Published:Updated:

ஒரு தபால்காரரின் கதை! - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்- 8)

Vikatan Correspondent
ஒரு தபால்காரரின் கதை! - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்- 8)
ஒரு தபால்காரரின் கதை! - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்- 8)
ஒரு தபால்காரரின் கதை! - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்- 8)

அன்பு வாசகர்களே, 

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க : 1  2  3  4  5  6  7 

லிம்பிக் வரலாற்றிலேயே மிகக் கேவலமாக, மோசமாக, அவலமாக நடத்தப்பட்ட போட்டி என்றால், அது 1904 ல், செயின்ட் லூயிஸில் நடந்த ஆண்களுக்கான மாரத்தானே. போட்டி அமைப்பாளர்கள் தங்கள் மூளையை எல்லாம் பேங்க் லாக்கரில் பத்திரமாக வைத்துவிட்டு வந்து நடத்திய போட்டி இது. ஆகஸ்ட் 30 அன்று போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மொத்தம் ஓட வேண்டிய தொலைவு 24.85 மைல்கள். காலையிலேயே தொடங்கியிருந்தால் பரவாயில்லை. போட்டி அமைப்பாளர்கள், மதிய உணவை திருப்தியாக முடித்துவிட்டு வந்து, சாவகாசமாக மதியம் இரண்டரை மணிக்கு போட்டியைத் தொடங்கினர்.

ஒரு தபால்காரரின் கதை! - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்- 8)

கார்வாஜல்

அப்போது வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. போட்டியில் கலந்து கொண்டவர்கள் மொத்தம் 32 பேர். நான்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள். 19 பேர் அமெரிக்கர்கள், 9 பேர் கிரேக்கர்கள், 3 பேர் தென் ஆப்பிரிக்கர்கள் மற்றும் ஒரே ஒரு கியூபரும் உண்டு. அவரது பெயர் ஆண்ட்ரின் கார்வாஜல். அந்த கியூபர், ஒலிம்பிக்கில் கலந்து கொண்டதே பெரிய கதைதான். 1875-ல் பிறந்த கார்வாஜல், தன் சொந்த ஊரில் தபால்காரர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

தினமும் பல மைல்கள் ஓடுவதும், நடப்பதும் அவர் பணி சார்ந்த ஒன்றாகப் பழகிப் போயிருந்தது. ஆகவே, 1904 ல் நடைபெற்ற செயின்ட் லூயிஸ் ஒலிம்பிக்கில், மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள விரும்பினார். அந்த ஏழை தபால்காரருக்கு அரசின் உதவியெல்லாம் கிடைக்கவில்லை. கௌரவம் பார்த்தால் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியாது என்று தோன்றியது. கார்வாஜல், தெருவில் இறங்கிக் கையேந்தினார். மக்களிடம், தான் ஒலிம்பிக்கில் ஓடப்போவதாகச் சொல்லி, யாசகம் கேட்டார். கொஞ்சம் பணம் சேர்ந்தது. அதைக் கொண்டு அமெரிக்காவின் நியூ ஓர்லென்ஸுக்குச் செல்லும் கப்பலில் ஏறினார்.

ஒரு தபால்காரரின் கதை! - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்- 8)

நடுவில் இருப்பவர் தாமஸ் ஹிக்ஸ்

அங்கே வந்திறங்கிய கார்வாஜல், தன் வசம் இருக்கும் சிறிய தொகையைப் பெருக்கும் யோசனையில் பகடை உருட்டினார். சூது கவ்வியது. பணம் பணால். தன்னைத் தானே நொந்துகொள்வதைத் தவிர வேறென்ன செய்ய இயலும்? அடுத்த வேளை உணவுக்குக்கூட காசின்றி நின்ற கார்வாஜல், செயின்ட் லூயிஸ் நோக்கிக் கிளம்பினார். கிடைக்கின்ற வாகனங்களில் ஓசிக்கு ஏற்றிக் கொண்டால் கோடி கும்பிடு. அல்லது சரக்கு ரயில்களில் ரகசியப் பயணம். மற்ற நேரமெல்லாம் நடராஜா சர்வீஸ்தான்..! எப்போதாவது எங்கேயாவது உணவு கிடைத்தால் மகிழ்ச்சி. இப்படியாக செயின்ட் லூயிஸுக்கு வந்து சேர்ந்தார். சோர்வாக ஒலிம்பிக் நடக்கும் பகுதியை அடைந்த கார்வாஜலை, பளு தூக்கும் அமெரிக்க வீரர் ஒருவர் கண்டார். சாப்பிட உணவு கொடுத்து, அன்று இரவு தன் அறையில் தங்க வைத்துக் கொண்டார்.

மறுநாள் மதியம் மாரத்தான் ஆரம்பமான சமயத்தில்,  அந்த கியூப வீரர் தொளதொள முழுநீள கால்சட்டையுடன் மைதானத்தில் வந்து நின்றார். ஆம், அவரிடம் ஓட்டத்துக்கு வசதியான அரைக்கால் சட்டைகூட இல்லை. ஓர் அமெரிக்க வீரர்,  கையில் கத்திரிக்கோலுடன் கார்வாஜலை நெருங்கினார். முழு நீள கால்சட்டையை முட்டிவரை கத்தரித்துவிட்டார். ‘இப்போது ஓடுங்கள். வசதியாக இருக்கும்.’ கார்வாஜல் புன்னகையுடன் நன்றி சொன்னார்.

மாரத்தான் ஆரம்பமானது. முதலில் மைதானத்தை ஐந்து முறை வலம் வந்து, பின் வெளியே பல மைல்கள் ஓடிவிட்டு மீண்டும் மைதானத்தையே வந்தடைய வேண்டும். மைதானத்தை முதல் ஐந்து சுற்று  வலம் வருவதற்குள்ளாகவே ஓரிருவருக்கு நாக்கு தள்ளியது. அதை முடித்துவிட்டு வெளியில் ஓட ஆரம்பித்தார்கள். பெரும்பாலும் மண் சாலைகள். ஓடும் வீரர்களுடன் பயணம் செய்த குதிரைகளும், மோட்டார் கார்களும் புழுதியைக் கிளப்பின. அதுவே வீரர்களுக்குப் பெரும் தொந்தரவாகிப் போனது. அதில் இரண்டு மோட்டார் கார்கள் கட்டுப்பாடின்றி ஒரு பள்ளத்தில் சென்று விழுந்தன. அந்த காரில் வந்தவர்களுக்கு பெருங்காயம்.

வெப்பம், வியர்வை,  புழுதி, மூச்சுத் திணறல். வீரர்கள்,  'தண்ணீர்... தண்ணீர்' என்று தவித்தபோது, ‘இன்னும் சில மைல்கள் தொலைவில் ஒரு கிணறு இருக்கிறது. அங்கே இறைத்துக் குடித்துக் கொள்ளுங்கள்’ என்றார்கள். ஓடிக் கொண்டிருந்த ஒரு வீரர் அரை மயக்கத்தில் சரிந்தார். இன்னொரு வீரர் வாந்தியுடன் விலகினார். இன்னொருவர் வயிற்று வலியில் சுருண்டு கிடந்தார். மைதானத்தில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். 3 மணி நேரம் 13 நிமிடங்கள் கழித்து, பிரெட்ரிக் லார்ஸ் என்ற அமெரிக்க வீரர் மைதானத்துக்குள் நுழைந்தார். ஆரவார வரவேற்பு. புன்னகையுடன் மைதானத்தை வலம் வந்த பிரெட்ரிக், எல்லைக் கோட்டைத் தொட்டார். போட்டி அமைப்பாளர்கள் அவரை உற்சாகமுடன் வாழ்த்தினர். பிரெட்ரிக் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.

பிரெட்ரிக், சத்தம் போட்டு கேலியாகச் சிரிக்க ஆரம்பித்தார். ஏன்?

ஒன்பது மைல்கள் ஓடிக் கொண்டிருக்கும்போதே பாதையில் களைத்து உட்கார்ந்தார் பிரெட்ரிக். ஓடியது போதும் என்றது உள்ளே அதிர்ந்தது இதயம். அங்கே வந்த தனது மேனேஜரின் காரில் ஏறிக் கொண்டார். அடுத்த பதினொரு மைல்கள் அதில் பயணம். கார் பழுதாகி நின்று போனது. கொஞ்சம் யோசித்த பிரெட்ரிக், இறங்கி நடக்க ஆரம்பித்தார். மைதானத்தை நெருங்கியதும் அவருக்குள் இருந்த கோமாளி விழித்துக் கொள்ள, ஓட ஆரம்பித்தார். எல்லைக் கோட்டைத் தொட்டார்.

ஒரு தபால்காரரின் கதை! - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்- 8)

வெள்ளிப் பதக்கம்

‘சும்மா ஜோக்! சீரியஸா எடுத்துக்காதீங்க!’ என்று பிரெட்ரிக் சிரிக்க, அமைப்பாளர்கள் முகத்தில் கடும் கோபம். அந்த மாரத்தான் போட்டியிலிருந்து பிரெட்ரிக் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவருக்குப் பந்தயங்களில் கலந்துகொள்ள வாழ்நாள் தடை விதிக்கப்பட்டதும், மன்னிப்பு கேட்டு கெஞ்சியதும், விலக்கப்பட்டதும் தனிக்கதை. தாமஸ் ஹிக்ஸ் என்ற அமெரிக்க வீரர் மாரத்தான் பாதையில் தட்டுத் தடுமாறி ஓடிக் கொண்டிருந்தார்.

தாமஸின் மேனேஜர் அவருக்கு முட்டை வெள்ளைக் கருவையும், ஒருவித ஊக்க மருந்தையும் (Strychnine) வாயில் ஊற்றினார். அதனால் முக்கால்வாசி தூரத்தைக் கடந்த தாமஸ், மீண்டும் தள்ளாடி விழப் பார்த்தார். மேனேஜர் இன்னும் கொஞ்சம் மருந்தை வாயில் ஊற்றினார். அரை மயக்க நிலையில், இரண்டு உதவியாளர்கள் கைத்தாங்கலாகப் பிடித்திருக்க, மைதானத்துக்குள் தள்ளாட்டத்துடன் வந்த தாமஸ், எல்லைக் கோட்டைத் தொட்டார் (3 மணி, 28 நிமிடம், 53 நொடி). அடுத்த நொடியே மயங்கி விழுந்தார்.

ஒரு தபால்காரரின் கதை! - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்- 8)

தாமஸ் ஹிக்ஸ்


இன்னும் கொஞ்சம் மருந்தைக் கொடுத்திருந்தால் ஆள் காலியாகி இருப்பார் என்று தாமஸுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கடிந்து கொண்டார்கள். ஊக்க மருந்துத் தடைகள் எல்லாம் இல்லாத அந்தக் கால ஒலிம்பிக் மாரத்தானில்,  தாமஸே தங்க மகனாக அறிவிக்கப்பட்டார். அல்பர்ட் கோரே மற்றும் ஆர்தர் நியூட்டன் என்ற இரு அமெரிக்கர்கள் முறையே வெள்ளி, வெண்கலம் பெற்றனர்.

ஒரு தபால்காரரின் கதை! - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்- 8)

ஜேன் மாசிஅனி, லென் டாவ்


இந்த ஒலிம்பிக்கில்தான் கருப்பு ஆப்பிரிக்கர்கள் முதன் முதலாக கலந்து கொண்டனர். அதில் லென் டாவ், ஜேன் மாசிஅனி என்ற இரண்டு தென் ஆப்பிரிக்க வீரர்கள் இந்த மாரத்தானில் ஓடினர். லென்,  சுணக்கமின்றி சீரான வேகத்தில்தான் ஓடிக் கொண்டிருந்தார். ஆனால், எங்கிருந்தோ வந்த நாய் ஒன்று, அவரைத் துரத்த ஆரம்பித்தது. தப்பிப்பதற்காக வேறெங்கோ ஓடி ஒளிந்து, மீண்டும் ஓட்டப்பாதைக்குத் திரும்பியதில் நேரம் வீணாகிப் போனது. லென் ஒன்பதாவது இடம் பிடித்தார். ஜேனுக்கு பன்னிரெண்டாவது இடம். இந்த மாரத்தானில் ஓடிய 32 பேரில் 14 பேர் மட்டுமே முழுத் தொலைவையும் கடந்தனர்.

சரி, நமது கார்வாஜல் என்ன ஆனார்?

கியூபாவிலிருந்து தொடர் பயணம். பல நாட்கள் சரியாக சாப்பிடாததால் உடலில் சக்தியின்மை. பசி. இதையெல்லாம் மீறி உற்சாக வேகத்தில், தன் பயணப் பாதையில் ஒழுங்காக ஓடி வந்து கொண்டிருந்தார் கார்வாஜல். வழியில் ஆப்பிள் மரமொன்று தென்பட்டது. ஆப்பிள்களைப் பறித்து கடித்தார். அவை ஆதாம் காலத்து ஆப்பிள்கள்போல. அழுகிப் போயிருந்தன. பரவாயில்லை. பசிக்கிறதே. கொஞ்ச நேரத்தில் வயிறு கடுமையாக வலிக்க ஆரம்பித்தது.

ஒரு தபால்காரரின் கதை! - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்- 8)

கார்வாஜல் ஓர் ஓரத்தில் வயிற்றைப் பிடித்தபடி சுருண்டார். களைப்பு. உறக்கம் ஆட்கொண்டது. விழித்துப் பார்த்தபோது, மாரத்தானில் ஓடிக் கொண்டிருக்கும் நினைவு உலுக்கியது. ஏதோ ஒரு வேகத்தில் மீண்டும் எழுந்து ஓடினார். மைதானத்தை அடைந்தபோது அங்கே ஓடி முடித்த அமெரிக்க வீரர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை ரசிகர்கள் சூழ்ந்து வாழ்த்திக் கொண்டிருந்தனர். ‘உங்களுக்கு நான்காவது இடம்’ என்று ஓர் அமைப்பாளர் வந்து சொன்னார். கார்வாஜலுக்குள் சோகம் பெருக்கெடுத்தது.

கியூபாவுக்குத் திரும்பிய கார்வாஜலுக்கு அங்கே நல்ல வரவேற்பும் மரியாதையும் கிடைத்தன. கியூபா அரசு, கார்வாஜலுக்கு உதவி செய்ய முன்வந்தது. அதற்குப் பின் கார்வாஜல் சர்வதேச அளவில் சில குறிப்பிடத்தகுந்த வெற்றிகளை கியூபாவுக்காகப் பெற்றுத் தந்தார். வருமானத்துக்காக தபால்காரராக அவரது ஓட்டமும் தொடர்ந்தது. ஆனாலும் கைக்கெட்டிய ஆப்பிளால் அன்று கிட்டாமல் போன அந்த ஒலிம்பிக் பதக்கம், மீண்டும் அவர் கையில் சேரவே இல்லை.

(டைரி புரளும்....)

- முகில்