Published:Updated:

ஒலிம்பிக்ஸ் டைரி குறிப்புகள்: ஒரு பெண் - ஓர் ஆண் - மாரத்தான்! | அத்தியாயம் 5

ஒலிம்பிக்ஸ் ( Vikatan )

ஏதென்ஸுக்குச் செல்லும் வழியில் ஓட்டப்பந்தய வீரர் ஒருவரைச் சந்தித்தாள் ரெவிதி. அவளது நிலைமையைக் கேட்ட அந்த வீரர் சில ஆலோசனைகளை வழங்கினார். ‘நீ மாரத்தான் பந்தயத்தில் ஓடு. பெயர், புகழ், பணம், வேலை எல்லாம் கிடைக்கும்.’ ரெவிதி, அந்த வார்த்தைகளை நம்பினாள்.

ஒலிம்பிக்ஸ் டைரி குறிப்புகள்: ஒரு பெண் - ஓர் ஆண் - மாரத்தான்! | அத்தியாயம் 5

ஏதென்ஸுக்குச் செல்லும் வழியில் ஓட்டப்பந்தய வீரர் ஒருவரைச் சந்தித்தாள் ரெவிதி. அவளது நிலைமையைக் கேட்ட அந்த வீரர் சில ஆலோசனைகளை வழங்கினார். ‘நீ மாரத்தான் பந்தயத்தில் ஓடு. பெயர், புகழ், பணம், வேலை எல்லாம் கிடைக்கும்.’ ரெவிதி, அந்த வார்த்தைகளை நம்பினாள்.

Published:Updated:
ஒலிம்பிக்ஸ் ( Vikatan )

பால்யம் முதல் இளமை வரை வறுமை சூழ் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த அந்தப் பெண்ணின் பெயர், ஸ்டமாடா ரெவிதி. கிரீஸில் பிறந்தவள். இரண்டு குழந்தைகளுக்குத் தாய். முதல் குழந்தை இறந்திருந்தது. ’இரண்டாவது குழந்தைக்கு சுமார் ஒன்றரை வயது. ஏதென்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறதாமே, அங்கே சென்றால் ஏதாவது வேலை கிடைக்கும்’ என்று தன் ஊரிலிருந்து நடந்தே கிளம்பினாள் அவள்.

ஒலிம்பிக்ஸ் டைரி குறிப்புகள்: ஒரு பெண் - ஓர் ஆண் - மாரத்தான்! | அத்தியாயம் 5

ஏதென்ஸுக்குச் செல்லும் வழியில் ஓட்டப்பந்தய வீரர் ஒருவரைச் சந்தித்தாள் ரெவிதி. அவளது நிலைமையைக் கேட்ட அந்த வீரர் சில ஆலோசனைகளை வழங்கினார். ‘நீ மாரத்தான் பந்தயத்தில் ஓடு. பெயர், புகழ், பணம், வேலை எல்லாம் கிடைக்கும்.’ ரெவிதி, அந்த வார்த்தைகளை நம்பினாள்.

‘மாரத்தான்’ என்ற ஊரிலிருந்து 40கிமீ ஓடி பான்எதெனிக் மைதானத்தை அடைய வேண்டும். போட்டியில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். பெண்கள் அதற்கெல்லாம் லாயக்கற்றவர்கள். அவர்களால் இயலாது என்பதே 1896ன் ஒலிம்பிக் விதி. பண்டைக்காலத்தின் ஒலிம்பிக்கில்கூட அப்படித்தான் கட்டுப்பாடுகள் இருந்தன. ஒலிம்பிக் போட்டிகளைப் பார்க்கக்கூட பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மீறி பார்க்க வருபவர்களுக்கு கிரேக்கர்கள் மரண தண்டனை விதித்ததாகச் சொல்கிறது வரலாறு. 

ரெவிதி, தடைகளை மீற முடிவு செய்தாள். போட்டி தொடங்கவிருந்த மாரத்தான் என்ற ஊருக்கு நடந்தே சென்றாள் (ஏப்ரல் 9). அங்கே ஆண் வீரர்கள் மறுநாள் போட்டிக்காக தயாராகிக் கொண்டிருந்தார்கள். தானும் மாரத்தான் போட்டியில் கலந்துகொள்ளப் போவதாக உரக்கக் கூறினாள். ஆண்களைத் தன்னால் எளிதாக முந்திவிட முடியும் என்று அவளுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால், அங்கிருந்த அத்தனைக் கண்களும் அவளை ஏளனமாகப் பார்த்தன. அத்தனை உதடுகளும் கேலியாகச் சிரித்தன.

‘நீ ஓடி முடித்து மைதானத்தை அடையும்போது ஒருவரும் அங்கே இருக்க மாட்டார்கள். மைதானமே காலியாகக் கிடக்கும்’ என்று உரக்கச் சிரித்தான் ஒருவன். ‘கிரேக்கப் பெண்களைக் கேலி செய்யாதே’ என்று தன் பெரிய கண்களில் கனல் காட்டினாள் ரெவிதி. அந்த ஊரின் மேயர், ரெவிதி அன்று இரவு தங்குவதற்கு இடம் கொடுத்தார்.

ஏப்ரல் 10, 1896. மாரத்தான் தொடங்குவதற்கு முன்பு அங்கே தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்தது. ஆண் வீரர்களை ஆசிர்வதித்த மதகுரு, ரெவிதியை நிராகரித்தார். போட்டி அமைப்பாளர்களும் அவளுக்கு அனுமதி மறுத்தனர். ‘அமெரிக்க வீராங்கனைகளோடு இன்னொரு போட்டி இருக்கிறது. அதில் நீ ஓடு’ என்று பொய் சொல்லி அவளை ஏமாற்றப் பார்த்தனர். ரெவிதி, எதையும் சட்டை செய்யவில்லை. ஒரு காகிதத்தில் மாரத்தான் ஊரின் மேயர், அங்குள்ள நீதிபதி, ஓர் ஆசிரியர் மூவரிடமும் சாட்சிக் கையெழுத்து வாங்கினாள். அதில் அவள் மாரத்தானிலிருந்து ஓட ஆரம்பித்த விவரம் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒலிம்பிக்ஸ் டைரி குறிப்புகள்: ஒரு பெண் - ஓர் ஆண் - மாரத்தான்! | அத்தியாயம் 5

ஜோன் பெனாய்ட்

காலை 8 மணி. நிதானமான வேகத்தில் சுறுசுறுப்பாக ஓடத் தொடங்கினாள். ஒவ்வொரு ஊராகக் கடந்தாள். கொஞ்சம்கூட களைத்து உட்காரவில்லை. தன்னால் முழு தூரத்தையும் கடக்க முடியும் என்ற நம்பிக்கை, அவளை உத்வேகத்துடன் தொடர்ந்து ஓடச் செய்தது. பகல் 1.30 மணிக்கு ஏதென்ஸின் பான்ஏதெனிக் விளையாட்டரங்கை அடைந்தாள். ஐந்தரை மணி நேரத்தில் 40 கிமீ தொலைவு. ஆனால், ராணுவ வீரர்கள் அவளை அரங்கத்துக்குள் அனுமதிக்க மறுத்தார்கள். அவளது ஓட்டத்தைப் பார்த்த பலரிடமும் சாட்சிக் கையெழுத்து வாங்கிக் கொண்டு வந்து, அதிகாரிகளிடம் போராடினாள். ஒலிம்பிக் கமிட்டியினரைச் சந்திக்க முயற்சிகளை மேற்கொண்டாள். என்னென்னவோ முயற்சி செய்தாள். ஆனால், கடைசி வரை ரெவிதியின் மாரத்தான் சாதனை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்பது வரலாற்றுச் சோகம்.

நவீன ஒலிம்பிக்கில் தடைகளைத் தாண்டி அடியெடுத்து வைத்த முதல் பெண் வீராங்கனை என்ற அளவில் ரெவிதி முக்கியத்துவம் பெறுகிறாள். 1896ல் ரெவிதியின் தைரியமான செயல்பாட்டினால்தான் அடுத்த ஒலிம்பிக்கில் விதிகள் தளர்ந்தன. 1900 பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

ரெவிதி ஓடி, சுமார் 88 ஆண்டுகள் கழித்து, 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் கோடைகால ஒலிம்பிக்ஸில்தான் பெண்கள் மாரத்தான் சேர்க்கப்பட்டது. அதில் அமெரிக்காவின் ஜோன் பெனாய்ட் என்ற அமெரிக்க வீராங்கனை, 2 மணி 24 நிமிடங்களில் கடந்து தங்கம் வென்றார்.

ரெவிதிக்கு வாழ்க்கையில் எந்தவிதத்திலும் கைகொடுக்காத மாரத்தான், ஆண் வீரர் ஒருவரது வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. ஸ்பைரைடோன் லூயிஸ் என்பது அவரது பெயர். விளையாட்டு வீரர் என்பதுகூடத் தவறுதான். பிழைப்புக்காக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு தண்ணீர் சுமந்து சென்று விற்றுக் கொண்டிருந்தார். வண்டியெல்லாம் கிடையாது. ஓட்டமும் நடையுமாக மனிதத் தண்ணீர் வண்டியாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தார் லூயிஸ்.

ஒலிம்பிக்ஸ் டைரி குறிப்புகள்: ஒரு பெண் - ஓர் ஆண் - மாரத்தான்! | அத்தியாயம் 5

அசராமல் பல மைல்கள் நடப்பதும் ஓடுவதும் அவருக்குப் பழகிப்போன ஒன்று. ஆகவே மாரத்தான் போட்டியில் கலந்துகொள்ள முடிவெடுத்தார். 1896, ஏப்ரல் 10 அன்று காலை மாரத்தான் ஓட்டம் ஆரம்பமானது. மொத்தம் 17 ஆண்கள் ஓடினார்கள். லூயிஸ் உள்பட 13 பேர் கிரேக்கர்கள். மீதி 4 பேர் வேறு தேசத்தைச் சேர்ந்தவர்கள். அதற்கு முன்பு நடந்த குறைந்த தூர ஓட்டப்பந்தயங்களிலெல்லாம் கிரீஸுக்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை என உள்ளூர் மக்கள் சோகத்தில் இருந்தார்கள். மாரத்தான் ஓட்டம் என்பது கிரேக்கத்தின் பெருமைக்குரிய அடையாளம். அதில் ஒரு கிரேக்க வீரர் வெல்லாவிட்டால் ஒலிம்பிக் நடத்தும் நமக்கு பெருத்த அவமானமாகி விடும் என்றும் தவித்தார்கள்.

இந்த மாதிரியான அழுத்தங்கள் எதுவும் இன்றி சீரான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தார் 23 வயது லூயிஸ். ஓடும் வழியில் பைகெர்மி என்ற ஊரை அடைந்தார். அது அவளுடைய கேர்ள் ஃப்ரெண்ட் இருக்கும் ஊர். வந்ததுதான் வந்துவிட்டோம், டார்லிங்கை ஒருமுறை பார்த்துவிட்டுச் சென்றுவிடலாம் என்று அவளது வீட்டுக்குள் நுழைந்தார். அன்பு வரவேற்பு. அவள் தன் காதலருக்கு நாலைந்து ஆரஞ்சு சுளைகள் உரித்துக் கொடுத்தாள். காதலி கைப்பட்டதல்லவா. இனிமையாக இருந்தது. லூயிஸின் வருங்கால மாமனார் அங்கு வந்தார். ‘மாப்ள! இதைக் குடிச்சிட்டு தெம்பா ஓடுங்க!’ என்று ஒரு கிளாஸில் காக்னக் (Cognac, ஒரு வகை பிராந்தி) கொடுத்தார். மடக்கென வாங்கிக் குடித்துவிட்டு, காதலியுடன் கிக்கான பார்வைகளைப் பரிமாறிவிட்டு, மீண்டும் ஓட ஆரம்பித்தார் லூயிஸ்.

ஒலிம்பிக்ஸ் டைரி குறிப்புகள்: ஒரு பெண் - ஓர் ஆண் - மாரத்தான்! | அத்தியாயம் 5

முன்னே எத்தனை பேர் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் அவர் அலட்டிக் கொள்ளவே இல்லை. ‘யார் முதல்ல ஓடுறாங்க என்பது முக்கியமில்லை. கடைசில யார் முதல்ல வர்றாங்க என்பதுதான் முக்கியம்’ என்ற பன்ச் டயலாக் அப்போது அவருக்குள் தோன்றியிருக்கலாம்.

அல்பின் என்ற பிரெஞ்சு வீரர் முதலில் ஓடிக் கொண்டிருந்தார். அவர் நல்ல ஓட்டக்காரராக அறியப்பட்டவர். ஆனால், 32 கிலோ மீட்டர் தொலைவில் அவருக்கு நாக்கு தள்ளியது. இயலாமல் தரையோடு படுத்துவிட்டார். சிறிது நேரத்தில் அவரை ஒருவர் முந்திச் சென்றார். ஆஸ்திரேலியர். எட்வின் ஃப்லேக். அந்த ஒலிம்பிக்கில் 800மீ, 1500மீ பந்தயங்களில் முதலிடம் பிடித்திருந்தார் எட்வின். அவருக்குப் பின்னே வெகுதூரம் தள்ளிதான் லூயிஸ் வந்து கொண்டிருந்தார்.

ஒலிம்பிக்ஸ் டைரி குறிப்புகள்: ஒரு பெண் - ஓர் ஆண் - மாரத்தான்! | அத்தியாயம் 5

பான்ஏதெனிக் மைதானத்தில் கிரேக்க ரசிகர்கள் நிலைகொள்ளாமல் காத்திருந்தனர். கிரேக்க வீரர்தான் முதலாவது வரவேண்டும்; வேறு யாரும் வந்துவிடக்கூடாது.  அந்த நேரத்தில் மாரத்தான் வீரர்களை சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த ஒருவர் வேகவேகமாக மைதானத்துக்குள் புகுந்தார். ‘ஆஸ்திரேலிய வீரர்தான் முன்னணியில் இருக்கிறார்’ என்று அவர் சொல்ல, ரசிகர்கள் முகங்கள் எல்லாம் தொங்கிப் போயின. கொஞ்ச நேரத்தில் இன்னொரு சைக்கிள்காரர் வேகமாக வந்தார். தன் அடிவயிற்றிலிருந்து கத்தினார். ‘லூயிஸ் வந்து கொண்டிருக்கிறார்!’

நீண்ட தூரம் ஓடிப் பழக்கமில்லாத ஆஸ்திரேலியரான எட்வின் ஓட்டத்தை முடிக்க இயலாமல் சோர்ந்து விழுந்தார். அவரை நிதானமாக முந்திய லூயிஸ், பான்ஏதெனிக் மைதானத்துக்குள் நுழைந்தார். மைதானமே ஆர்ப்பரித்தது - ‘Hellene! Hellene!’ என்று. (கிரேக்கன்! கிரேக்கன்! என்று அர்த்தம்.) லூயிஸ், எல்லைக் கோட்டைத் தொட்டு நிமிர்ந்தார். ரசிகர்கள் ஆரவாரத்துடன் தங்கள் தொப்பிகளைக் காற்றில் பறக்க விட்டனர். கிரீஸின் அரசர் முதலாம் ஜார்ஜ், அரசவை முக்கியஸ்தர்கள், ஒலிம்பிக் கமிட்டி அதிகாரிகள், ஊர்ப் பெரியவர்கள், மக்கள் என எல்லோரும் கூடி பாராட்டில் திளைக்கச் செய்தனர். அந்த மாரத்தானில் இரண்டாவது, மூன்றாவது இடங்களையும் கிரேக்க வீரர்களே பிடித்தனர்.

ஏதென்ஸின் ஹீரோவாக உயர்ந்தார் லூயிஸ். பரிசுப் பொருள்கள், பணம் எல்லாம் குவிந்தன. ‘நம்ம கடைக்கு வாங்க! உங்களுக்கு நகைகளை பரிசா தர்றேன்’ என்றார் ஒரு நகைக் கடைக்காரர். ‘நம்ம சலூன்ல உங்க ஆயுசுக்கும் கட்டிங் - ஷேவிங் இலவசம்!’ என்றார் ஒரு நாவிதர். அரசரும் லூயிஸிடம் கேட்டார். ‘உனக்கு என்ன பரிசுப் பொருள் வேண்டுமானாலும் கேள்! உடனே ஏற்பாடு செய்கிறேன்.’  சற்றே யோசித்து, கொஞ்சம் தயக்கத்துடன் லூயிஸ் கேட்ட பரிசு, ‘என் தொழிலுக்கு உபயோகப்படுற மாதிரி, ஒரு தண்ணீர் வண்டியும், அதை இழுக்க கழுதைங்களும் வேணும்.’

1896 ஏதென்ஸ் ஒலிம்பிக் - வெளிச்சத் துளிகள்

# தடகளம், பளுதூக்குதல், வாள் சண்டை, மல்யுத்தம், ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல், துப்பாக்கிச் சுடுதல், சைக்கிளிங், டென்னிஸ் ஆகிய ஒன்பது போட்டிகள் முதலாவது ஒலிம்பிக்கில் நடத்தப்பட்டன. கலந்து கொண்ட மொத்த வீரர்களின் எண்ணிக்கை 241.

# ஜிம்னாஸ்டிக்கில் எட்டு பிரிவுகளில் நடந்த போட்டிகளில் ஐந்தில் ஜெர்மனி அணி வென்றது. கிரீஸின் சார்பாக கலந்து கொண்ட ஜிம்னாஸ்டிக் வீரர்களில் ஒருவர் டிமிட்ரியாஸ் லாண்ட்ரோஸ். அப்போது அவரது வயது, 10 வருடம் 218 நாள்கள். மிகக் குறைந்த வயதில் ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட வீரர் என்ற சாதனை இன்றும் இவர் வசமே உள்ளது.

# ஆரம்ப காலத்தில் தங்கப் பதக்கம் வழங்கப்படாவிட்டாலும், பின்னர் முதலிடம் தங்கம், இரண்டாமிடம் வெள்ளி, மூன்றாமிடம் வெண்கலம் என்று ஒலிம்பிக் சாதனைப் பட்டியல் அதிகாரபூர்வமாக மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி 1896 ஒலிம்பிக்கில் அமெரிக்கா 11 தங்கம், 7 வெள்ளி, 2 வெண்கலம் என 20 பதக்கங்களை வென்றிருந்தது. ஆனால், கிரீஸ் 10 தங்கம், 17 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 46 பதக்கங்களை வென்றிருந்தது.

(டைரி புரளும்.)

அடுத்த அத்தியாயம்- ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டும் இருந்தது!

- முகில்