Published:Updated:

செல்சீ ரசிகனின் ரத்தத்தை நீலமாக மாற்றியவன்... மிஸ் யூ ஜான் டெர்ரி!

செல்சீ ரசிகனின் ரத்தத்தை நீலமாக மாற்றியவன்... மிஸ் யூ ஜான் டெர்ரி!
News
செல்சீ ரசிகனின் ரத்தத்தை நீலமாக மாற்றியவன்... மிஸ் யூ ஜான் டெர்ரி!

செல்சீ ரசிகனின் ரத்தத்தை நீலமாக மாற்றியவன்... மிஸ் யூ ஜான் டெர்ரி!

“அவருக்கு 32 வயது ஆகிறது. இது, இளம் வீரர்களுடன் போட்டியிடும் வயது அல்ல. வாரத்துக்கு இரண்டு போட்டிகளில் எல்லாம் அவரால் விளையாட முடியாது. வெளியே உட்கார அவர் பழகிக்கொள்ள வேண்டும்” இது, பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் பிரபல அணியின் கேப்டனைப் பற்றி அந்த அணியின் பயிற்சியாளர் சொன்னது. அணியின் கேப்டனை பிளேயிங் லெவனில் எடுக்காததற்கு, பயிற்சியாளர் சொன்ன இந்த கமென்ட் வைரல்.

பயிற்சியாளர் சொன்னதுபோல் 38 போட்டிகள்கொண்ட பிரீமியர் லீக் தொடரில் 14 போட்டிகளில் மட்டுமே விளையாடினார் அந்த வீரர். அவரது கால்பந்து வாழ்க்கை முடிந்தது என்றே நினைத்தனர். அதற்கடுத்த சீஸன்களில் நடந்தது சரித்திரத் திருப்பம்!

அந்த அணியின் மேனேஜர் (பயிற்சியாளர்) மாற்றப்படுகிறார். முன்னாள் மேனேஜர் ஒருவரே மீண்டும் பதவியேற்கிறார். மீண்டும் அணியின் கருவாய் உருவெடுக்கிறார் அந்த கேப்டன். அடுத்த ஆண்டு பிரீமியர் லீக் தொடரின் 38 போட்டிகளிலும் 90 நிமிடங்களும் களத்தில் நின்று, அணிக்கு கோப்பையை வென்று தருகிறார் அந்த 34 வயது இளைஞர்! கோப்பையை முத்தமிட்டுக்கொண்டே, “என்னால் வாரம் இரண்டு போட்டிகளில் விளையாட முடியாது என்றார் ஒருவர். இதோ இன்னும் போராடிக்கொண்டிருக்கிறேன். இதற்காகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இங்கு பந்து பொறுக்கும் சிறுவனாக, அணியின் சின்னமாக இருந்துள்ளேன். இந்த மைதானத்துக்கு வண்ணம் சேர்த்தவன் நான். அணிக்காக அனைத்தும் செய்துள்ளேன்” என்று அவர் சொல்லி முடிக்கையில் அவர் ரத்தத்தினுள் இருந்த கால்பந்து வெறி, கண்களின் வழியே தெரிந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

யார் அவர்?

ஜான் டெர்ரி! - கால்பந்து உலகம் மெச்சும் முக்கிய டிஃபண்டர். செல்சீ அணியின் ஈடுஇணையற்ற கேப்டன், லீடர், லெஜண்ட்.

பிரீமியர் லீக் ரசிகர்களுக்கு மட்டுமே இந்தப் பெயர் பரிச்சயம். 723 போட்டிகள், 67 கோல்கள், 16 கோப்பைகள் என செல்சீ அணியின் தன்னிகரற்றத் தலைவனாக விளங்கியவர் ஜான் டெர்ரி. வயது 36. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பம்பரமாகச் சுழன்ற கால்கள் அமைதியாக அமர மறுக்கின்றன.

ஓய்வுபெறும் ஐடியாவே இப்போது இந்த ‘இளைஞனி’டம் இல்லை! அப்புறம்..? அந்த மனுஷன் செல்சீ அணியைவிட்டுப் போகிறார். அதுதான் விஷயம்.

ஜான் டெர்ரி செல்சீயைவிட்டுப் பிரிவது, பேசுபொருளாக இருக்கக் காரணம் இல்லாமல் இல்லை. ஒரு வீரன் 22 ஆண்டுகள் விளையாடிவிட்டு அந்த அணியைவிட்டுப் போகிறார் என்றால், அது பெரிய விஷயம். கிரிக்கெட்டில் இன்று ஓர் அணிக்காக விளையாடும் வீரர், நாளை வேறோர் அணிக்காக விளையாடினால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், கால்பந்தில் அப்படியில்லை. ஒருசில வீரர்கள் வேறு அணிக்கு மாறும்போது வில்லனாகத் தெரிவர். பத்து ஆண்டுகளில் பத்து அணிகளில் விளையாடியவர்கள்  இருக்கிறார்கள். ஆனால், ஒரே அணியில் 22 ஆண்டுகள் என்பது அசாதாரணம். ஜான் டெர்ரி அசாதாரணன். அதுவும் 12 ஆண்டுகளில் 580க்கும் மேற்பட்ட போட்டிகளில் ஓர் அணிக்குத் தலைமை என்பது பெரிய விஷயம். அப்படியொரு வரலாற்றுச் சிறப்புமிக்க வீரர் டெர்ரி. 

2008-ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் ஃபைனல். எதிர் அணி மான்செஸ்டர் யுனைடெட். மழை வெளுத்துவாங்க, பெனால்டி கிக் வரை சென்றது போட்டி. யுனைடெட் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ வாய்ப்பை மிஸ்செய்துவிட்டார். கடைசி ஷாட். டெர்ரியின் வாய்ப்பு. அடித்தால் வெற்றி. இல்லையேல், சடன் டெத். மழையில் கால்கள் சறுக்க, டெர்ரியின் ஷாட் இலக்கின்றி சென்றது. சடன் டெத்தில் வென்று சாம்பியனானது யுனைடெட். இன்றும்கூட ஒருவர் பெனால்டியில் சறுக்கினால் ‘லைக் ஜான் டெர்ரி’ என்பதுதான் வர்ணனையாளர்கள் சொல்லும் உதாரணம். டெர்ரியின் மிஸ், அந்த அளவுக்குப் பேசப்பட்டது. தன்னால் ஒரு மாபெரும் கோப்பை நழுவுகிறது என்ற குற்ற உணர்ச்சியில் கலங்கினார் டெர்ரி. ஆறாத வடுவாக இருந்தது அந்த வலி. ஆனால், அந்த வடுவை அழிக்க, தன் அணியை 2012-ம் ஆண்டு மீண்டும் ஃபைனலுக்குள் அழைத்துச் சென்றார். கோப்பையை முத்தமிட்டார்!

2010-ம் ஆண்டில் டெர்ரியின் சொந்த வாழ்க்கையில் பிரச்னை. அடுத்தடுத்து  வழக்குகள். ஒருபுறம் மன உளைச்சல். மறுபுறம் தூற்றல்கள். டெர்ரியின் மதிப்பு செல்சீ ரசிகர்களிடையே குறையும் என்று கால்பந்து உலகம் கணித்தது. நடந்தது வேறு. அந்த வழக்குக்குப் பின்பு ஸ்டாம்ஃபோர்டு பிரிட்ஜில் நடந்த முதல் போட்டி. ‘வெல்கம் டெர்ரி ஆர்மி’ என மைதானம் முழுவதும் பதாகைகள். எங்கெங்கும் நிறைந்திருந்தது டெர்ரியின் முகம் (மாஸ்க்). அணியை டெர்ரி வழிநடத்தி வந்தபோது மைதானம் எங்கும் ஆதரவுக் குரல். உலகமே அதிசயத்தது. அணியின் மீது வீரன்கொண்ட காதலுக்கான மரியாதை அது!

சமீபமாகத்தான் மீம்ஸ்கள் பிரசித்தி. ஆறு ஆண்டுகளுக்கு முன்பே டெர்ரியைப் பற்றிய மீம்ஸ்கள் வைரல். 2012-ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் ஃபைனலில் விளையாட டெர்ரிக்குத் தடை. பேயர்ன் மூனிச் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது செல்சீ. கேலரியில் அமர்ந்திருந்த அவர், வெற்றிக் கொண்டாட்டத்தின்போது முழு ‘கிட்’டுடன் வந்து கலந்துகொண்டார். மீம்ஸ்கள் தெறித்தன. `ஆடாமலேயே கொண்டாட்டத்தில் ஜெர்சியுடன் கலந்துகொண்டார்' என உலகமே கேலி செய்தது. அவர் பதில் சொல்லவே இல்லை. 2013-ம் ஆண்டு யூரோபா லீக் ஃபைனல்.

அதே சூழ்நிலை. டெர்ரி இல்லை. லாம்பார்ட் தலைமையிலான அணி சாம்பியன். மீண்டும் அதேபோலத்தான் கொண்டாட வந்தார் டெர்ரி. ஆம், அந்த ஆயிரக்கணக்கான மீம்ஸ்களில் ஒன்றுகூட அவரை அசைக்கவில்லை. ‘என் அணி, என் வீரர்கள். என் அணியின் கோப்பை, நான் கொண்டாடுவேன்’ என்பது டெர்ரியின் வாதம். இந்த முறை மீம்ஸ்கள் பறக்கவில்லை. 

டெர்ரி அணியை வழிநடத்திய விதம் மாஸ்டர் க்ளாஸ். தடுப்பாட்டத்தில் மாபெரும் அரண். 2004-05 ஆண்டு சீஸனில் மேனேஜராகப் பொறுப்பேற்றதும் 24 வயது டெர்ரியை நிரந்தர கேப்டனாக்கினார் ஜோஸே மொரினியோ. 14 வீரர்கள் விலகல். ஒன்பது புதிய வீரர்கள் சேர்க்கை என அணியிலும் மாபெரும் மாற்றம். புதிய பயிற்சியாளர், புதிய அணி. இப்படியான சூழ்நிலையில் ஒரு கேப்டனாக அணியைப் பக்காவாக வழிநடத்தினார் டெர்ரி. அதனால்தான் 50 ஆண்டுகள் கழித்து செல்சீ அணி கோப்பை வென்றது. பிரீமியர் லீக்கில் இது வரலாற்றுச் சாதனை. அடுத்த ஆண்டும் செல்சீ சாம்பியன். ‘கேப்டன்’ டெர்ரி மாபெரும் தலைவன் ஆன தருணம் அது.

களத்தில் அவர் காட்டும் கமிட்மென்ட் ஈடுஇணையற்றது. தான் பிரைம் ஃபார்மில் இருந்த காலங்களில் அனைத்து ஃபார்வேர்டுகளுக்கும் டெர்ரி சிம்மசொப்பனம். எந்த ஒரு தருணத்திலும் அவர் பின்தங்கியதே இல்லை. 2007-08ம் ஆண்டு சீஸன்களில் அடிக்கடி காயமடைந்தார். ஆனால், உடனடியாக மீண்டு வந்தார். 2008-ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் ஃபைனல் சமயம் டெர்ரிக்கு முழங்கையில் காயம். விளையாடுவாரா என்ற கேள்வி. காயம் முழுமையாகக் குணமடையாத நிலையிலும் விளையாடினார். அந்தப் போட்டியில் அவர் பெனால்டியை மீம்ஸ் செய்தது மட்டும்தான் பலருக்கும் தெரியும். காயத்தோடு 120 நிமிடங்கள் அணியை வழிநடத்தியதை அறிந்தவர் சொற்பமே! 

நெகட்டிவ் மீம்ஸ் மட்டுமல்ல, டெர்ரியைப் புகழ்ந்தும் மீம்ஸ்கள் வரத்தான் செய்தன. 2010-ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஸ்லோவேனியாவுக்கு எதிரான போட்டியில் கீழே விழுந்து பந்தை பிளாக் செய்திருப்பார் டெர்ரி. அந்த ரீ-பெளண்டை ஸ்லோவேனிய வீரர் மீண்டும் கோல் நோக்கி செலுத்த, உடனே எழுந்து தரையை நோக்கி ஹெடிங் செய்யப் பாய்வார் டெர்ரி. அது மிகவும் ஆபத்தான மூவ். அவ்வளவு வேகத்தில் முழங்கால் உயரத்தில் மட்டுமே வரும் பந்தைத் தடுக்க சற்றும் யோசிக்காமல் அவர் டைவ் அடித்ததெல்லாம் வேற லெவல். ‘ஜான் டெர்ரி டால்பின் டைவ்’ என மீம்ஸ் தட்டியிருந்தார்கள் நெட்டிசன்ஸ். 

2006-ம் ஆண்டு உலகக்கோப்பையில் டிரிடாட் அணிக்கு எதிரான போட்டியில் கோல் நோக்கிச் சென்ற பந்தை கோல் லைன் அருகே க்ளியர் செய்ததெல்லாம் ‘வேர்ல்டு க்ளாஸ்’.   டெர்ரி ஸ்பெஷல்களில் அதுவும் ஒன்று. இளம் வீரர்களாக இருந்தாலும் சரி, மூத்த ஸ்டார்களாக இருந்தாலும் சரி, அனைவரிடமும் ஒரே மாதிரி பழகக்கூடியவர். இந்த சீஸனில் பெரிதாக அவர் களம் காணவில்லை. ஆனால், அணியில் அவர் இருப்பது அனைவருக்கும் மாபெரும் பலம், நம்பிக்கை.  

`பிரீமியர் லீக் தொடரில் அதிக கோல்கள் அடித்த டிஃபண்டர்' என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 2012-ம் ஆண்டு தேசிய அணி நிர்வாகத்துடனான கருத்துவேறுபாடு காரணமாக தேசிய அணியிலிருந்து ஓய்வுபெற்றார். ஆனால், 2016-ம் ஆண்டு யூரோ கோப்பை வரை டெர்ரியின் இங்கிலாந்து கம்-பேக்குக்காக வேண்டியவர்கள் ஏராளம். இந்த சீஸனோடு செல்சீ அணியைவிட்டுப் போகிறார் டெர்ரி. 

செல்சீயை ஐரோப்பாவின் ஒரு பெரிய அணியை மாற்றியதில் டெர்ரியின் பங்கு அதிகம். இதோ இந்த சீஸனின் பிரீமியர் லீக் தொடரில் செல்சீ அணி சாம்பியன் பட்டம் வென்று விட்டது.  FA கோப்பையின் இறுதிப்போட்டியிலும் காலடி எடுத்துவைத்துவிட்டது. டெர்ரியின் மகுடத்தை அழகாக்க இன்னும் ஒரு முத்து காத்திருக்கிறது. 

சண்டர்லேண்ட் அணிக்கு எதிரான கடைசி பிரீமியர் லீக் போட்டியில் டெர்ரி அணியைக் கடைசி முறையாக வழிநடத்தினார். அவரது ஜெர்சி எண் 26. தான் ஒவ்வொரு நாளும் ஓடிய மைதானத்திலிருந்து, தன்னைத் தலைவனாகப் பார்த்த ரசிகர்களிடமிருந்து, தான் மெருகேற்றிய வீரர்களிடமிருந்து, தன்னை உருவாக்கிய, தான் உருவாக்கிய அணியிடமிருந்து கடைசியாக ஒருமுறை விடைபெற்றார் டெர்ரி. கண்ணீர், அனைவரின் கண்களிலிருந்தும் அந்த வீரனைப் பார்க்க விரைந்தது. போட்டி முடிந்ததும் கோப்பையைக் கையில் ஏந்திவிட்டு கண்ணீர் மல்க ரசிகர்களிடம் தன் கடைசி உரையை அவர் ஆற்றும்போது, ஒவ்வொரு ரசிகனின் ரத்தமும் நீலமாய் வழிந்தது!

இந்த ஞாயிறு நடக்கும் FA கோப்பைக்கான போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகமே. செல்சீ ரசிகர்கள் பெறப்போவது வேண்டுமானால் ஒரு கோப்பையாக இருக்கலாம்; ஆனால் இழக்கப்போவது ஒரு மாபெரும் சகாப்தத்தை!

மிஸ் யூ JT!