Published:Updated:

லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று கோலாகல தொடக்கம்!

லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று கோலாகல தொடக்கம்!
லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று கோலாகல தொடக்கம்!

லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று கோலாகலமாக தொடங்குகிறது.204 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்

உலகின் மிகப்பெரிய விளையாட்டான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.இதன்படி 30-வது ஒலிம்பிக் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இன்று  முதல் அடுத்த மாதம் 12- ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஒலிம்பிக் தொடக்க விழா உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்கு (இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு) தொடங்கி மூன்றரை மணி நேரம் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பு ஸ்லம்டாக் மில்லினர் படத்தை இயக்கியவரான ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் இயக்குனர் டேனியல் பாய்லேவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அவர் ரூ.235 கோடி செலவில் இதற்கான ஏற்பாடுகளை மிக பிரமாண்டமாக செய்துள்ளார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று கோலாகல தொடக்கம்!

ஆனால், தொடக்க விழாவில் என்னென்ன பிரமிப்புகள், அதிசயங்கள் உள்ளன என்பதை போட்டி குழுவினர் ரகசியம் காத்து வருகிறார்கள். தொடக்க விழா ஒத்திகையின் போது கூட, சுவாரஸ்யம் குறையாமல் இருக்க நிகழ்ச்சிகளின் ரகசியத்தை வெளியிட வேண்டாம் என்று டேனியல் பாய்லே கேட்டுக் கொண்டார். இதே போல் தொடக்க விழாவில் அமைக்கப்பட்டுள்ள மெகா கொப்பரையில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றும் வீரர் யார் என்பதிலும் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. இங்கிலாந்து கால்பந்து முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காமுக்கு இந்த கவுரவம் வழங்கப்படலாம் என்று வதந்தி பரவினாலும, அதுவும் இன்று தான் உறுதியாக தெரியவரும்.

தமிழக இசையமைப்பாளர்கள்


தொடக்க விழா ஒத்திகை நிகழ்ச்சிகளில் செயற்கை மழை, கிரிக்கெட் போன்ற செட், 70 செம்மறி ஆடுகள், 12 குதிரைகள், 10 கோழிகள், 3 மாடுகள், 2 ஆடுகள், நாய், வாத்து ஆகியவற்றை பயன்படுத்தி வித்தியாசமான சாகசங்கள், 10 ஆயிரம் கலைஞர்களின் விதவிதமான நடனங்கள் என்று நம்மை ஆச்சரியப்படுத்த காத்திருக்கிறார்கள்.

இங்கிலாந்து நாட்டின் பெருமை, கலாசாரம், பாரம்பரியம் உள்ளிட்டவற்றை விளக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரின் இசையும், தொடக்க விழா பாடல்களில் இடம் பெறுவது நமக்கு பெருமை அளிக்கும் விஷயமாகும்.

அணி வகுப்பு

போட்டியில் 204 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். தொடக்க விழாவில் ஒவ்வொரு நாட்டு அணியும் தங்கள் நாட்டு தேசிய கொடியுடன் அணிவகுத்து செல்வது வழக்கம். ஒலிம்பிக்கின் தாயகமான கிரீஸ் முதல் அணியாகவும், போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி கடைசி அணியாகவும் வரிசையில் அணிவகுத்து செல்லும்.

இந்திய அணி, மல்யுத்த வீரர் சுஷில்குமார் தலைமையில் பங்கேற்கிறது. அவர் நமது நாட்டு தேசிய கொடியை ஏந்தி செல்வார். இதே போல் தெற்கு சூடான் போன்ற சிறிய குழுவினரை கொண்ட அணிகள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஒலிம்பிக் வளையத்தின் கொடியை ஏந்தி செல்ல உள்ளனர். அணிகளின் அணி வகுப்புக்கு மட்டும் 1 மணி 29 நிமிடங்கள் ஆகும்.

இது தவிர அரங்கை ஜொலிக்க வைக்கும் லேசர் ஒளி வெள்ளம், கண்ணை கவரும் மெகா வாணவேடிக்கைகளுக்கும் பஞ்சம் இருக்காது. போட்டியை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவில் அமெரிக்காவின் முதல் பெண்மணி மிச்செல் ஒபாமா, பிரேசில் அதிபர் டில்மா ரவுஸ்செப் உள்பட உலகம் முழுவதிலும் இருந்து 120-க்கும் மேற்பட்ட தலைவர்கள் மற்றும் வி.ஐ.பி.க்கள் தொடக்க விழா அரங்கிற்குள் சங்கமிக்க இருப்பதால், வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

400 கோடி பேர்

தொடக்க விழாவினை 80 ஆயிரம் பேர் நேரில் ரசிக்க உள்ளனர். போட்டிகளை பார்க்க குறைந்த பட்ச டிக்கெட்டின் விலை ரூ.1700 ஆகும். அதே சமயம் தொடக்க விழாவிற்கான டிக்கெட் கட்டணம் அதிகபட்சம் ரூ.13/4 லட்சம் வரை என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர உலகம் முழுவதும் டி.வி. மூலம் 400 கோடி பேர் தொடக்க விழாவினை கண்டுகளிப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தொடக்க விழா நிகழ்ச்சிக்கு மழை பாதகமாக இருக்குமோ என்று போட்டி அமைப்பாளர்கள் கவலை அடைந்திருந்தனர். ஆனால் தொடக்க விழாவின் போது லேசான தூறல் மழை பெய்ய 10 சதவீத மட்டுமே வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மேலும் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்தியா தரப்பில் 81 பேர்

இந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 23 வீராங்கனைகள் உள்பட மொத்தம் 81 பேர் கலந்து கொள்கிறார்கள். ஒரு ஒலிம்பிக்கில் இந்தியா அனுப்பிய மிகப்பெரிய அணி இது தான். இதற்கு முன்பு கடந்த பீஜிங் ஒலிம்பிக்கில் 57 பேர் பங்கேற்றதே அதிகபட்சமாக இருந்தது. இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு இந்த முறையில் பதக்க எதிர்பார்ப்பு ரொம்ப அதிகமாக உள்ளது.

இந்திய வீரர்கள் குத்துச்சண்டை, வில்வித்தை, பேட்மிண்டன், டென்னிஸ், துப்பாக்கி சுடுதல் உள்பட 13 விளையாட்டுகளில் களம் குதிக்கிறார்கள். இதில் வில்வித்தையில் தீபிகா குமாரி, பேட்மிண்டனில் சாய்னா நேவால், 6-வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ், துப்பாக்கி சுடுதலில் கடந்த ஒலிம்பிக் சாம்பியன் அபினவ் பிந்த்ரா, ககன்நரங், ரஞ்சன் சோதி, குத்துச்சண்டையில் விஜேந்தர் சிங், ஷிவ தாபா, விகாஷ் கிருஷ்ணன், மேரிகோம், மல்யுத்தத்தில் சுஷில்குமார், யோகேஷ்வர் தத் உள்ளிட்டோருக்கு பதக்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. கடந்த ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம் உள்பட 3 பதக்கம் பெற்றது. இந்த முறை 6 பதக்கங்கள் வரை கிடைக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்கும் தொடக்க விழாவை தூர்தர்ஷன் மற்றும் ஈ.எஸ்.பி.என்.-ஸ்டார்ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இதன் பிறகு இந்திய வீரர்கள் பங்கேற்கும் முக்கியமான போட்டிகளையும் தூர்தர்ஷனில் காணலாம்.