Election bannerElection banner
Published:Updated:

அட... பொதிகை டி.வியில் இப்படி ஒரு நிகழ்ச்சியா?

அட... பொதிகை டி.வியில் இப்படி ஒரு நிகழ்ச்சியா?
அட... பொதிகை டி.வியில் இப்படி ஒரு நிகழ்ச்சியா?

அட... பொதிகை டி.வியில் இப்படி ஒரு நிகழ்ச்சியா?

பொதிகை டிவியில் ஒளிபரப்பாகும் செய்திகளைப் போலவே எவ்விதப் பரபரப்புமின்றி, ஆர்ப்பாட்டமில்லாமல் நடந்தது அந்த பிரஸ் மீட். ஒலியும் ஒளியும், வயலும் வாழ்வும் தவிர்த்து பொதிகையில் நீண்ட நாட்களாக ஒளிபரப்பாகி வரும், ‘பிஎஸ்என்எல் ஸ்போர்ட்ஸ் க்விஸ்’ நிகழ்ச்சி, அக்டோபர் 2ம் தேதி 750வது எபிசோடில் அடியெடுத்து வைக்கிறது. அதற்கான அறிவிப்புதான் அந்த பிரஸ் மீட்.

தனியார் சேனல்களின் போட்டியை சமாளித்து, ஒரு நிகழ்ச்சியை 750 வாரங்களாக நடத்தி வருவதற்காகவே பொதிகை சேனலுக்கு ஒரு சல்யூட். சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (’FIFA) நடத்தும் 2002 உலக கோப்பை கால்பந்து தொடரின் போது, வெறும் நான்கு வாரங்கள் மட்டும் நடத்தலாம் என்று ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த ஸ்போர்ட்ஸ் க்விஸ். ‘செம ப்ரோக்ராம். வேறு எந்த சேனல்லயும் இப்படி ஒரு ப்ரோக்ராம் இல்லை. அப்டியே கண்டியூனு பண்ணுங்க...’ என உலகெங்கும் உள்ள ரசிகர்கள் கொடுத்த ஆதரவுதான், 14 ஆண்டுகள் கடந்து இந்நிகழ்ச்சி வெற்றி நடை போடக் காரணம்.

வெற்றிக்கு இன்னொரு காரணம் நேரடி ஒளிரப்பு. ‘ரிக்கார்ட் பண்ணி போட்டா, இந்தளவு சக்சஸ் ஆயிருக்குமான்னு தெரியலை. லைவ் நிகழ்ச்சின்றதால, மக்கள் ஆர்வமா கலந்துக்குறாங்க’ என்றனர் தூர்தர்ஷன் அதிகாரிகள். ஒவ்வொரு வாரமும் ஞாயிறு இரவு 9 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு, இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, சிங்கப்பூர், மத்திய கிழக்கு, தெற்காசிய நாடுகளில் உள்ள இந்தியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். 

கூகுளில் தேடினாலும் விடை தெரியாத வகையில் கேள்விகளைத் தேர்ந்தெடுப்பது, படபடபடபடவென ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது என, இந்த ‘லைவ்’ நிகழ்ச்சிக்கு ‘லைஃப்’ தந்தவர் சுமந்த் சி.ராமன். ‘2002ல இந்த ப்ரோக்ராம் தொடங்குனப்ப, இந்தளவு சக்ஸஸ் ஆகும்னு நினைச்சுக் கூட பாக்கல. இன்னும் எவ்வளவு நாள் இது நீடிக்கும் என்பது கடவுள் விருப்பம். ஆனால், நாங்கள் எந்த சாதனையையும் முன் வைத்து இயங்கவில்லை’ என்றார் சுமந்த். ‘சாதனை இலக்கு இல்லை என்றாலும், நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் நீண்ட காலமாக நீடிக்கும் தொடர்’ என, 2009ல் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றது, பொதிகை டிவிக்கு கிடைத்த பொக்கிஷம். 


வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் அடைந்த திருப்தி என்ன என கேட்டதும் ‘ஆண், பெண், சிறுவர், முதியவர், நகரம், கிராமம் என எல்லா தரப்பினரையும் எல்லை கடந்து இந்த நிகழ்ச்சி வசீகரித்திருக்கிறது. வாரம்தோறும் ஆயிரக்கணக்கானோர், இ&மெயில், மெசேஜ், ஃபோன், வீடியோ காலிங் மூலம் தொடர்பு கொள்கின்றனர். எல்லாருக்கும் வாய்ப்பு கிடைக்காது. அப்படி வாய்ப்பு கிடைக்காதவர்கள், திட்டி இ - மெயில் அனுப்புவர். அதை நாங்கள் அவர்கள் இந்நிகழ்ச்சியின் மீது இவ்வளவு ஈடுபாடு வைத்திருக்கிறார்களா என பாஸிட்டிவாக எடுத்துக் கொள்வோம்’’ என்றார் சுமந்த்.

கடினமான பணி என்னவெனில், வாரவாரம் கேள்விகளைத் நேர்தெடுப்பதே.  ‘‘ஒரு வாரத்துக்கு 32 கேள்விகள் வரை தயார் செய்ய வேண்டும். பொதுவாக, ரசிகர்கள் இ&மெயில் மூலம் கேள்விகளை அனுப்புவர். அதை கிராஸ் செக் செய்ய வேண்டும். ஒரு சிலர் உண்மையிலயே பிரமாதமான கேள்விகளை அனுப்புவர். பல கேள்விகள் சரியாக இருக்காது. அதேபோல, கேள்வி ரிப்பீட் ஆவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், ‘சார் இந்த கேள்வி ஏற்கனவே. இந்த தேதியில் கேட்கப்பட்டு விட்டது’ன்னு மெயில் அனுப்பிவிடுவார்கள்’ என சுமந்த் சிரிக்கிறார். 

உங்களைக் கவர்ந்த நேயர், பதில் எனக் கேட்டதும் ‘‘சென்னையை சேர்ந்த ஒரு சிறுவன், அநேகமாக செஸ் பஸிலை தேர்ந்தெடுப்பான். போர்டு ஸ்கிரீனில் தெரிந்த அடுத்த நொடியே, சரியான விடையைச் சொல்லி விடுவான். அதேபோல, முகத்தை மறைத்து நிற்கும் கிரிக்கெட் வீரர்கள் தொடர்பான புகைப்படத்தை பார்த்த உடனேயே ‘பட்டுன்னு’ சொல்லிடுவான் ஒரு பொடுசு. அந்த பிளேயர் இன்டர்நேசனல் மேட்ச் கூட ஆடியிருக்க மாட்டார். இன்னொரு பொண்ணு, காதை மட்டுமே வச்சு, இது எந்த பிளேயர்னு சொல்லிடுவாங்க. இதை விட ஆச்சரியம், கிராமத்துல இருக்குற பசங்க, ஃபார்முலா ஒன் கார் ரேஸ் கேள்விக்கு பளிச்சுன்னு பதில் சொல்வாங்க. பிரமிப்பா இருக்கும்’ என சிலாகிக்கிறார்.

பொதிகை டிவி வரலாற்றில் புதிய மைல்கல்லைத் தொட காத்திருக்கும் இந்நிகழ்ச்சிக்கான ப்ரமோ வரும், 29ம் தேதி சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடக்கிறது. பிரபலங்கள், பொதிகை டிவி நேயர்கள் பங்குபெறும் இந்த விழாவில், முன்னாள் இந்திய ஹாக்கி கேப்டன் பாஸ்கரன், தடகள வீராங்கனை ஷைனி வில்சனுக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. கூடவே, ‘லைவ் ஸ்பெஷல் க்விஸ்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரஸ் மீட் முடிந்த பின் ‘இந்த ப்ரோக்ராம் 1040 எபிசோட் போக வாழ்த்துகள்’ என்றார் ஒரு நிருபர். ‘அதென்ன கணக்கு 1040...’ என்றதும். ‘கால்பந்து ஜாம்பவான் பீலே அடித்த கோல்கள்.’ என பதில் சொன்னார் அந்த நிருபர். ‘இல்ல இல்ல... இந்த ப்ரோக்ராமுக்கு வானமே எல்லை’ என்றார் மற்றொரு நிருபர். ஆம், வானமே எல்லை. 

-தா.ரமேஷ்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு