளாய்த் தரையில் விழும் அடர்ந்த மரங்கள் சூழ்ந்த வளாகம். திருத்தியமைக்கப்பட்ட பெரிய மைதானத்தில் காப்பகவாசிகளின் ஆரவாரச் சிரிப்பொலிகள். அவர்களில் ஒருவர் ஓட்டத்துக்கும், மற்றவர்கள் குண்டு எறிதலுக்கும் ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர். பயிற்சியாளர் அறிவுறுத்த, கையில் குண்டுடன் வட்டத்துக்குள் வந்துநிற்கிறார் காப்பகவாசியான பெண்மணி ஒருவர். கட்டற்ற உற்சாகம் கைத்தட்டல்களாகப் பின்னணியில் ஒலிக்க, முன்னேறிவந்து அவர் ஓங்கி எறிந்த இரும்புக்குண்டு தூரச் சென்று விழுகிறது. பயிற்சியாளரின் பாராட்டலும், சக காப்பகவாசிகளின் கைத்தட்டலும் ஆரவாரமும் அவர் முகத்தைப் பூரிப்பால் நிறைக்கின்றன.

மார்ச் முதல் வாரம் சென்னையில் நடக்கவிருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் சிறப்புப் பிரிவில் முதல்முறையாக இந்தக் காப்பகவாசிகள் பங்கெடுக்கின்றனர் என்பதால்தான் இந்தப் பயிற்சி ஏற்பாடுகள்.

“ஒப்பந்தப் பணியாளராக இங்கு பணியில் சேர்ந்து பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஜோதி மணிகண்டன், காப்பகவாசிகளுக்கான விளையாட்டுப் பயிற்சி குறித்த யோசனையை முன்வைத்தபோது, நான் உட்பட எல்லோருமே ‘இது எப்படிச் சாத்தியம்’ என்றே யோசித்தோம்” என இந்த முன்னெடுப்பின் தொடக்கம் குறித்துப் பேசத் தொடங்குகிறார் மனநலக் காப்பகத்தின் இயக்குநர் மருத்துவர் பூர்ண சந்திரிகா.

“தங்கப்பதக்கங்களை எதிர்பார்க்கிறோம்!”
“தங்கப்பதக்கங்களை எதிர்பார்க்கிறோம்!”

தொடர்ந்து பேசிய அவர், “ஆனால், மணிகண்டன் இதுகுறித்துத் தொடர்ந்து விரிவாக விளக்கிவர, துறைசார் வல்லுநர்களும் எங்களுக்கு ஊக்கமளித்தனர். காப்பகவாசிகளுக்கு விளையாட்டுப் பயிற்சியைத் தொடங்குவது என்று முடிவானதும் பல்வேறு இடங்களிலிருந்து எங்களுக்கு உதவிகள் வந்தன. புதர் மண்டிக் கிடந்த மைதானம் புனரமைக்கப்பட்டது; காப்பகவாசிகளுக்கு உடனடியாகப் பயிற்சியைத் தொடங்கினார் மணிகண்டன்” என்கிறார்.

பாராலிம்பிக் போட்டிகள் உடல் மாற்றுத்திறனாளிகளுக்கானவை. ஆனால், தற்போது நடக்கவிருக்கும் போட்டியில், ‘டி20’ என்ற சிறப்புப் பிரிவில் மனநலம் குன்றியவர்களும் பங்கெடுக்க முடியும் என்பதால், காப்பகவாசிகளை உற்சாகமாகத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறார், பயிற்சியாளர் ஜோதி மணிகண்டன்.

“மனநலம் குன்றியவர்களுக்கான ‘சிறப்பு ஒலிம்பிக்’கில் தன்னார்வலராகப் பங்கெடுத்திருந்தபோதுதான், அவர்களின் திறன்களை நேரடியாகக் கண்டுகொண்டேன். காப்பகவாசிகளில் சிலருக்கு சராசரி மனிதர்களைவிட உடலளவில் அதிக வலு இருப்பதைக் கண்டு நான் ஆச்சரியம் அடைந்தேன். ஆரம்பக்கட்டப் பயிற்சிகளைத் தாண்டி அவர்களில் இப்போது 13 பேர் மாநிலப் போட்டிகளில் பங்குபெறுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். 400, 1500 மீட்டர் ஓட்டங்கள், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் இந்த 13 பேரும் பயிற்சி எடுத்துவருகின்றனர். நான்கைந்து தங்கப்பதக்கங்களை எதிர்பார்க்கிறோம்” உற்சாகம் பொங்கப் பேசுகிறார் மணிகண்டன்.

“தங்கப்பதக்கங்களை எதிர்பார்க்கிறோம்!”
“தங்கப்பதக்கங்களை எதிர்பார்க்கிறோம்!”

“உடல்நலம், மனநலம் இரண்டும் சீரான அளவில் இயங்க வேண்டியது நம் ஆரோக்கியத்துக்கு அவசியம். மனநலம் சார்ந்து மேம்பட்ட சிகிச்சையோடு உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டுவரும் காப்பகவாசிகளுக்கு முறையான இந்த விளையாட்டுப் பயிற்சிகள் மேலும் உற்சாகத்தைக் கொண்டுவந்திருக்கின்றன” என்கிறார், காப்பகத்தின் கூடுதல் உறைவிட மருத்துவ அதிகாரி சங்கீதா.

அன்றைய பயிற்சி முடிவுக்கு வர, ‘விளையாட்டு வீரர்கள்’ இளைப்பாறலில் ஈடுபட்டிருந்தனர். இரும்புக்குண்டு எடையற்றுக் கிடந்தது கீழே!