Published:Updated:

"கிராமத்துல இருந்த எங்களை தேடிக் கண்டுபிடிச்சு விருது கொடுத்ததுலாம்...!" நெகிழும் லோகநாதன் #AnandaVikatanNambikkaiAwards

"கிராமத்துல இருந்த எங்களை தேடிக் கண்டுபிடிச்சு விருது கொடுத்ததுலாம்...!" நெகிழும் லோகநாதன் #AnandaVikatanNambikkaiAwards
"கிராமத்துல இருந்த எங்களை தேடிக் கண்டுபிடிச்சு விருது கொடுத்ததுலாம்...!" நெகிழும் லோகநாதன் #AnandaVikatanNambikkaiAwards


‘ஆனந்த விகடன்’ நம்பிக்கை விருதுகளில் சிறந்த வீராங்கனை, நம்பிக்கை மனிதர் என இரண்டு விருதுகளை வென்றார் தடகள வீராங்கனை எல்.சூர்யா. அவரது தந்தை லோகநாதன் சிறந்த பயிற்சியாளர் விருது வாங்கினார். ஒரே குடும்பத்துக்கு மூன்று விருதுகள். வேறு யாருக்கும் கிடைக்காத கெளரவம்.

மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக இருந்த லோகநாதனை போனில்  பிடித்தோம். ‘‘அந்த மேடையிலயே சொல்ல ஆசைப்பட்டேன். எப்படி சொல்றதுன்னு தெரியலை. அன்னிக்கி நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன். நான்தான் மூணு அவார்டு வாங்கினேன். வேற யாருக்கும் இந்த பாக்கியம்  கிடைக்கலை. என் வாழ்க்கைல ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் என்னை கெளரவிச்சது ‘ஆனந்த விகடன்’ மட்டும்தான்.’’

இந்த ஃபீல்டுல 40 வருஷமா இருக்கீங்க. வேற எந்த அங்கீகாரமும் கிடைக்கலையா? ‘‘இல்லவே இல்லை. என் லைஃப்ல எனக்கு கிடைச்ச முதல் அங்கீகாரம் இதுதான். இவ்வளவு நாளுக்கு அப்புறம் உனக்கு ‘ஆனந்த விகடன்’ மூலமா அங்கீகாரம் கிடைச்சிருக்குன்னு ஊர்ல ரொம்ப பேர் சொன்னாங்க. என்னுடைய நண்பர்கள், ரோட்டரி கிளப்ல எல்லாரும் சந்தோஷப்பட்டாங்க. இந்த விருது வாங்கணுதுக்காக இன்னிக்கி ரோட்டரி கிளப் சார்புல பாராட்டு விழா நடத்துனாங்க.’’ 

‘‘ஒலிம்பிக்ல சான்ஸ் மிஸ் ஆனதுக்கு சூர்யா ரொம்பவே வருத்தப்பட்டா. அடுத்து நடக்குற ஏசியன் மீட்ல எப்படியும் பதக்கம் ஜெயிக்கணும்ங்குற நம்பிக்கையை இந்த விருது அவளுக்குக் கொடுத்திருக்கு. ஒலிம்பிக், ஏசியன் கேம்ஸ் மாதிரி பெரிய டோர்னமென்ட்ல என் பசங்க பதக்கம் ஜெயிக்கணும். திருப்பியும் இதே ஆனந்த விகடன்ல விருது வாங்கணும்’’ என்றார்.

‘‘யார் யாருக்கோ முதலமைச்சர் அவார்டு கிடைச்சிருக்கு. தமிழ்நாடு அரசு சார்பா ஒவ்வொரு வருஷமும் பெஸ்ட் கோச்சுக்கு முதலமைச்சர் அவார்டு கொடுத்து, ஒரு லட்சம் ரூபாய் கொடுப்பாங்க. அதையெல்லாம் பாக்கும்போது நாம எப்ப வாங்கப் போறோம்னு ஏக்கமா இருக்கும். இப்போ  அவ்வளவு பெரிய சபைல எனக்கு அங்கீகாரம் கிடைச்சிருக்கு. 

இந்தியாவுக்காக நான் பதக்கம் வாங்கலை. ஆனா, இந்தியாவுக்காக ஏழு இன்டர்நேசனல் பிளேயர்ஸை உருவாக்கிருக்கேன். யாருமே கண்டுக்கலை. ஆனா, விகடன்ல எப்படி என்னைக் கண்டுபிடிச்சாங்கன்னு தெரியலை.

சிட்டிக்குள்ள இருந்தா கூட நீங்க ஈஸியா கண்டுபிடிச்சிடலாம். புதுக்கோட்டைல ஒரு கிராமத்துல இருக்கோம். எங்களை கண்டுபிடிச்சி, என் பொண்ணுக்கு ரெண்டு அவார்டு, பெஸ்ட் கோச்சுன்னு சொல்லி எனக்கு ஒரு அவார்டு கொடுத்து, மூனு அவார்டையும்  வாங்கிட்டு நான் ஊருக்கு வந்தபோது எப்படி இருந்துச்சு தெரியுமா... அதையெல்லாம் வார்த்தைல சொல்ல முடியாது. என் வாழ்க்கைல மறக்க முடியாத நிகழ்ச்சி அது. 

‛‛நான் என்னதான் படம் எடுத்தாலும் எனக்கு ஆனந்த விகடன்ல 36 மார்க்குக்கு மேல போட மாட்டாங்க. நானும் ஒரு அவார்டு வாங்கணும்னு ஆசைப்படுறேன். ஆனா முடியவே இல்லை’னு நடிகர் பார்த்திபன் சொன்னார். அவர் பேசுனதுக்கு கொஞ்ச நேரம் கழிச்சுதான், நான் மூணு அவார்டு வாங்குனேன். அப்ப பார்த்திபன் மனநிலை எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பாத்தேன்.

இன்னிக்கி கூட ஒரு நண்பர் வந்தார். அவர் ஸ்டேட் பேங்க்ல வேலை பாத்து ரிட்டையர்டு ஆனவர். அவர் சொன்னார், ‛‛ஆனந்த விகடன்ல என்ன மார்க் போடுறாங்கன்னு பாத்துட்டுதான் நான் சினிமாவுக்கே போவேன்…. அப்பதான் புரிஞ்சது பார்த்திபன் சொன்னது எவ்வளவு உண்மைன்னு…    

இன்னொரு விஷயத்தை சொல்லியே ஆகணும். ஹாக்கி பாஸ்கரன் சார் பெரிய ஆளு. ஒலிம்பிக்ல மெடல் வாங்கினவர். அவர் கையால அவார்டு வாங்கினது அதை விட பெருமை. லைஃப்ல இதை விட வேற என்ன சந்தோஷம் வேணும்?

தம்பி…ஒன்பதாம் வகுப்புல நாலு வருஷம் பெயில் ஆனேன். படிப்புல இன்ட்ரஸ்ட் இல்லை. ஓட்டப்பந்தயம்தான் என் மூச்சு. வீட்டுல ஆறு பேர். வறுமைன்னா வறுமை அப்படி ஒரு வறுமை. 1971,72-ல எல்லாம் மகா பஞ்சம். சாப்பாட்டுக்கே கஷ்டம். அந்த சூழல்ல ஓடுவேன்.  பத்து கிலோ மீட்டர் ஓடணும். அப்படி ஓடிட்டு இருக்கும்போது, ‛என்னப்பா இப்டி ஓடிட்டு இருக்கியே’ன்னு பரிதாபப்பட்டு கூழோ கஞ்சியோ ஊத்துவாங்க. அந்த நேரத்துல நினைச்சேன். பெரிய ஆளாகி, ஒரு கிளப் ஒண்ணு ஆரம்பிச்சி, பசங்களை ரெடி பண்ணனும்…

நான் பெரிய அளவுல சாதிக்கலை. ஆனா, இன்னிக்கி சாந்தி, விமலா, பொற்பனையான், சூர்யா, லட்சுமண் எல்லாம் இன்டர்நேஷனல் லெவல்ல ஜெயிச்சிருக்காங்க. இங்க பிராக்டீஸ் எடுத்த 50 பேர் நேஷனல் சாம்பியனாகி, சர்க்கார் வேலைக்குப் போயிட்டாங்க. அடுத்த செட் நேஷனல் சாம்பியன்ஸும் ரெடி. இப்போ 150 பசங்க பிராக்டீஸ் பண்றாங்க. ரொம்ப பெருமையா இருக்கு. எங்களுக்கு இந்த விருது கிடைச்சதால இங்க இருக்கிற பசங்களும் உற்சாகமா இருக்காங்க. ஏதாவது சாதிக்கணும்னு வெறியா இருக்காங்க. எல்லாத்துக்கும் காரணம் இந்த விருது. வெறுமனே நன்றின்னு ஒரு வார்த்தைல முடிச்சிர முடியாது. என்ன சொல்றது எனக்கு வார்த்தைகளே வரலை….’’ என மீண்டும் உணர்ச்சிவசப்பட்டார் லோகநாதன்.

அதுசரி... எல்லாவற்றையும் வார்த்தைகளில் சொல்லிவிட முடியுமா என்ன?

வாழ்த்துகள் சார்!

டெய்ல் பீஸ்: ஞாயிறு 23.04.2017 மதியம் 2.30க்கு சன்.டிவியில் ஒளிபரப்பாகிறது இவ்விழா .

அடுத்த கட்டுரைக்கு