Published:Updated:

11,000 வோல்ட் மின்சாரத்தை விட கருணைப் பார்வை வலித்தது #DevendraJhajharia

11,000 வோல்ட் மின்சாரத்தை விட கருணைப் பார்வை வலித்தது #DevendraJhajharia
11,000 வோல்ட் மின்சாரத்தை விட கருணைப் பார்வை வலித்தது #DevendraJhajharia

உன் கருணை அதோட சாவை விட கொடுமையானது. பறவைகளை கூண்டில் அடைத்து வைத்திருப்பதை கண்டித்து ‘கபாலி’ படத்தில் ரஜினி சொல்லும் இந்த வசனம், மாற்றுத் திறனாளிகள் மீதான நம் பார்வைக்கும் பொருந்தும். உற்று கவனிப்பதை விட கண்டுகொள்ளாமல் இருப்பதையே பெரும்பாலான மாற்றுத் திறனாளிகள் விரும்புகின்றனர். ரியோ பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியா #DevendraJhajharia அந்த ரகம். 

‘‘எனக்கு அப்போது எட்டு வயது. மரத்தில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தேன். எதிர்பாராத விதமாக அங்கிருந்த எலக்ட்ரிக் கேபிளை தொட்டு விட்டேன். 11,000 வோல்ட் மின்சாரம் என் உடம்பில் பாய்ந்தது. மருத்துவமனையில் என் இடது கையின் கீழ் பகுதியை வெட்டி எறிந்து விட்டனர்’’ என சொல்லும் தேவந்திர ஜஜாரியா, 2004 ஏதென்ஸ் பாரா ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்றுள்ளார்.

‘‘கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை. வீடு திரும்பியபோது ஊரில் என்னைப் பார்த்தவர்களின் பார்வையே வேறு மாதிரி இருந்தது. அப்போது உடல் ரீதியாக கொஞ்சம் வலி இருந்தது. ஆனால், அந்த வலியை விட, மற்றவர்களின் கருணைப் பார்வையும், உதாசீனப் பார்வையும் அதிக வலியைத் தந்தது. இவ்வளவு ஏன், என் பெற்றோரே என் வாழ்க்கையை நினைத்து கவலைப்பட்டனர்’’ எனச் சொல்லும் ஜஜாரியா, ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர்.

‘‘கை போய் விட்டது. இனி உன்னால் ஒன்னுமே பண்ண முடியாது. வீட்டிலேயே இரு... என உறவினர்கள் என் காதுபடவே பேசினர். இரக்கமே இல்லாமல் சிலர், என் பெற்றோரிடமும் இதைத் தெரிவித்தனர். பள்ளியில் சக மாணவர்கள் என் ஊனத்தை வேடிக்கைப் பொருளாகப் பார்த்து சிரித்தனர். இந்த சிரிப்பு, இந்த ஏளனம் இதையெல்லாம் கடக்க வேண்டுமெனால், உடம்பில் குறையே இல்லாதவர்களுடன் களத்தில் மோதி ஜெயிக்க வேண்டும் என முடிவெடுத்தேன்’ என, விளையாட்டை தேர்ந்தெடுக்க ஜஜாரியா சொல்லும் கதை சுவாரஸ்யம்.

‘எனக்கு பத்து வயது இருக்கும். பள்ளியில் நடந்த ஸ்போர்ட்ஸ் தினத்தில் பங்கேற்ற அனைத்துப் போட்டியிலும் பரிசு வாங்கினேன். அந்த நொடி தீர்மானித்தேன், இனி ஸ்போர்ட்ஸ்தான் என் உலகம், வாழ்க்கை எல்லாமே என. ஆரம்பத்தில் முழு அளவில் உடற்தகுதி உடையவர்கள் பங்கேற்கும் போட்டியில்தான் பங்கேற்றேன். கல்லூரியில் சேர்ந்த பின்புதான், மாற்றுத் திறனாளிகளுக்கென தனி போட்டி நடப்பது தெரிய வந்தது’ என அப்பாவியாக சொல்லும் ஜஜாரியா இப்போது, ஈட்டி எறிதலில் இரண்டு உலக சாதனை, இரண்டு பாரா ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள், இரண்டு உலக சாம்பியன்ஷிப் பட்டங்கள், தொடர்ந்து 12 ஆண்டுகள் நேஷனல் சாம்பியன்ஷிப் பட்டங்களுக்கு சொந்தக்காரர்.

பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஈட்டியை கையில் எடுத்த ஜஜாரியா, 2002 வரை முழு அளவிலான உடல் தகுதி உள்ளவர்களுடனே போட்டி போட்டுக் கொண்டிருந்தார். ராஜஸ்தான் மாநில சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றபோதுதான், துரோணாச்சாரியா விருது வென்ற ஆர்.டி.சிங் கண் ஜஜாரியா மீது பட்டது. அன்று முதல் ஜஜாரியா, ஆர்.டி. சிங்கின் சிஷ்யன்.

‘‘முதல் பார்வையிலேயே தேவேந்திரா என்னை வசீகரித்து விட்டார். நிச்சயம் இவர் நாட்டிலேயே சிறந்த ஈட்டி எறிதல் வீரராக வருவார் என உள்மனம் சொன்னது. ஈட்டி எறிதலை தேர்ந்தெடுத்து 15 ஆண்டுகள் கடந்து விட்டது. இன்னமும் அதன் மீதான பிரியம் அவருக்கு குறையவே இல்லை. அந்தளவு இந்த விளையாட்டை அவர் நேசிக்கிறார். எப்போதுமே அவர் தன் த்ரோவை சக மாற்றுத் திறனாளி வீரர்களுடன் ஒப்பிடுவதில்லை. உடல்வாகுள்ள வீரர்கள் த்ரோவுடன்தான் ஒப்பிடுவார். இதிலிருந்தே அவர் மனவலிமையைப் புரிந்துகொள்ளலாம். இன்று இந்தியாவே பாரா ஒலிம்பிக் வீரர்களை மதிக்கிறது எனில் அதற்கான விதை ஜஜாரியா தூவியது’’ என புதிய கதை சொல்கிறார் ஆர்டி சிங்.

‘‘அதற்கு முன்பும் பாரா ஒலிம்பிக் நடந்தது என்றாலும், 2004 ஏதென்ஸ் பாரா ஒலம்பிக்கில் ஜஜாரியா தங்கம் வென்றபின்புதான், இப்படி ஒரு போட்டி நடப்பதே பலருக்கு தெரிய வந்தது. ஜஜாரியா பதக்கம் வென்றதை ராஜஸ்தான் அரசே நம்பவில்லை. சில அதிகாரிகள் எனக்கு ஃபோன் செய்து, பாரா ஒலிம்பிக்கில் இந்தியா பங்கேற்றுள்ளதா எனக் கேட்டனர். பரவாயில்லை. இன்று நிலைமை எவ்வளவோ மாறி விட்டது. கோ ஸ்போர்ட்ஸ் போன்ற அமைப்புகள் பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கும் ஸ்பான்ஷர் செய்து வருகிறது’’ என திருப்தி அடைந்தார் ஆர்.டி.சிங்.

எந்த  விளையாட்டிலும் 12 ஆண்டுகளுக்கு முன் தான் நிகழ்த்திய சாதனையை சமன் செய்வதும், அதை மிஞ்சுவதும் சவால். தேவேந்திர ஜஜாரியா அதை சாத்தியமாக்கியதால் அவரை, ‘இந்திய பாரா ஒலிம்பிக்கின் தந்தை’ என புகழ்கிறார்கள். 2004 ஏதென்ஸில் 62.15 மீட்டர் தூரம் த்ரோ செய்தவர், 2016 ரியோ பாரா ஒலிம்பிக்கில் 63.7 மீட்டர் எறிந்து, தங்கம் வென்றதுடன் உலக சாதனையும் படைத்துள்ளார் என்பது நிச்சயம், பாரா ஒலிம்பிக் வரலாற்றில் மைல்கல்.

‘‘பங்கேற்ற 17 வீரர்களில் 4 பதக்கம் என்பது நிச்சயம் பெரிய விஷயம். எல்லா தரப்பில் இருந்தும் பாராட்டு குவிகிறது. நாங்கள் பதக்கம் வென்றது ட்விட்டரில் ட்ரெண்டாகி இருக்கிறது. எல்லாம் சந்தோஷம். ஆனால், 2004 பாரா ஒலிம்பிக் முடிந்த பின், எங்கள் மீதான அக்கறை குறைந்ததைப் போல, இந்த முறை நிகழக் கூடாது. ஏனெனில், பாராட்டுக்கு நாங்கள் தகுதியானவர்கள் என்பதை நிரூபித்து விட்டோம்’’ என்கிறார் ஜஜாரியா.

நிச்சயமாக!

- தா.ரமேஷ்

அடுத்த கட்டுரைக்கு