Published:Updated:

காதல் பகிர்ந்த ஜோடி...பதக்கம் விற்ற வீரர் - ஒலிம்பிக்கின் நெகிழ்ச்சித் தருணங்கள்!

காதல் பகிர்ந்த ஜோடி...பதக்கம் விற்ற வீரர் - ஒலிம்பிக்கின் நெகிழ்ச்சித் தருணங்கள்!
காதல் பகிர்ந்த ஜோடி...பதக்கம் விற்ற வீரர் - ஒலிம்பிக்கின் நெகிழ்ச்சித் தருணங்கள்!

காதல் பகிர்ந்த ஜோடி...பதக்கம் விற்ற வீரர் - ஒலிம்பிக்கின் நெகிழ்ச்சித் தருணங்கள்!

ரியோ டி ஜெனிரோவில் ஆகஸ்ட் 5ம் தேதியன்று தொடங்கி 21ம் தேதியன்று கோலகலக் கொண்டாடத்துடன் முடிவடைந்துள்ளது ‘ரியோ ஒலிம்பிக் 2016’.

ஏராளமான உணர்ச்சிகள் பொதிந்த சம்பவங்களையும், சொல்லப்பட்ட காதல்களையும், பதக்கத்தைவிட உயர்ந்து நின்ற பரிவையும், மனம் நிறைந்த புன்னைகையையும், வலிகளைத் தாண்டிய வெற்றியையும் புகைப்படங்களாகவும், நிகழ்வுகளாகவும் பதிவு செய்து  சென்றிருக்கின்றது இந்த ஒலிம்பிக்.

அவற்றில் சில முக்கிய தருணங்கள், நம்மையும் கலவையான உணர்வுகளின் உச்சத்திற்குக் கொண்டு சென்று நிறுத்தியிருந்தன.

அதில் சிலவற்றின் தொகுப்பு உங்களுக்காக:

விளையாட்டு உடை சார்ந்ததல்ல:

* பீச் வாலிபால் என்றாலே பிகினி உடைதான்  என்றிருக்க, எகிப்தின் வீராங்கனைகள் முழுவதுமாக உடல் மறைத்த ஆடையை அணிந்து விளையாடினர்.


இந்தியாவின் ‘கோல்டன் கேர்ள்ஸ்’:

* ரியோ ஒலிம்பிக் களத்தில் அமெரிக்காவும், முதன்முதலில் ஒலிம்பிக்கில் போட்டியிட்ட குட்டி நாடுகளும் கூட பதக்கப்பட்டியலில் உயர்ந்து கொண்டிருந்தபோது, ஒரு பதக்கமாவது கிடைக்காதா என்று இந்தியாவே நம்பிக்கையுடன் பிரார்த்தித்துக் கொண்டிருந்தது. ஒலிம்பிக் போட்டியின் 11வது நாள், இந்தியர்களின் கனவு வீண்போகாத வகையில், முதல் பதக்கத்தை (வெண்கலம்) மல்யுத்தப் பிரிவில் வென்று வந்தார் சாக்‌ஷி மலிக்.

* இன்னொரு புறமோ, இதுவரை இந்தியர்கள் யாருமே தொடாத தூரமாக ஜிம்னாஸ்டிக்கில் 4வது இடம் பிடித்து, கோடிக்கணக்கான இந்திய இதயங்களைக் கொள்ளை கொண்டார் தீபா கர்மகர்.

* துளிர்விட்ட நம்பிக்கையின் மொத்த வடிவமாக, தங்கத்தை நோக்கி முன்னேறினார் பி.வி.சிந்து.

* பேட்மின்டன் பிரிவில், முதல்முறையாக வெள்ளிப் பதக்கத்தை வென்று கிரிக்கெட்டை மட்டுமே ஆராதித்த விளையாட்டு ரசிகர்களின் மத்தியில் ஒரே நாளில் ஹீரோயினாக மிளிர்ந்தார் சிந்து.

* கோல்ஃபில் அதிதி அஷோக் 52வது இடம் என்றாலும், 18 வயதில் இந்தச் சாதனை என்பதால் நம்பிக்கை நட்சத்திரமாக பேசப்பட்டார்.

விளையாட்டுக் காதலி:

* இறுதியில் தங்கத்தைத் தவற விட்டபோதும், வெற்றிப் பெற்ற மகிழ்ச்சியில் விளையாட்டு மைதானத்தில் குப்புற விழுந்து அழுத கரோலினா மெரினின் பேட்மின்டன் ராக்கெட்டைக் கையில் எடுத்துக் கொண்டு அவரையும் தூக்கி நிற்கவைத்து கட்டிப் பிடித்து வாழ்த்தினார் சிந்து.

* இந்த ஒரு தருணம், சிந்து தன்னுடைய விளையாட்டினை எவ்வளவு நேசிக்கின்றார் என்பதையும், சக வீரர்களுடன் போட்டி மனப்பான்மை மட்டுமே இருக்க வேண்டும்; அவர்களின் வெற்றியையையும் கொண்டாடும் மனப்பாங்கு இருக்க வேண்டும் என்பதையும் ஒட்டுமொத்த விளையாட்டு உலகுக்கும் புரிய வைத்தார் ’தங்க மங்கை’ சிந்து.

வெற்றியைவிட அன்பே மேலானது:


 

* வெற்றி, தோல்வியைத் தாண்டி சக வீரர்களிடம் அன்பு காட்டுதல்; பல தங்கப் பதக்கங்களை விட உயர்வானது என்று நிரூபித்தார்கள் அமெரிக்காவின் அபே டி-அகோஸ்டினோ மற்றும் நியூசிலாந்தின் நிக்கி ஹேம்பிலின். 5000 மீட்டர் ஓட்டத்தில், தவறுதலாக கீழே விழுந்த நியூசிலாந்தின் நிக்கி ஹேம்பிலினால் அபேயும் ஓட்டக் களத்தில் விழுந்தார். எழுந்து ஓட முடியும் என்றாலும், அடுத்து அபேயும், நிக்கியும் செய்த காரியம்தான் அத்தனை ரசிகர்களையும் உணர்ச்சிப் பெருக்கில் தள்ளியது.  தன்னுடைய வெற்றிக் கனவையே தியாகம் செய்துவிட்டு, விழுந்துகிடந்த நிக்கியை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார் அபே.

அவ்வளவு தூரம் தனக்கு கைக்கொடுத்து அழைத்து வந்த அபேயை வீல்சேரில் அமர உதவினார் நிக்கி. அபேக்கு கிட்டதட்ட 12 மாதங்கள் நீடிக்கும் அளவிற்கான காயம் ஏற்பட்டிருந்தது. பதக்கத்தை விட சக போட்டியாளரின் நலனை அவர்கள் மதித்தது எல்லாரிடமும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது.

‘நான் அபேயை முன்பு சந்தித்தது கூட கிடையாது. ஆனால், எனக்காக அவர் செய்த தியாகம் மிகப்பெரியது. அருமையான பெண்மணி அவர்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார் நிக்கி. ஓட்டக்களத்தில் மனிதநேயத்தையும், நட்பையும் உயர்த்திப் பிடித்ததற்காக அபேக்கும், நிக்கிக்கும் - ஒலிம்பிக் வரலாற்றில் 17 முறை மட்டுமே வழங்கப்பட்டுள்ள - ஸ்போர்ட்ஸ்மென்ஷிப்புக்கான சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரைக் காப்பாற்ற பதக்கம் வென்றவர்:


போலாந்தின் வட்டு எறிதல் வீரரான பியட்டர் மலாஸ்வாச்கி, ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.  அப்பதக்கத்தை உடனடியாக விற்பனை செய்ததாக அறிவித்தவுடன் அரங்கமே அதிர்ந்து போனது. ஆனால், அதற்கு அவர் சொன்ன காரணம் அற்புதமானது. போலாந்தில் கண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிஸ்மான்ஸ்கி என்னும் சிறுவனுக்காக தான் பெற்ற பதக்கத்தை விற்பதாக அறிவித்தார் பியட்டர்.

 ‘நான் களத்தில் தங்கத்திற்காக போராடினேன். ஆனால், இது அதைவிட முக்கியமான ஒன்றிற்காக போராட வேண்டிய தருணம். என்னுடைய வெள்ளிப் பதக்கத்தை வாங்கிக் கொண்டு ஒரு சிறுவனின் உயிர் காக்க உதவுங்கள்’ என்று பியட்டர் வெற்றியையே மனிதத்திற்காக விற்கத் துணிந்து எல்லா ரசிகர்களையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கிவிட்டார்.

களத்தில் காதல் கொண்டாடிய வீரர்:

ஒலிம்பிக்கில் காதலைச் சொன்னால் உடனே க்ரீன் சிக்னல்தான் என்று நீருபித்த ஜோடி கின் ஹய் - ஹி ஸி.

சீனாவின் ஆண்கள் பிரிவு டைவிங் வீரரான கின், பெண்கள் பிரிவில் வெள்ளி வென்ற ஹிஸியிடம் களத்திலேயே காதலைச் சொல்லி ஓகேவும் வாங்கிவிட்டார்.  இதேபோன்று, ஒலிம்பிக் போட்டிகளின் நடுவே மேலும் 3 ஜோடிகள் காதலில் இணைந்தது, ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலிலேயே நனைய வைத்தது.

தி ஸ்மைலிங் ‘போல்ட்’:


100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மின்னல் வேகத்தில் ஓடிய வீரர் உசேன் போல்ட் இறுதிப்புள்ளியைத் தொடும் தூரத்தில் சிந்திய புன்னகை புகைப்படம்தான் சோஷியல் மீடியா வைரல்.

 ‘ஓடுகள மின்னலின் சிரிப்பினையே கண்ணசைக்கும் நேரத்தில் காட்சிக்குள் அடக்கியவர்’ என்று இந்த அபூர்வமான தருணத்தைப் புகைப்படமாக்கிய சிட்னியின் கேமரூன் ஸ்பென்சருக்கு வாழ்த்து மழைகள் குவிந்து வருகின்றன. 

 இவற்றையும் தாண்டி, சைக்கிளிங் போட்டியில் கலந்து கொண்ட அம்மாவிற்காக, போட்டி முடியும்வரை காத்துக் கொண்டிருந்த குட்டிச் சிறுவன், தங்கம் வென்ற மகிழ்ச்சியில் கதறி அழுத வீரர்கள், மயிரிழையில் பதக்கத்தை கைவிட்டு சொல்ல முடியாத சோகத்தில் ஆழ்ந்த விளையாட்டு விசுவாசிகள் என்று அரங்கம் நிறைத்த ரியோ ஒலிம்பிக் 2016, முடிவடைந்துவிட்டது.

இன்னும், இன்னும் அரங்கு நிறைந்த நெகிழ்ச்சிக் கதைகளுக்கு அடுத்த ஒலிம்பிக் வரையில் நாம் காத்திருக்க வேண்டும்!

- பா.விஜயலட்சுமி

அடுத்த கட்டுரைக்கு