Published:Updated:

ஒலிம்பிக் கிராமத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றம்!

Vikatan Correspondent
ஒலிம்பிக் கிராமத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றம்!
ஒலிம்பிக் கிராமத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றம்!
ஒலிம்பிக் கிராமத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றம்!

லண்டன்: ஒலிம்பிக் கிராமத்தில், இந்திய மூவர்ணக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியை ஒத்திவைக்க வேண்டும் என்ற  இந்தியாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால்,  திட்டமிட்டப்படி நேற்று ஏற்றப்பட்டது. இவ்விழாவில் லியாண்டர் பயஸ், தீபிகா குமாரி கலந்து கொண்டனர்.

லண்டனில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 27 ம் தேதி துவங்குகிறது. இதில் பங்கேற்கும் நாடுகளின் கொடிகள் ஒலிம்பிக் கிராமத்தில் ஏற்றப்படும்.

இந்திய ஒலிம்பிக் குழுவின் தலைவர் அஜித் பால் சிங் மற்றும் பெரும்பாலான விளையாட்டு நட்சத்திரங்கள் இன்னும் லண்டன் வந்து சேரவில்லை. எனவே, கொடி ஏற்றும் நிகழ்ச்சியை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைக்குமாறு இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை லண்டன் ஒலிம்பிக் நிர்வாகிகள் ஏற்க மறுத்து விட்டனர்.

இதையடுத்து ஒலிம்பிக் கிராமத்தில் நேற்று தேசிய கீதம் இசைக்க, இந்திய மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது. அருகில் ஐந்து வளையங்கள் கொண்ட ஒலிம்பிக் கொடியும் ஏற்றப்பட்டது. இதில் ஒலிம்பிக் கிராமத்தின் மேயர் சார்லஸ் ஆலன், இந்திய ஒலிம்பிக் குழுவின் துணைத் தலைவர் முரளிதரன் ராஜா கலந்து கொண்டனர்.

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய விளையாட்டுக் குழுவை வரவேற்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, டென்னிஸ் வீரர்கள் மகேஷ் பூபதி, ரோஹன் போபண்ணா, இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் உள்பட சுமார் 35 பேர் கலந்துகொண்டனர்.

வீரர்களை வரவேற்று சார்லஸ் ஆலன் கூறுகையில்:- பல்வேறு கலாசாரத்தில் இருந்து ஒலிம்பிக் கிராமத்திற்கு வந்திருக்கிறீர்கள். என்றும் மறக்கமுடியாத நினைவுகளோடு திரும்பிச் செல்வீர்கள் என நம்புகிறேன்.

இந்திய குழுவினர் முழுமையாக வராததால், இந்நிகழ்ச்சியை ஒத்தி வைக்க வேண்டுமென்ற நிர்வாகிகளின் கோரிக்கையை புரிந்து கொண்டோம். ஆனாலும், ஏற்கனவே திட்டமிட்ட அட்டவணையில் எவ்வித மாற்றமும் செய்ய முடியாது.

இந்தியாவை போல பல்வேறு நாடுகளும் கொடி ஏற்றும் நிகழ்ச்சியை மாற்றி அமைக்க வலியுறுத்தின. இதனை ஏற்றுக் கொண்டால் ஒட்டுமொத்த போட்டிக்கும் இடையூறு ஏற்படும் என்பதால் இந்தியாவின் கோரிக்கை நிராகரிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது’’ என்றார்.

இந்தியக் கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து துர்க்மேனிஸ்தான், வெனிசுலா ஆகிய நாடுகளின் கொடிகளும் ஏற்றப்பட்டன.